தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கவேண்டுமென்பதில் சர்வதேசம் உறுதியாக இருக்கிறது!

செவ்வாய் டிசம்பர் 07, 2021

தமிழ் மக்கள் மீது அமெரிக்கா தற்பொழுது கொண்டுள்ள கரிசனையை விட எதிர்காலத்தில் அதிகமாக இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.குறிப்பாக தமிழர்கள் மீதான அமெரிக்காவின் கரிசனை முன்னரை விட அதிகரித்திருக்கிறது. அந்த அடைப்படையில் தமிழர்கள் மீதான அமெரிக்காவின் வகிபங்கு அதிகரிக்கும் சாத்தியங்கள் அதிகமாகவே இருக்கிறது என்று தெரிவித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்,அரசியல் தீர்வொன்று இல்லாமல் தொடர்ந்து 

பயணித்துக்கொண்டிருந்தால் வடக்கு,கிழக்கில் தமிழர்களுடைய இருப்பு இல்லாமல் போகும் நிலைமை அதிகமாக காணப்படுகிறது.நாளுக்கு நாள் தமிழர்களுடைய இருப்புக்கான அச்சுறுத்தல்கள் அதிகரித்து 

கொண்டிருக்கின்றன.ஆகவே அரசியல் தீர்வையும் பொறுப்புக்கூறலோடு சமாந்தரமாக எடுக்கவேண்டிய தேவையை சர்வதேசத்துக்கு தெளிவுபடுத்தியிருக்கின்றோம் என்றும் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயங்கள் குறித்து பரந்த அளவிலான கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்ளும் நோக்கில் சுமந்திரன் தலைமையிலான சட்ட வல்லுனர்கள் குழுவொன்று அமெரிக்காவிற்கு சென்று பேச்சுக்களில் ஈடுபட்டது.மேலும் இந்த விஜயத்தில் கனடா,பிரித்தானியா ஆகிய நாடுகளுக்கும் குறித்த குழு விஜயம் செய்து பல தரப்பட்டவர்களுடன் சந்திப்புகளை நடத்திவிட்டு நாடு திரும்பியுள்ளது. இந்நிலையில்,இந்த பயணத்தில் இடம்பெற்ற பேச்சுக்கள்,சந்திப்புகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்   நேர்காணலிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

உங்களுடைய அமெரிக்க விஜயம் எவ்வாறு அமைந்தது.அங்கு பேசப்பட்ட விடயங்களில் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வில் அமெரிக்க கொண்டுள்ள கரிசனையை நீங்கள் எவ்வாறு புரிந்துகொண்டீர்கள்?

பதில்; - ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2012 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்கா தலைமையிலான இணை அனுசரணை குழு இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்துக்கான பொறிமுறை ஒன்றை உருவாக்கி தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறது.அந்த அடிப்படையில் அமெரிக்காவின் தலைமையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதால் அந்த நாட்டுக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது.அதேபோல் பொறுப்புக்கூறல் விடயத்தில் வெவ்வேறு விசாரணைகள் நடைபெற்று தற்பொழுது சாட்சியங்களை பாதுகாப்பது என்ற பொறிமுறை ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

நல்லிணக்கம் என்று வரும்பொழுது,அதில் புதிய அரசியலமைப்பு ஒன்றினூடாக அதிகாரப்பகிர்வை உறுதி செய்வது தான் மீள நிகழாமைக்கான உத்தரவாதம் என்று இலங்கை அரசாங்கம் ஏற்கனவே வாக்குறுதி கொடுத்திருக்கின்றது.


அதற்கமைய கடந்த 2016 ஆம் ஆண்டு புதிய அரசியலமைப்பு உருவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் அந்த விடயம் நிறைவு  பெற்றிருக்கவில்லை.2016 இல் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு நிபுணர் குழுவிடம் எங்களுடைய திட்டங்களை முன்வைத்திருந்தோம். அதேபோல்,அவர்களுடன் நாங்கள் பல தடவைகள் சந்திப்புகளை நடத்தியிருந்தோம்.அவ்வேளையில் அதிகாரப்பகிர்வின் ஊடாக ஒரு அரசியல் தீர்வு வேண்டுமென்பதை நாங்கள் வலியுத்தியிருந்தோம்.இந்நிலையில் 2019 இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்கு பின்னர் புதிய அரசாங்கம்  நாங்கள் வலியுறுத்தி வந்த அதிகாரப்பகிர்வின் மூலமாக அரசியல் தீர்வு வேண்டும் என்ற விடயத்தை ஒதுக்கிவைத்துவிட்டு ஒரு நாடு ஒரு சட்டம் என்று ஒரு சட்டத்தை உருவாக்கி அதன் மூலம் நாடு முழுவதும் ஒரே மாதிரியான சட்டத்தை உருவாக்கவேண்டும் என்ற தவறான போக்கில் பயணிக்க ஆரம்பித்திருக்கிறது.

ஆகவே தான் அதிகாரப் பகிர்வின் மூலமாக அரசியல் தீர்வு என்ற எண்ணத்துக்கு ஆதரவான நாடுகளை ஒன்று சேர்க்கும் பணிகளை நாங்கள் முன்னெடுக்கின்றோம்.அதில் பிரதானமான நாடு அமெரிக்கா என்ற  அடிப்படையில் இந்த விடயத்தில் சர்வதேச கரிசனை காட்டப்படவேண்டுமென்றும் அதற்கு  அமெரிக்காதான் தலைமை வகிக்க வேண்டுமென்றும் நாங்கள் அமெரிக்காவிடம் கேட்டுக்கொண்டிருக்கின்றோம்.

எதிர்வரும் காலத்தில் தமிழ் மக்களுடைய விவகாரங்களில் அமெரிக்காவின் வகிபங்கு எவ்வாறு இருக்கும் என எதிர்பார்க்கிறீர்கள்?.

பதில்; - தமிழ் மக்கள் மீது அமெரிக்கா தற்பொழுது கொண்டுள்ள கரிசனையை விட எதிர்காலத்தில் அதிகமாக இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.குறிப்பாக தமிழர்கள் மீதான அமெரிக்காவின் கரிசனை முன்னரை விட அதிகரித்திருக்கிறது.அந்த அடைப்படையில் தமிழர்கள் மீதான அமெரிக்காவின் வகிபங்கு அதிகரிக்கும் சாத்தியங்கள் அதிகமாகவே இருக்கிறது.

ஏனென்றால், அரசியல் தீர்வொன்று இல்லாமல் தொடர்ந்து பயணித்துக்கொண்டிருந்தால் வடக்கு,கிழக்கில் தமிழர்களுடைய இருப்பு இல்லாமல் போகும் நிலைமை அதிகமாக காணப்படுகிறது.நாளுக்கு நாள் தமிழர்களுடைய இருப்புக்கான அச்சுறுத்தல்கள் அதிகரித்து கொண்டிருக்கின்றன.ஆகவே அரசியல் தீர்வையும் பொறுப்புக்கூறலோடு சமாந்தரமாக எடுக்கவேண்டிய தேவை எங்களுக்கு இருக்கிறது. அந்த அடிப்படையில் இவ்விரு விடயங்களையும் அவசரமாக செய்யவேண்டியிருப்பதாக எங்களுடைய அமெரிக்க பயணத்தின் போது தெளிவாக எடுத்துக்கூறியிருக்கின்றோம்.

நாங்கள் முன்வைத்துள்ள விடயங்களை கருத்தில் எடுத்து இனிமேல் தான் அமெரிக்க பிரதிநிதிகள் ஒரு கொள்கையை வகுப்பார்கள்.அந்த கொள்கைகள் வகுத்ததன் பிற்பாடு தான்   எவ்வாறான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்கள் என்பதை  எங்களுக்கு அறிவிப்பார்கள்.

கனடாவிலும் நீங்கள் சில சந்திப்புகளை மேற்கொண்டிருந்தீர்கள். குறிப்பாக கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்புகள் மேற்கொண்டிருந்தீர்கள்.இந்த சந்திப்புகளில் அவர்கள் எவ்வாறான நிலைப்பாட்டை கொண்டிருந்தார்கள்?

பதில்;-  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இணை அனுசரணை நாடுகளில் கனடாவும் ஒரு உறுப்பு நாடு என்ற அடிப்படையில் அவர்களுடனும் நாங்கள் சந்திப்புகளை நடத்த வேண்டிய தேவை இருக்கிறது.அந்த அடிப்படையில்,கனடாவில் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தோம். அதேபோல்,கனடா நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேருடனும் சந்திப்புகளை நடத்தியிருந்தோம்.அவர்களிடத்தில் நாட்டின் தற்போதைய நிலைவரம் மற்றும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் சம்பந்தமாக தெளிவாக எடுத்துக்கூறியிருந்தோம். முக்கியமாக கனடா அரசாங்கத்தின் ஆதரவும் அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் எங்களுடைய இந்த பயணத்துக்கு மிகவும் அத்தியாவசியமாக தேவைப்படுகிறது.எனவே, அமெரிக்காவின் கூடுதலான ஆதரவுடன் தமிழ் மக்கள் தொடர்பான ஒரு திட்டம் ஆரம்பிக்கப்பட்டால் அதற்கு ஆதரவாக பல நாடுகள் ஒத்துழைக்கவேண்டியது அவசியம்.அந்த அடிப்படையில் கனடா அதில் முக்கியமான நாடு என்ற அடிப்படையில் எங்களுடைய பேச்சுக்களை நடத்தியிருக்கின்றோம்.

உங்களுடைய இந்த விஜயத்தில் புலம்பெயர் சமூகத்தினருடனும் உங்களுடைய சந்திப்புகள் அமைந்திருந்தன.அவர்களுடைய நிலைப்பாடு என்னவாக இருக்கிறது.

பதில் -;நாங்கள் தற்சமயம் எடுத்துக்கொண்ட விடயம் சம்பந்தமாக புலம்பெயர் சமூகத்தினரிடையில் பெரும் ஆதரவு இருக்கிறது என்பதை நாங்கள் சந்தித்த சந்திப்புகளின் மூலம் வெளிப்பட்டிருந்தது.அரசியல் தீர்வு சம்பந்தமாக இந்தியாவை முன்னிலைப்படுத்தி தான் நாங்கள் எங்களுடைய பயணத்தை ஆரம்பித்திருக்கின்றோம்.அந்த விடயத்தில் இந்தியாவுக்கு பக்கபலமாக அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் ஆதரவை வழங்குவது மிக அத்தியாவசியமாகும்.அதற்கு புலம்பெயர் சமூகம் தங்களுடைய ஒத்துழைப்புக்களை வழங்குவதாக எங்களுக்கு வாக்குறுதியளித்திருக்கிறார்கள்.அந்த அடிப்படையில் நாங்கள் சென்ற நாடுகளில் புலம்பெயர் சமூகத்தினர் தங்களுடைய பூரணமான ஆதரவை வழங்கியிருந்தார்கள்.

கேள்வி;அரசியல் தீர்வு விடயத்தை தாண்டி சமகாலத்தில் வடக்கு,கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகள் சம்பந்தமாக இந்த சந்திப்புகளில் கரிசனை கொள்ளப்பட்டதா?

பதில் - ;தமிழ் மக்கள் வடக்கு,கிழக்கில் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே அரசியல் தீர்வு விரைவில் கிடைக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெறும் சம்பவங்களை நிறுத்தவேண்டுமாகவிருந்தால்  அதற்கு அரசியல் தீர்வு அவசியமானதாகும்.வடக்கு,கிழக்கில் இடம்பெறும் நில அபகரிப்புகள் ,பயங்கரவாத தடுப்பு சட்டத்தை மீண்டும் அமுல்படுத்துவது சம்பந்தமாகவும் நாங்கள் இந்த சந்திப்புகளில் எடுத்து கூறியிருக்கின்றோம்.

அரசியல் தீர்வு ஒன்று ஏற்படாமல் இருக்கும்வரை மேற்படி பிரச்சனைகள் தொடர்ந்தும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கப்போகிறது.

பிரித்தானியாவில் மாநில வெளிவிவகார பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகார அமைச்சர் லோர்ட் தாரிக்கை , சந்தித்திருந்தீர்கள்.அந்த சந்திப்பில் தமிழர் விடயத்தில் பிரித்தானியாவின் நிலைப்பாடு என்னவாக இருந்தது?
 
பதில்;அமெரிக்காவுடன் நாங்கள்(தமிழர்கள்)இணைந்து செயற்படுவது சம்பந்தமாகவும் அரசியல் தீர்வு சம்பந்தமாக இந்தியாவுடன் நாங்கள் பேசி செயற்படும் விடயத்தில் அனைவரினதும் பங்களிப்பு இருக்கவேண்டுமென பிரித்தானியாவின் மாநில வெளிவிவகார பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகார அமைச்சரிடம் கேட்டிருந்தோம்.அமெரிக்கா ஒரு குறித்த பாத்திரத்தை ஏற்றுக்கொள்ளுமாகவிருந்தால், பிரித்தானியா ஏனைய அனைத்து நாடுகளையும் குறிப்பாக இணை அனுசரணை நாடுகள் மற்றும் இலங்கையில் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கவேண்டுமென்பதில் ஆர்வமாக இருக்கின்ற நாடுகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து இந்த முயற்சிக்கு பிரித்தானியா ஒரு பலமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கின்றோம். அதற்கு அவர் சாதகமாக பரிசீலிப்பதாக எமக்கு வாக்குறுதியளித்திருந்தார்.

தமிழர் விடயத்தில் இந்தியாவுடன் இணைந்துகொள்ளுமாறு அமெரிக்காவுக்கு நீங்கள் ஒரு ஊடக அறிக்கை மூலம் அழைப்பு விடுத்திருந்தீர்கள்?அந்த அழைப்புக்கு சாதகமான பதில் கிடைத்ததா?

பதில்;அமெரிக்காவில் இடம்பெற்ற பேச்சுகளிலும் இந்த விடயத்தை வலியுறுத்தியிருந்தோம்.அமெரிக்க அரசாங்கம் இந்திய அரசுடன் நேரடி தொடர்பில் இருக்கின்றது என்ற அடிப்படையிலும், தமிழருடைய விவகாரத்திலும் இரு நாடுகளும் நேரடியாக தொடர்பில் இருப்பதாலும் இரு நாடுகளும் இணைந்து பயணிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.நாங்கள் இந்த விடயத்தை வலியுறுத்துவதற்கு முன்பாகவே இந்தியாவுடன் இணைந்து செயற்படவேண்டுமென்பதை அமெரிக்க பிரதிநிதிகள் எங்களிடத்தில் தெரிவித்திருந்தார்கள்.

நீங்கள் நீண்டகாலமாக தமிழர் விவகாரங்களை கையாண்டு வரும் ஒருவர் என்ற அடிப்படையில்,பூகோள அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்குள் தற்பொழுது தமிழர் விவகாரம் எவ்வாறு நகர்த்தப்படுவதாக உணர்கிறீர்கள்.


பதில்:இன்றைய பூகோள அரசியலில் சீனாவினுடைய வளர்ச்சி பெரிய விடயமாக பேசப்படுகிறது.அத்துடன் சீனா இலங்கையிலும் காலடி வைத்துக்கொண்டிருக்கும் ஒரு சூழலில் பிராந்திய வல்லரசான இந்தியாவும் உலக வல்லரசான அமெரிக்காவும் நியாயமான பல கருத்துக்களை கொண்டிருக்கிறார்கள்.அவ்வாறானதொரு சூழ்நிலையில் தான் நாங்கள் (தமிழர்கள்)இந்தியா,அமெரிக்கா போன்ற நாடுகளுடன் எங்களுடைய உறவுகளை வலுப்படுத்தி வருகின்றோம். அந்த அடிப்படையில் பூகோள அரசியலில் ஏற்படுகின்ற மாற்றங்களை அனுசரித்து ,ஏனைய நாடுகளுடனும் எங்களுடைய உறவுகளை வலுப்படுத்துவதனூடாக எங்களுக்கு (தமிழர்களுக்கு)ஒரு தீர்வு கிடைக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

உங்களுடைய குறித்த விஜயம் சம்பந்தமாக இந்தியாவுடன் கலந்துரையாடும் திட்டங்கள் உள்ளனவா?

பதில்;அவர்களுக்கு ஏற்கனவே இந்த விடயங்கள் முழுமையாக தெரியும்.நாங்களும் எடுத்து கூறியிருக்கின்றோம்.