தமிழ்த் தேசிய அரங்கில் ஐ.பி.சிக்கு தடை – தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுக் கிளைகள் ஏகமனதாக தீர்மானம்!

வியாழன் மே 21, 2020

திருமலையில் மூன்று தமிழ் செயற்பாட்டாளர்களை சிறீலங்கா புலனாய்வுத்துறையிடம் காட்டிக் கொடுத்த ஐ.பி.சிக்கு தடை விதிப்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுக் கிளைகள் தீர்மானித்துள்ளன.

 

திருமலை மாவட்டம் மூதூர் கிளிவெட்டிப் பகுதியில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவெழுச்சி நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்ட மூன்று தமிழ் செயற்பாட்டாளர்களின் சமூக வலைத்தளப் பதிவுகளை பகிரங்கப்படுத்தி அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுக் கிளைகளிடம் பணம் பெறுபவர்கள் என்று ஐ.பி.சியின் சிங்கள ஊடகச் சேவையான ககாணா இணையம் செய்தி வெளியிட்டிருந்ததை கடந்த 19.05.2020 செவ்வாய்க்கிழமை அன்று தமிழ்நெற் இணையத்தளம் வெளிக்கொணர்ந்திருந்தது.

 

Gagana

 

இந்நிலையில் இது பற்றி அவசர ஆலோசனைகளை நிகழ்த்திய தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுக் கிளைப் பொறுப்பாளர்கள், தமிழ்த் தேசிய அரங்கில் ஐ.பி.சியைத் தடை செய்யத் தீர்மானித்திருப்பதாக சுவிசில் இயங்கும் வெளிநாட்டுக் கிளைகளின் ஊடகப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் இன்று இரவு சங்கதி-24 இற்கு அறியத் தந்துள்ளார்.

 

இதே முடிவைத் தமிழ்த் தேசிய அமைப்புக்களும் எடுக்கும் என்றும், இதன் படி தமிழ்த் தேசிய நிகழ்வுகளில் ஐ.பி.சி பங்குபற்றுவதற்கு இனிமேல் அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் குறித்த ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் சங்கதி-24 இற்கு தெரிவித்துள்ளார்.

 

இது பற்றி பிரித்தானியாவில் வசிக்கும் ஐ.பி.சியின் பணிப்பாளர் நிராஜ் டேவிட் அவர்களுடன் எமது செய்தியாளர் தொடர்பு கொண்ட பொழுது, அவர் தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.