தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு கிடைக்கும் வெற்றி!

செவ்வாய் பெப்ரவரி 25, 2020

தமிழ்த் தேசியத்திற்கு கிடைக்கும் வெற்றியாக அமையும்....... 

தமிழர்களின் உரிமைகளைப் பெறுவதற்கு எத்தனையோ முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இதற்காக புதிய கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதுதான், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.விவிக்னேஸ்வரன் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் தேசிய கூட்டணி.

தமிழ்க் கட்சிகளின் இணைப்பு தொடர்பாக பலரும் தமது விருப்பங்களை வெளிப்படுத்திவரும் நிலையில், கட்சிகள் மேலும் பிரிவினையை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றன. சிங்களவர்களின் பிரித்தாளும் தந்திரம் தற்போது சாத்தியமாகிக்கொண்டிருக்கின்றது.

வந்ததும் வராததுமாக, ‘தமிழ் மக்கள் தேசிய கூட்டணி’ வடக்கு - கிழக்கு இணைக்கப்பட்ட தமிழர் தாயகத்தில், தமிழ் மக்கள் சகல உரிமைகளுடனும் வாழக்கூடிய வழிவகைகளை ஏற்படுத்து
வதே தங்கள் இலக்கு என அறிவித்திருக்கின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத பலத்திற்கு மேலாக தங்களிடம் அசாத்திய பலம் இருக்கின்றது என தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என மேற்படி கூட்டணி நம்புவது நகைப்புக்குரியதாக உள்ளது.

தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈழத்தமிழர் சுயாட்சி கழகம் மற்றும் தமிழ் தேசிய கட்சி என நான்கு கட்சிகள் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள மேற்படி கூட்டணிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு கடந்த 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

இதன்போது, நான்கு கட்சிகளின் தலைவர்கள் முறையே, சி.வி.விக்னேஸ்வரன், சுரேஸ் பிறேமச்சந்திரன், அனந்தி சசிதரன், ந.ஸ்ரீகாந்தா ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

111

புதிய கூட்டணியின் உருவாக்கம் தொடர்பாக மக்கள் எவரும் பெரிதாக அலட்டிக்கொள்ளாத போதிலும் இது வெறுமனே தேர்தல் கூட்டணியா? அல்லது, தமிழ் மக்களின் கொள்கை சார்ந்த விடயங்களை முன்னெடுத்து செல்லுமா என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்திருக்கின்றது. புலம்பெயர் தேசத்திலுள்ள மக்கள் மத்தியிலும் இக்கூட்டணி தொடர்பில் வெளிப்படைத்தன்மை போதாமல் உள்ளது.

இக்கூட்டணியின் உருவாக்கம் தொடர்பாக பல மாதங்களாவே பேச்சுக்கள் அடிபட்டாலும் தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளிடையே முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன. பலசுற்று பேச்சுக்களின் பின்னர் அவற்றுக்கு தீர்வு காணப்பட்டு தற்போது ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருக்கின்றது.

ஒப்பந்தம் கைச்சாத்திட்ட அன்று கருத்து வெளியிட்ட தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதில், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாற்று அணி தாங்களே என கூறியிருந்தார். ‘எங்களை தவிர வேறு யாரும் மாற்று அணி அல்லர்’ என அவர் இறுமாப்புடன் தெரிவித்ருந்தார். அவரை தொடர்ந்து சுரேஸ் பிறேமச்சந்திரன், ந.ஸ்ரீகாந்தா போன்றோரும் இதே கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் மக்களின் விடுதலை அரசியல் களத்தில் 2009 ஆம் ஆண்டுவரை தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏகோபித்த பிரதிநிதிகளாக இருந்தனர். அவர்களை தவிர யாரும் அப்போது அரசியல் அரங்கிலோ போராட்ட களத்திலோ தமிழ் மக்களுக்கான பிரதிநிதிகளாக இருக்கவில்லை.

தமிழ் மக்களும் மற்றவர்களை விரும்பவில்லை. முப்பது ஆண்டு காலமாக தமிழ் தேசிய அரசியலில் தமிழீழ விடுதலை புலிகள் நேரடி ஆதிக்கம் செலுத்தியிருந்தனர்.

சிறீலங்கா நாடாளுமன்றில் தமது அரசியல் குரலாக ஒலிப்பதற்காகவே புலிகள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அங்கீகாரம் வழங்கியிருந்தனர். சிங்கள மக்கள் மற்றும் சிங்கள ஆட்சியாளர்கள்  மட்டத்தில் தமிழீழ மக்களின் இலட்சிய வேட்கையை எடுத்துச் செல்லும் ஊடகமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

அப்போது உள்ளக - வெளியக அரசியல் பொறிமுறைகளைத் தீர்மானிக்கும் சக்தியாக, தமிழ்த் தேசிய விடுதலை அரசியலின் மையப்புள்ளியாக தமிழீழ விடுதலை புலிகளே செயற்பட்டனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் அணி என்ற அடிப்படையிலேயே இன்றுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு ஏற்பட்டிருக்கின்றது.

புலிகளால் வழங்கப்பட்ட அந்த அங்கிகாரத்தை கூட்டமைப்பு சரியாக பயன்படுத்தி தமிழர்களுக்கான தீர்வை பெற்றுக்கொள்ள காத்திரமான நடவடிக்கை எதனையும் எடுத்திருக்கவில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்கள் விடயத்தில் அக்கறையாகச் செயற்பட்ட கூட்டமைப்பு, 2009 ஆம் ஆண்டு புலிகளின் கட்டமைப்புக்கள் சிதைவடைந்த பின்னர் தாம் நினைத்ததை செய்யத்தொடங்கியது.

இதுவே, தமிழ் மக்களுக்கும் தமிழ்த் தேசியப் பற்றாளர்களுக்கும் கூட்டமைப்பின் மீது அதிருப்தியையும் விரக்தியையும் ஏற்படுத்தியது.

அப்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இலங்கை தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், ஈ.பி,ஆர்.எல்.எவ், ரெலோ ஆகிய நான்கு கட்சிகள் இணைந்திருந்தன. 2009 ஆம் ஆண்டிற்கு பின்னர், அதாவது புலிகளின் கட்டமைப்புக்கள் சிதைந்த பின்னர் த.சித்தார்த்தன் தலைமையிலான புளொட் அமைப்பும் கூட்டமைப்பில் இணைத்துக் கொள்ளப்பட்டது.

ஐந்து கட்சிகள் இணைந்திருந்த போதிலும் அவர்கள் தமிழ் மக்களுக்கு விமோசனங்களை பெற்றுக்கொடுக்க முன்வரவில்லை.

தமிழ்த் தேசியம் பேசுபவர்களாக வெளியே காட்டிக்கொணடிருந்த கூட்டமைப்பினர் சிறீலங்கா அரசுக்கு சார்பான கொள்கை உடையவர்களாக மாறினர். இதனையடுத்து கூட்டமைப்பிற்குள் பிரச்சினைகள் ஏற்பட்டன.

இதன் வெளிப்பாடாக, கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பத்மினி சிதம்பரநாதன், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் வெளியேறி தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்தனர்.

அன்று தொடக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான மாற்று அணியாக அவர்கள் தங்களை அடையாளப்படுத்தி செயற்பட்டனர். இப்போதும் அதேபோன்றுதான் அவர்களின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், கடந்த 9 ஆம் திகதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் தேசிய கூட்டணியானது தாங்களே கூட்டமைப்புக்கான மாற்று அணி என்பதை வெளிப்படையாக அறிவித்திருக்கின்றார்கள்.

கூட்டணியின் தலைவர் நீதியரசர் விக்கினேஸ்வரன் முதலில் அக்கருத்தை அறிவிக்க, ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சித் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரனும் தாங்களே மாற்று அணி என்பதை அறிவித்ததுடன் ஒருபடி மேலே சென்று, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அணி இனிமேல் தனித்து நின்று எதையும் செய்ய முடியாது எனவும் அவர்களும் தம்மோடு வந்து இணையவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

இதேபோன்று, மேற்படி கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் தேசிய கட்சித் தலைவர் ந.ஸ்ரீகாந்தா, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இனிமேல் தேர்தலில் வெல்லமுடியாது என்பதால் தம்மோடு வந்து இணையுமாறு ஊடக சந்திப்பு நடத்தி வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.

இவர்களின் கோரிக்கையை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்றுக்கொள்ளாது என்பது ஒருபுறம் இருக்க, அந்தக் கட்சி தனித்து நிற்பதும் ஆபத்தானது என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும்.

தமிழ்த் தேசியத்தில் அப்பளுக்கற்றவர்களாக தாங்கள் செயற்படுகின்றார்கள் என்பதை அவர்கள் காட்டிக்கொண்டாலும் தனித்துநின்று சாதிக்க முடியாது என்பதையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணி தனித்து களம் இறங்கவில்லை. பொது அணியாக - தமிழ்த் தேசிய பேரவை என கூட்டணியாகவே - களம் இறங்கியிருந்தது. அதில், தமிழ் தேசிய மக்கள் முன்னணி, நம்பிகள் நல்வாழ்வு கழகம், தமிழர் சம உரிமை இயக்கம் போன்ற அணிகள் இணைந்திருந்தன.

தமிழ் மக்களின் ஆரம்பகால கட்சியான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியில், அதன் துவிச்சக்கரவண்டி சின்னத்தில் அவர்கள்  போட்டியிட்டனர். இந்தக் கூட்டணி மூலமாக 101 ஆசனங்கள் வெல்லப்பட்டன.

இந்த வெற்றியானது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை பொறுத்தவரை அசாத்தியமான நிகழ்வு. அவர்களே எதிர்பார்க்காத வெற்றி அது. ஆனால், தேர்தல் முடிவடைந்த பின்னர் இந்தக் கூட்டணியை தக்கவைக்க தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தவறிவிட்டது. தனியே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரை மாத்திரம் ஆதரித்து தமிழ் மக்கள் வாக்களித்தனர் என கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அவரது கட்சியினரும் நம்பினர். இது அவர்களின் அரசியல் சாணக்கியம் அற்ற நம்பிக்கை. இதில் இருந்து அவர்கள் விடுபடவேண்டும்.  

இற்றைவரை, தமிழ்த் தேசியத்தில் பற்றுறுதியுடன் பயணிக்கின்ற கட்சி என்ற ரீதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தம்மைப் பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபடவேண்டியது காலத்தின் தேவை. 

தமிழ் மக்களை ஆள்வதற்கு தாங்களே தகுதியானவர்கள் என ஒட்டுக்குழுக்கள் முண்டியடித்துக்கொண்டு களம் இறங்குகின்ற நிலையில், தாங்கள் தனித்து நின்று வெல்ல முடியும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி எண்ணுவது ஆபத்தானது.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி போன்றன களம் இறங்கவிருக்கின்றன. அதைவிட, ஈ.பி.டி.பி, அங்கஜன் இராமநாதன் அணி போன்றனவும் களம் இறங்கும்.

மேலும், சிறீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளாகவுள்ள யாழ்.மாவட்டத்தை சேர்ந்த தமிழர்களும் களம் இறங்கவிருக்கின்றனர். சுயேட்சை அணிகளும் தங்களைத் தயார்படுத்துகின்றன.நிலையே வடக்கு - கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் இதுபோன்ற நிலைப்பாடுதான் இருக்கின்றது.

தமிழ்த் தேசியத்தில் பற்றுடன் அரசியல் களத்தில் இறங்குபவர்கள் இந்த சூழ்நிலைகளுக்கு ஏற்றாற்போல திட்டங்களை வகுக்கவேண்டும்.

தற்போது, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் உள்ள நான்கு கட்சிகளில் ஈ.பி.ஆர்.எல்.எவ் அரச ஒட்டுக்குழு. கடந்த காலங்களில் நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களைக் கொன்று குவித்ததில் ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரனுக்கு அதிக தொடர்பு உண்டு.

இதைவிட, ஸ்ரீகாந்தாவும் நேர்மையானவர் அல்லர் என்பது தமிழ் மக்களுக்கு வெளிப்படையாக தெரியும். கடந்த காலங்களில் ரெலோ கட்சியையும் அக்கட்சியை சேர்ந்த எம்.கே.சிவாஜிலிங்கத்தையும் தவறாக வழிநடத்தியதில் இவருக்கு அதிக தொடர்பு உண்டு.

இவர் சிங்களத்திற்கு சாமரம் வீசுபவர் மேலும் அனந்தி சசிதரனின் அண்மைக்கால செயற்பாடுகளிலும் தமிழ் மக்கள் கடும் விசனமடைந்துள்ளனர்.

முன்னாள் போராளியின் மனைவி என்ற அனுதாப அலையுடன் பதவிக்கு வந்த அவர் தமிழ் பெண்கள் விடயத்தில் உரிய அக்கறை எடுக்கவில்லை.

முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் குறித்தும் விமர்சனங்கள் இருக்கின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பான விடயங்களில் இவருக்கு உடன்பாடு இல்லை, நேர்மையானவராக இருக்கின்ற போதிலும் அரசியல் அனுபவம் இல்லை போன்று பல கருத்துக்களை மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

எனினும், மேற்படி அரசியல்வாதிகளுக்கு குறிப்பிட்டளவானோர் ஆதரவளிப்பார்கள் என்பதையும் மறுதலிக்க முடியாது. விக்கினேஸ்வரன், சுரேஸ் பிறேமச்சந்திரன் போன்றோருக்கு அதிகளவாக மக்கள் வாக்களித்திருக்கின்றனர் என்பதை கடந்தகால வாக்களிப்பு முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன.

எது எவ்வாறிருப்பினும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினதோ தமிழ் மக்கள் தேசிய கூட்டணியினதோ வெற்றி, தமிழ்த் தேசியத்திற்கு கிடைக்கும் வெற்றியாகக் கொள்ளப்பட முடியாதது.

அவர்கள் கடந்த காலங்களிலும் தற்போதும் சிறீலங்கா அரசுக்கு முண்டுகொடுப்பவர்களாகவே உள்ளனர்.

அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப இயங்கிக்கொண்டிருப்பவர்களாகவே உள்ளனர்.

ஆனால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சில ஆசனங்களை பெற்றுக்கொள்ளுமாயின் அது தமிழ்த் தேசியத்திற்கு கிடைக்கும் வெற்றியாக அமையும் என மக்கள் நம்புகின்றனர். தற்போது தமிழ்த் தேசிய வெளியில் உண்மையான பற்றுடன் பயணிக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள்  அதிகாரத்திற்கு வரவேண்டிய தேவை இருக்கின்றது.

ஈழத்தமிழர்களுக்கான அரசியல் களத்தில் தமது கருத்தை ஆணித்தரமாக வெளிக்கொண்டுவருவதற்கு அவர்களின் வரவு அவசியம்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பின்னர் உண்மையான தலைமை இன்றி இருக்கின்ற தமிழ் மக்களுக்கு நேர்மையுடன் உழைக்கக்கூடிய தலைமை ஒன்று அவசியம். அது தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் அணியாக இருக்கவேண்டியது இன்றியமையாதது.

இந்த விடயத்தில், புலம்பெயர் தேசத்தில் உள்ள தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்களும் ஆலோசனை வழிகாட்டல்களை வழங்கவேண்டும். தமிழ் மண்ணுக்காக மரணித்தவர்களின் கனவுகள் மெய்ப்படவேண்டும்.

‘தாயகத்தில் இருந்து’
காந்தரூபன்

நன்றி: ஈழமுரசு