தம்பி வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீரம் ஓர் இலட்சம் யானைகளுக்குச் சமம்!

செவ்வாய் அக்டோபர் 01, 2019

தமிழகத்தில் இருந்து அண்மையில் பிரான்சுக்கு வருகை தந்த சித்த மருத்துவர் திரு. எம்.ஏ.ஹூசைன் அவர்கள்  தமது மருத்துவ மற்றும் வாழ்க்கைப் பயணம் குறித்து  எமது ஈழமுரசு இதழுக்கு வழங்கிய சிறப்பு  நேர்காணலின் நிறைவுப் பகுதி இது.

இன்றைய காலகட்டத்தில் உணவுமுறைகள் தான் நோய்களுக்குக் காரணம் என்கின்றீர்களா?
ஆம்.நிச்சயமாக உணவுமுறைகள் தான் இன்றைய நோய்களுக்கு காரணம் என்பதில் எந்தவித மாற்றுக்
கருத்துக்கும் இடமில்லை.  இஸ்லாமியத்தில், ஹலால், ஹராம் என்று உள்ளது. ஹலால் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது. ஹராம் என்பது ஏற்றுக்கொள்ளமுடியாதது.

அப்படியயன்றால் மனிதனுக்கு ஊறு தருவதை எப்படி ஹலால் என்று ஏற்றுக்கொள்வது என்று கேட்கலாம். அது அறிவியல் நோக்கம். கட்டாயப்படுத்தப்பட்ட உணவு அல்ல. மனிதனுக்கு ஒரு பிரச்சினை வந்தால், இந்தப் பொருளைக் கொடுத்துக் காப்பாற்ற முடியும் என்று சொன்னால், அதை அந்த நேரத்தில் மருந்துக்குப் பயன்படுத்தலாம்.

அப்படியான நோக்கத்தில் தான் வந்ததே தவிர, எல்லாவித மாமிசங்களும் உடலுக்கு ஒத்துவராது. உடலுக்கு எது ஒத்துவரும், வராது என்று பிரித்துப் பார்ப்பதே ஹலால், ஹராம் ஆகும். அதுதான் உண்மை. தமிழர்களுடைய வரலாற்றை எடுத்துப் பார்த்தால், நாகரிகம் அடைந்த மனித வரலாற்றில் எங்கும் மாமிசம் உண்டதாக வரலாறே இல்லை.

அவ்வாறு நான் தெரிவித்தபோது, மலேசியாவில் ஒரு மாணவி கேட்டார், கண்ணப்பர் மாமிசம் உண்டதாகவும் சிறுத்தொண்டர் பிள்ளைக் கறி உண்டதாகவும் வரலாற்றில் கூறப்பட்டுள்ளதே என்று கேட்டார்.

இதற்கு நான் கூறிய பதில், சரியாகக் கவனிக்கவேண்டும். கண்ணப்பர், நாகரிகம் அடையாத வேடுவ குலத்தில் எடுத்துவளர்க்கப்பட்ட பிள்ளை. அது இறைநம்பிக்கையை, பாசத்தை, அன்பை எடுத்துக்காட்டும் வரலாறு. மற்றையது இந்த சிறுத்தொண்டர் வரலாற்றில் வரும் தொண்டர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் அல்லர். வட
புலத்தில் உள்ளவர். அவற்றைத் திருத்தவது தான் தமிழர்களின் வேலை. திருக்குறளை உச்சரிக்கும் வலிமை எமக்கு உள்ளதாயின் அந்த நாக்கு ஒரு மாமிசத்தைத் தொட்டிருக்கக் கூடாது.

தமிழர்களின் வாழ்வியல் எவ்வாறு இருக்க வேண்டும் என்று கூறுங்கள்...

உலக வாழ்வியலில் எந்த ஒரு காரியத்தை எடுத்தாலும், அது எங்கிருந்து தோன்றியது என்று பார்த்தால், அது தமிழர்களிடம் இருந்துதான் வந்திருக்கின்றது. இது வரலாறு. இதை மறுக்கவே முடியாது. ஆனால், இன்று 164 இற்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழன் வாழ்ந்துகொண்டிருக்கின்றான்.

இதில் என்ன பிரச்சினை என்றால் அவன் தமிழன் என்ற பெயரில் வாழவில்லை. உதாரணமாக இந்தியன் என்ற பெயரில் வாழ்கின்றான். அவன் வாழும் நாட்டில் இந்தியனுக்கு பிரச்சினை ஏற்பட்டால் உதைவாங்குபவன் தமிழன்தான். தமிழர்கள தாம் வாழும் நாடுகளில்  நன்கு படித்து வேலைபார்ப்பார்கள். ஆனால், அவர்களை விட படிப்பில் குறைந்தவர்கள் மேலதிகாரிகளாக இருப்பார்கள். இதுதான் இன்றைய நிலை.  புலம்பெயர் நாடுகளில் உள்ள மக்கள் அங்கு இரண்டுவிதமான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றார்கள்.

ஒன்று அவர்களின் உடல் நிலை, மற்றையது அவர்களின் குடும்பமும் நாட்டின் சட்டதிட்டங்களும். இதன் அடிப்படையில் அவர்களுக்குள்ள சிக்கல்கள் தொடர்பாக என்னிடம் பேசுவார்கள். நான் பொதுவாக நாட்டின் சட்டதிட்டங்களை மதிப்பவன். அவன் தப்பான வழியில் உங்களுக்கு வழிகாட்டியிருந்தால் கூட அதை நீங்கள் சாதகப்படுத்தக்கூடிய வழிமுறைகள் உள்ளன. பிள்ளைகளை நல்ல நிலையில் கொண்டுவாருங்கள்.

அவர்களின் சிந்தனைகளுக்குள் இவற்றை ஊட்டுங்கள். பிள்ளைகள் நோய்வாய்ப்படுகின்றார்கள் என்றால், அவர்களை ஆரம்பத்தில் இருந்தே கவனியுங்கள். நோயை பெரிதாக வரவிடாதீர்கள். உணவு என்னும்போது சிறுவயதில் இருந்தே சரியான உணவுகளை கொடுத்துப் பழக்குங்கள். 

அவ்வாறு எல்லா வகையிலும் அவர்களுக்கு ஆலோசனை கொடுப்பேன். யாரைப் பார்த்தாலும் அவர்களுக்கும் எனக்கும் தொடர்பில்லாத வரையில் அவர்கள் யாரோ,  அவர்கள் தொடர்புவைத்தவுடன், அவர்கள் எனது மக்கள் என்ற சிந்தனை வந்துவிடும்.

அதன் அடிப்படையில்தான் நாங்கள் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.  இதனால், பல குடும்பங்கள் பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு நன்றாக வாழ்கின்றன.

கடந்த காலங்களில் தமிழீழத் தேசியத்திலும் உங்கள் பங்களிப்பு இருந்துள்ளதாக அறியமுடிகின்றது. அதுபற்றி...

தாம்பரத்தில் இருந்து 13 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளது படைபயின்ற ஊரு. அங்கே ஒரு படமாளிகையின் அருகே நான் மருத்துவமனை நடாத்திவந்தேன். அதனால் என்னை சினிமாக் கொட்டகை வைத்தியர் என்றுதான் எல்லோரும் அழைப்பர். நான் அங்கிருந்தபோதும், அதற்கு முன்னரும் விடுதலைப் புலிகளோடு எனக்குத் தொடர்பு இருந்து வந்தது. விடுதலைப் புலிகளைச் சேர்ந்த ஒரு நாற்பது பேருக்குமேல் கனடா தேசத்திற்கு அனுப்பிவைத்துள்ளேன். 

இது குற்றச்செயல் என்று என்னை இன்று கைதுசெய்தாலும் நான் செல்லத் தயாராக உள்ளேன்.  கனடாவிற்குச் சென்றால் அடிஉதை இல்லாமல் அவர்கள் அங்கு நின்மதியாக வாழ்வார்கள். அப்படியான பொதுநோக்கத்துடனேயே அவர்களை அவ்வாறு அனுப்பிவைத்தேன்.

அது சட்டப்படிகுற்றம் என்பது எனக்குத் தெரியும். எந்தச் சட்டமும் வந்து ஒருவனைக் காப்பாற்றப்போவது கிடையாது. தர்மம் மட்டும்தான் காக்கும்.

அத்தோடு குண்டடிபட்டுக் காயமடைநது வந்தவர்களுக்கு நானே குண்டை எடுத்து தையல்போட்டு குணப்படுத்தி, உணவுகொடுத்துப் பாதுகாத்து, ஈஞ்சப்பாக்கம் கொண்டுசென்று தோணியில் ஏற்றி விட்டுவிடுவேன். இப்படி ஐந்துபேரை அனுப்பியுள்ளேன். ஆனால், பிரபாகரனின் முகத்தை ஒரு தடவை கூட பார்த்ததில்லை. நான் ஈழத்துக்குச் சென்றபோதும் பார்க்கமுடியவில்லை.

ஒரு முறை கேரளா திருவனந்தபுரத்தில் பேசும்போது  எல்லோரின் முன்னிலையில் உலகத்திலே வீரன் என்று சொல்வதற்கு இரண்டுபேர் இருக்கின்றார்கள். ஒருவர் தம்பி வேலுப்பிள்ளை பிரபாகரன், மற்றவர் கடாபி என்றேன்.

கடாபி என்று சொன்னதும் அங்கிருந்த இஸ்லாமியர்கள் கைதட்டினார்கள். வேலுப்பிள்ளை பிரபாகரன் என்றதும் அனைவரின் முகமும் சுருங்கியது. ஏனென்றால் அங்கு ஒருவன்கூட தமிழன் இல்லை. அதுதான் காரணம். மலையாளக்காரன்கள் என்பதால் அவர்களுக்குத் தெரியவில்லை. உடனே என்னை பொலிஸார் பிடித்துவிசாரித்தனர்.

நீ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவனா என்று மிரட்டினர். அதெல்லாம் கிடையாது. தம்பி வேலுப்பிள்ளை பிரபாகரன் எங்கு இருந்தாலும் வீரன்தான். இறந்தாலும் வீரன்தான். அவனுடைய வீரம் ஓர் இலட்சம் யானைகளுக்குச் சமம்.

நீங்கள் என்னவேண்டும் என்றாலும் செய்யுங்கள். அதற்குத் தண்டனை தந்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயார் என்றேன். பின்னர் என்னை விடுவித்தார்கள்.

நான் 13 வயதில் துப்பாக்கி எடுத்தவன். அப்படியே தொடர்ந்திருந்தால், நான் எதாவது ஆயுததாரியாக அமைப்பில் இருந்திருப்பேன். அவ்வாறு இல்லாமல் இருப்பதற்கு ஒரே காரணம் திருவருட்பாதான். வள்ளலார் கொடுத்த சிந்தனைதான்.

யாராக இருந்தாலும் அவங்கள் மனுசன் அவ்வளவுதான். அந்த சிந்தனையோடு உலகம் முழுக்க நல்லது செய்யவேண்டும் என்று எமது நேரத்தை பயன்படுத்தி வருகின்றோம்.

உலகமக்கள் அமைதியாகவும் மகிழ்ச்சியோடும் நின்மதியோடும் வாழ வேண்டும். இந்த மூன்றையும் கேட்கின்றேன்.

இதில் உலகமே அடங்குகின்றது. இதே எண்ணத்தில் தான் பேசுகின்றோம். எழுதுகின்றோம். செயற்பட்டும் வருகின்றோம். சாதி,மதம் எதுவுமே இல்லை. எப்போது வள்ளலாரின் கொள்கையை எடுத்துக்கொண்டேனோ, அதன் பின்னர் எல்லா மதமுமே ஒன்றுதான். எல்லாவற்றையும் படித்து ஓர் ஒப்பாய்வு செய்ததினால், மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லக்கூடியதாக உள்ளது. இதனால், மக்களும் மகிழ்ச்சியோடு உள்ளனர். அது எனக்கும் பெருமகிழ்ச்சி.

புலம்பெயர் வாழ் எமது மக்களுக்கு நீங்கள் என்ன கூறவிரும்புகின்றீர்கள்?

இது தமிழக மக்களுக்கு 99 வீதம் மற்றும் 1 வீதம் உலகமக்களுக்கு நான் சொல்லப்போகும் செய்தி. போனால் வராதது நான்கு, ஒன்று நேரம், இந்த நேரத்தை அனைவரும் சரியாகப் பயன்படுத்துங்கள்.

இரண்டாவது வார்த்தை. இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று (அதிகாரம்:
இனியவை கூறல். குறள் எண்:100). நாம் பேசும் வார்த்தையில் மென்மை அவசியம். மூன்றாவது உயிர். உயிரை மதிக்கவேண்டும்.

அடுத்தது, மானம். இந்த மானம் போனால் வராது. இதனை உங்களால் தக்கவைக்கமுடியும்.
நேரம், வார்த்தை, உயிர், மானம் ஆகிய இந்த நான்கையும் ஒருவன் பாதுகாத்துக்கொண்டால் போதும், அவன் வேலையை அவனே பார்த்துக்கொள்வான். 100 வீதம் மனிதனாக அவனால் வாழமுடியும்.

முற்றும்  

சந்திப்பு-கந்தரதன்

நன்றி: ஈழமுரசு