தமிழுக்கு இந்த வசை எய்திடலாமோ?-கவிஞர் முத்துலிங்கம்

வெள்ளி ஓகஸ்ட் 23, 2019

தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும்-இவள்
என்று பிறந்தவள் என்றுண ராத
இயல்பின ளாம் எங்கள் தாய்

என்று மகாகவி பாரதியார் கூறுவார்.

வீறுடைய செம்மொழி தமிழ் மொழி - உலகம் வேரூன்றிய நாள் முதல் மொழி என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தமிழைப் போற்றிப் பாடுவார்.

111

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் 12-ஆம் வகுப்புக்குரிய ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் தமிழ் கி.மு. 300-இல் தோன்றியது என்றும் சம்ஸ்கிருதம் கி.மு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும் பிழைபடக் குறிக்கப்பட்டிருக்கிறது.இது மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய கருத்தாகும்.

இறை நம்பிக்கை உடையவர்கள் இறைவன் உடுக்கையிலிருந்து ஒரு பக்கம் தமிழும், மறுபக்கம் சம்ஸ்கிருதமும் தோன்றியது என்றும் இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட மொழிகள்தாம் இவை இரண்டும் என்றும் கூறுகிறார்கள்.

ஆனால், ஆங்கிலப் பாடப் புத்தகத்தை தொகுத்த தமிழக கல்வித் துறையினர் தவறான ஒரு கருத்துப்பதிவை எப்படி அனுமதித்தனர் என்பதுதான் வியப்பாக இருக்கிறது.

ஆரியம் போல் உலகவழக்கழிந்தொழிந்து சிதையா உன்சீரிளமைத் திறம்வியந்து செயல் மறந்து
வாழ்த்துதுமே என்று மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை பாடுவார்
. வடமொழியை வழக்கொழிந்த மொழி என்று கூறுவார்கள். அதைத் தூக்கி நிறுத்துவதற்காகப் பாடப் புத்தகத்திலிருந்து ஆரம்பிக்கலாம் எனச் சிலர் கருதியிருக்கலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது.

இந்தத் தவறு எப்படி ஏற்பட்டது என்று விசாரித்து அதற்குக் காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஆங்கிலப் புத்தகத்தில் தவறுகள் திருத்தப்படும் என்றும் கல்வி அமைச்சர் சொல்லியிருக்கிறார்.

அதை வரவேற்போம், பாராட்டுவோம். அவர் வார்த்தைதான் நமக்கு ஆறுதல் அளிக்கிறது.

பாடப் புத்தகத்தில் அக்கட்டுரை சேர்க்கப்படுவதற்கு முன் கல்வித் துறை அதிகாரிகள் பார்த்துச் சரி செய்திருக்க வேண்டாமா? அதுகூடத் தெரியாதவர்களா கல்வித் துறையில் இருக்கிறார்கள்?

111

அரசியல் ரீதியாகத் தவறான கருத்துகளையும், பிழையான பரப்புரைகளையும் செய்வது என்பது வேறு. தனிப்பட்ட முறையில், எல்லோருக்கும் அவரவர் கருத்துகளைப் பதிவு செய்யும் உரிமையும், வாதங்களை முன்வைக்கும் உரிமையும் உண்டு.

ஆனால், மாணவர்களுக்கான பாடநூலில் தங்களின் சொந்தக் கருத்துகளையும், பிழையான பரப்புகளையும் சேர்ப்பது என்பது கடும் கண்டனத்துக்குரிய செயல். பிஞ்சு நெஞ்சில் நஞ்சைப் பாய்ச்சும் முயற்சி.

அடுத்த தலைமுறையைத் தவறாக வழிநடத்தும் சதி.

உலகின் முதல் மொழி தமிழ்தான் என்று உலக மொழியியல் அறிஞர்கள் அனைவரும் உறுதிபட உரைக்கின்றனர்.

உலகில் இன்றைக்கு ஆறாயிரம் மொழிகளுக்கு மேல் பேசப்படுகின்றன. இவற்றில் இரண்டாயிரத்து ஐந்நூறு மொழிகளுக்குத்தான் எழுத்து வடிவங்கள் இருக்கின்றன. இந்த இரண்டாயிரத்து ஐந்நூறு மொழி
களுக்குள்ளும் இலக்கியம் மட்டுமே உடைய மொழிகள் முந்நூறு. இலக்கிய, இலக்கணம் உடைய மொழிகள் நூற்றைம்பது. இந்த நூற்றைம்பது மொழிகளுக்குள்ளும் இலக்கியச் சிறப்பு, இலக்கணச் சிறப்புடைய மொழிகள் ஐம்பது இந்த ஐம்பது மொழிகளுக்குள்ளும் உயர் தனிச் செம்மொழிகள் என்று சொல்லக்கூடிய மொழிகள், தமிழ், சீனம், லத்தீன், கிரேக்கம், எபிரேயம், சம்ஸ்கிருதம் என்று ஆறு மொழிகள்.

இந்த ஆறு மொழிகளுக்குள்ளும் இன்னும் பேச்சு வழக்கிலும், எழுத்து வழக்கிலும் உயிர்ப்போடு இருப்பவை சீனம், தமிழ் என்ற இருமொழிகள் மட்டும்தான். அதிலும் பழங்காலச் சீனர்கள் அதாவது கன்பூசியஸ் காலத்துச் சீனர்கள் வந்தால் இன்றைய சீனர்கள் பேசுவது அவர்களுக்குப் புரியாது.

அவர்கள் பேசுவது இவர்களுக்குப் புரியாது. எல்லாம் அங்கே மாறிவிட்டது.

ஆனால், தொல்காப்பியர் இன்றைக்கு வந்தாலும், அவர் பேசுகின்ற தமிழை நாம் புரிந்துகொள்வோம். நாம் பேசுகின்ற தமிழை அவர் புரிந்துகொள்வார்.  காரணம், கடந்த மூவாயிரம் ஆண்டுகாலமாகத் தமிழில் எழுத்து வடிவங்கள்தாம் மாறி மாறி வந்தனவே தவிர உச்சரிப்பு வடிவம், ஒலி வடிவம் மாறவே இல்லை.

அந்த வங்கக் கடலில் மரக்கலம் நின்றது. அதில் ஏறி அவன் ஈழத் தீவுக்குச் சென்றான் என்றுதான் தொல்காப்பியர் காலத்திலும் சொன்னார்கள். இன்றைக்கும் அப்படித்தான் சொல்கிறோம். மரக்கலம் என்பதற்குப் பதிலாக கப்பல் என்று சொல்கிறோம்.அவ்வளவுதான் மாறுதல்.

தொல்காப்பியர் காலத்திலிருந்த எழுத்து வடிவம் வேறு. சங்க காலத்திலிருந்து களப்பிரர் காலம் வரை இருந்த எழுத்து வடிவம் வேறு. இடைக்காலத்தில் கி.பி. 7-ஆம் நூற்றாண்டிலிருந்து 12-ஆம் நூற்றாண்டு வரை இருந்த எழுத்து வடிவம் வேறு. 12-இலிருந்து 15-ஆம் நூற்றாண்டு வரை இருந்த எழுத்து வடிவம் வேறு.

அதன் பிறகு இன்றைக்கு இருக்கின்ற எழுத்து வடிவம் வேறு.

தமிழ் சித்திர எழுத்துக்களாக இருந்தபோதுதான் சீனம் போன்ற மொழிகள் தோன்றின என்றும் தமிழ் கோலெழுத்தாக இருந்தபோதுதான் சம்ஸ்கிருதம் போன்ற மொழிகளுக்கு எழுத்துக்கள் உருவாக்கப்பட்டன என்றும், தமிழ் வட்டெழுத்தாக இருந்தபோதுதான் தெலுங்கு, கன்னடம், அதற்கு பின் மலையாளம் போன்ற மொழிகள் தோன்றின என்றும், அதிலும் மலையாளம் தோன்றி 550 ஆண்டுகள்தான் ஆகின்றன என்றும் மொழியியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

கோலெழுத்தாகத் தமிழ் இருந்தபோதுதான் அதைப் பார்த்து சம்ஸ்கிருதத்திற்கு எழுத்துக்கள் உருவாக்கப்பட்டன என்று அறிஞர்கள் கூறுகின்றபோது, தமிழுக்கு முன் கி.மு இரண்டாயிரத்திலே சம்ஸ்கிருதம் தோன்றியது என்று எழுதுவது முழுமையான பொய்யல்லவா?

ஆக, இன்று ஆறாயிரம் மொழிகளுக்கு மேல் பேசப்பட்டாலும் இந்த மொழிகளுக்கெல்லாம் மூல மொழி முதல் மொழி ஏதேனும் ஒரு மொழியாகத்தான் இருந்திருக்க முடியும். ஒரு மெழுகுவர்த்தியிலிருந்து பல திரிகள் அல்லது பல விளக்குகள் ஏற்றப்படுவதைப் போல ஒரு மொழியிலிருந்து பல மொழிகள் தோன்றியிருக்க முடியும்.

அந்த முதல் மொழியைப் பேசிய மனித இனம் பல்வேறு பகுதிகளுக்கு, பல்வேறு காலங்களில், பல்வேறு குழுக்களாகச் சென்றபோது ஆங்காங்கே இருந்த பேசத் தெரியாத மக்களிடம் கலந்து பழகிப் பேசத் தொடங்கியபோது தட்ப வெப்ப நிலைக்கேற்ப பேச்சுத் தொனி மாறுபட்டு, வேறுபட்டு இன்றைக்கு இத்தனை ஆயிரம் மொழிகளாகக் கிளைத்திருக்கின்றன.

இந்த மொழிகளுக்கெல்லாம் மூல மொழி முதல் மொழி எதுவாக இருக்கும் என்று பல்லாண்டுகள் ஆராய்ச்சி செய்தேன். என் ஆராய்ச்சியின் முடிவில் நான் கண்டுகொண்ட உண்மை என்னவென்றால், அநேகமாக அந்த மூல மொழி முதல் மொழி தமிழ் மொழி ஒன்றாகத்தான் இருக்க முடியும் என்ற முடிவுக்கு வருகிறேன் என்று கூறினார் அமெரிக்க நாட்டு மொழியியல் அறிஞர் அலெக்ஸ் கொலியர்.

இந்தக் கருத்தை மாணாக்கர் அரங்கில் முதன்முதல் பதிவு செய்தவர் அன்றைய தமிழ் வளர்ச்சித் துறைச் செயலாளராக இருந்த முனைவர் ராசாராம் இந்திய மொழிகளில் வெளிநாட்டில் ஆட்சி மொழித் தகுதி பெற்ற மொழியாக இருப்பது தமிழ் ஒன்றுதான்.

இலங்கையில் சட்டப்படி தமிழ் ஆட்சி மொழி. அதை இரண்டாம் இடத்திற்கு தள்ளிய காரணத்தால்தான் வேண்டத்தகாத விளைவுகள் ஏற்பட்டு தமிழ் இனத்தின் முக்கால்வாசி இனம் இன்று அழிந்துவிட்டது.

அதுபோல் சிங்கப்பூரில் ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் என்று நான்கு மொழிகள் தேசிய மொழிகளாகத் திகழ்கின்றன. சிங்கப்பூரில் ஹிந்தி பேசுகின்றவர்களும் ஆயிரக்கணக்கில் இருக்கின்றனர்.

அவர்களெல்லாரும், வாஜ்பாய் இந்தியப் பிரதமராக வந்தபோது, தமிழை சிங்கப்பூரில் தேசிய மொழி ஆக்கியிருப்பதைப் போலே நமது ஹிந்தி மொழியையும் ஆக்க வேண்டும், அதற்கு சிங்கப்பூர் பிரதமர் லீகுவான்யுவிடம் பேசுங்கள் என்றார்கள்.

வாஜ்பாயும் லீ குவான்யுவிடம் இது குறித்துப் பேசினார். அதற்கு லீ குவான்யு என்ன சொன்னார் தெரியுமா?

111

இந்தியாவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைமையான மொழி தமிழ் ஒன்றுதான் என்று சொல்கிறார்கள். அதற்கு இருக்கக் கூடிய இலக்கிய வளம், இலக்கண வளம் உலகில் வேறு எந்த மொழிக்கும் இல்லையயன்று கூறுகிறார்கள். செம்மொழிக்குரிய பதினொரு தகுதிகளும் எங்கள் சீன மொழிக்குக்கூட கிடையாது. தமிழ் ஒன்றுக்குத்தான் அந்தத் தகுதி இருக்கிறது என்றும் கூறுகிறார்கள். அப்படிப்பட்ட அறிஞர்கள் எழுதிய ஆங்கிலக் கட்டுரைகளில் ஒன்றிரண்டை நான் படித்தும் இருக்கிறேன். ஆக, அத்தகைய சிறப்புக்குரிய தமிழ் மொழிக்குக் கொடுக்கும் ஆட்சி மொழி அந்தஸ்தை வேறு எந்த இந்திய மொழிக்கும் எங்கள் சிங்கப்பூர் நாட்டில் கொடுக்க மாட்டோம் என்று தெரிவித்தார்.

எங்கோ இருக்கக்கூடிய ஒரு நாட்டின் பிரதமருக்குத் தமிழின் அருமை புரிகிறது. பாடப் புத்தகம் தயாரிக்கும் நமது தமிழக ஆங்கிலப் பண்டிதர்களுக்கு அணு அளவுகூட வரலாற்று அறிவு ஏன் இல்லை என்பதுதான் நமக்குப் புரியாத புதிராக இருக்கிறது.              

- நன்றி - தினமணி-