தமிழர்களுக்கு மறுக்கப்படும் நீதியும் ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பும்!

செவ்வாய் பெப்ரவரி 25, 2020

தமிழின அழிப்பு உச்சத்தைத் தொட்ட 2009 மே மாதத்திற்கு பின்னர், மீண்டும் ஒரு தடவை ஐ.நா. மனித  உரிமை பேரவையின் கூட்டத் தொடர் இடம்பெறவிருக்கின்றது.

பத்து ஆண்டுகளைக் கடந்துவிட்டதன் பின்னரும் தமிழருக்கான நீதிக்கான ஆரம்பப் புள்ளி கூட இன்னும் கண்களுக்குத் தென்படாதநிலையில் இப்போது ஐ.நா. மனித உரிமை பேரவையின் 43வது கூட்டத் தொடர் எதிர்வரும் 24ம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 20ம் திகதி வரை நடைபெறவிருக்கின்றது.

111

அதுவும் இனப்படுகொலையில் ஈடுபட்ட ராஜபக்ச குடும்ப ஆட்சியாளர்கள் மீண்டும் ஆட்சி அதிகாரங்களுக்கு வந்துள்ள காலச்சக்கரத்தில், இந்தக் கூட்டத்தொடர் இடம்பெற இருப்பது தமிழர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  

இக்ககூட்டத்தொடரின்போது, எதிர்வரும் 27ம் திகதி ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லட் சமர்ப்பிக்கவுள்ள இலங்கை குறித்தான அறிக்கை மீதான விவாதம் அன்றைய தினம் இடபெறவுள்ளது.

இலங்கை குறித்து 2015ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சிறீலங்கா ஆட்சியாளர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்ட பின்னர், இரண்டு தடவைகள் இந்தக் கால அவகாசம் நீடிக்கப்பட்டது.

2015ம் ஆண்டு ஜெனீவாவில் சிறீலங்காவின் இணை அனுசரணையுடன் 30/1 என்ற பெயரில் நிறைவேற்றப்பட்டு பின்னர் 2017ம் ஆண்டு 34/1 என்ற பெயருடன் மேலும் இரண்டு வருடங்களுக்கு  நீடிக்கப்பட்ட பிரேரணை, 2019ம் ஆண்டு மார்ச் மாதம் மேலும் இரண்டு வருடங்களுக்காக 40/1 என்ற பெயரில் நீடிக்கப்பட்டது.

இக்கால அவகாசம் வழங்கப்பட்ட கடந்த ஐந்து வருடகாலத்தில் பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்கள் எவ்வாறு நடைமுறைபபடுத்தப்பட்டது என்பது தொடர்பாகவே ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் இலங்கை குறித்த அவதானிப்பு அறிக்கையை முன்வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

27ம் திகதிக்கு முன்பதாகவே மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை வெளியாகிவிடும். எனினும் 27ம் திகதி ஆணையாளர் அறிக்கையின் சாரம்சத்தை பேரவையில் முன்வைத்ததன் பின்னரேயே இவ்விடயம் குறித்து விவாதம் நடைபெறும் என்றும் கூறப்படுகின்றது.

சர்வதேச நாடுகள் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இலங்கை குறித்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்றவுள்ளதுடன், மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லட்டின் அறிக்கை குறித்து தமது நிலைப்பாட்டையும் அறிவிக்கவுள்ளனர்.

111

ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் 2015ம் ஆண்டு கொண்டு வந்த 30/1 தீர்மானத்திற்கு ஒருபோதும் இணக்கம் தெரிவிக்கமாட்டோம் என்றும், இலங்கை தொடர்பான 2015ம் ஆண்டுத் தீர்மானங்களில் ராஜபக்சக்கள் இருந்த நிலைப்பாட்டில் எவ்வித மாற்றங்களும் தற்போது வரை கிடையாது என்றும் சிறீலங்கா அரச பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல முதல் அந்நாட்டின் அதிகாரத்திலுள்ள பல்வேறு தரப்பினரும் உறுதியாகக் கூறிவருகின்றனர்.

எனினும், தமது நாட்டின் சார்பில் இந்த விவாதத்தில் தூதுக்குழுவொன்றை களமிறக்க சிறீலங்கா திட்டமிட்டுள்ளது. குறிப்பாக நடந்த இனப்படுகொலைகளை நியாயப்படுத்தும் வகையில் தம்முடன் இணைந்து படுகொலைகளில் ஈடுபட்ட தமிழ் ஒட்டுக் குழுக்களின் தலைமைகளையும் ஜெனீவாவிற்கு அழைத்துவந்து, நியாயம் கற்பிக்க திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே செய்திகள் கசிந்துள்ளன.

சிறீலங்காவின் ஆட்சி அதிகாரத்தை கடந்த ஆண்டின் இறுதியில் ராஜபக்ச குடும்ப அட்சியாளர்கள் கைப்பற்றியதன் பின்னர், இலங்கைத் தீவு ஒரு இராணுவ ஆட்சிக்குள் தள்ளப்பட்டுள்ளதை, கோத்தபாய ராஜபக்ச முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் வெளிப்படையாக உணர்த்தி நிற்கின்றன.

குறிப்பாக வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் அரச சிவில் நடவடிக்கைகளில் இராணுவத்தில் பதவி வகித்தவர்களே அமர்த்தப்பட்டுவருகின்றனர்.

வடக்கு, கிழக்கில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு சிங்களத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுவருகின்றது. காரணமின்றிக் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் 30 வருடங்களைக் கடந்தும் சிறைகளில் வாடிக்கொண்டிருக்கையில், இராணுவத்தில் படுகொலைகளில் ஈடுபட்டவர்களும் தண்டனை விதிக்கப்பட்டவர்களும் கோத்தபாயவினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

சிறீலங்கா இராணுவத்தின் கைகளில் ஒப்படைக்கப்பட்டு காணாமல்போயுள்ள தமது உறவுகளை தேடி கடந்த மூன்று வருடங்களாக உறவுகள் போராடிவரும் நிலையில் அவர்கள் உயிரிழந்துவிட்டார்கள் என சிறீலங்காவின் ஜனாதிபதி கோத்தபாயவும், அவர்கள் கொன்று புதைக்கப்பட்ட இடத்தில் வந்து உடல்களை தோண்டியயடுத்துச் செல்லுமாறு அவரது அமைச்சர் விமல் வீரவன்சவும் எகத்தாளம் இட்டு வருகின்றனர்.

இவ்வாறு ஐ.நா. பிரேரணையில் குறிப்பிடப்பட்ட விடயங்களுக்கு முற்றுமுரணாக ராஜபக்ச ஆட்சியாளர்கள் செயற்பட்டுவரும் நிலையில் இம்முறை கூட்டத்தொடர் இடம்பெறுகின்றது.

சிங்கள ஊடகவியலாளர்களும், ராஜபக்சக்களின் ஆட்சிக்கு எதிரான கருத்துக்களை கொண்டிருக்கும் சிங்களப் பிரமுகர்களும் அச்சம் காரணமாக  நாட்டைவிட்டு தப்பியோடிவரும் நிலையில், தமிழர்களுக்கு நீதி ஒருபோதும் கிடைக்காது.

உள்ளக விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறீலங்கா அரசு நீதியை வழங்கவேண்டும் என்று ஐ.நா.மனித உரிமைச் சபையும் ஒரு சில நாடுகளும் கூறிவருகின்ற நிலையில்,சிறீலங்காவின் உள்ளக விசாரணை பாதிக்கப்பட்ட தரப்புக்கு நீதியை ஒருபோதும் பெற்றுக்கொடுக்காது என்பதை தற்போதைய ஆட்சி ஆணித்தரமாக உலகிற்கு உறுதிப்படுத்தப்பட்டுவருகின்றது.

‘காலம் கடந்த நீதி அநீதிக்கு சமமானது.’ ஏற்கனவே, நீதிக்காக காத்திருந்து ஒரு தசாப்தம் கடந்துவிட்டது.

காணாமல்போன தங்கள் உறவுகளைத் தேடிய பலர், அவர்கள் இருக்கின்றார்களா, இல்லையா என்ற முடிவுகளைக்கூடத் தெரிந்துகொள்ளாமல் தங்கள் உயிர்களையும் இழந்துவிட்டனர்.

இந்தவேளையில், ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு எவ்வாறான முடிவொன்றை இந்தக் கூட்டத்
தொடரில் எடுக்கப்போகின்றது என்ற எதிர்பார்ப்பு தமிழ் மக்களிடம் மேலோங்கியுள்ளது.

ஏனெனில், தமிழ் மக்கள் குறித்து இந்தமுறை ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு தீர்க்கமான முடிவொன்றை எடுக்கவில்லை எனில், அது ஒருபோதும் தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கப்போவதில்லை என்பது உறுதியானது.

ஆசிரியர் தலையங்கம்
நன்றி: ஈழமுரசு