தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை தோற்கடிப்பதற்கு சிறிலங்கா படையினர் தீவிர முயற்சி!

செவ்வாய் ஜூலை 07, 2020

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை முடக்கி, எங்களைத் தோற்கடிப்பதற்கு சிறிலங்கா படையினர் மும்முரமாக செயற்பட்டு வருகின்றனர் என அக்கட்சியின் வேட்பாளரும் சட்ட ஆலோசகருமான சட்டத்தரணி கே.சுகாஸ் குற்றம்சாட்டியுள்ளார். 

எங்களைத் தோற்கடிப்பதன் மூலம் தமக்கு தேவையானவர்களை வெல்ல வைப்பதே படையினரின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார். 

யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறினார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,   

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையகம் மற்றும் வட்டுக்கோட்டை அலுவலகம், நல்லூர் அலுவலகம் என்பன சிறிலங்கா படையினராலும் பொலிஸாராலும் முற்றுகைக்குள்ளானது. இம்முற்றுகையினை கரும்புலிகள் தினத்திற்கான முற்றுகையாக நாங்கள் கருதவில்லை.

ஒருபுறம் சுதந்திரக் கட்சியின் வேட்பாளரான அங்கஜன் இராமநாதனை வெற்றி பெறவைக்க இராணுவம் மும்முரமாக செயற்பட்டு வருகின்றது.

இன்னொருபுறம் முன்னணியின் பிரச்சாரங்களை முடக்குவதன் மூலம் எத்தகைய நோக்கத்துடன் நகர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றது என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். - என்றார்.