தஞ்சமடைந்த அகதிகளை சிறைவைத்த மனுஸ்தீவு தடுப்பு முகாம் மூடப்படுகின்றது!

வெள்ளி அக்டோபர் 18, 2019

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமாக செயல்பட்டு வரும் பப்பு நியூ கினியாவில் உள்ள மனுஸ் தீவு முகாமில் இன்னும் 4 அகதிகள் மட்டுமே உள்ளதாக தெரிவித்திருக்கிறார் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சரான பீட்டர் டட்டன்.

ஃபோர்ட் மோர்ஸ்பேவுக்கு இந்த அகதிகள் மாற்றப்பட்டதும் முகாம் மூடப்படும் எனத் தெரிய வந்துள்ளது. ஃபோர்ட் மோர்ஸ்பே பகுதியில் தஞ்சக்கோரிக்கையாளர்களை  தடுத்து வைப்பதற்கான முகாமை உருவாக்க 20 மில்லியன் ஆஸ். டாலர்கள் ஆஸ்திரேலியா செலவளித்துள்ளது.

“லேபர் கட்சியால் (முன்பு ஆட்சியிலிருந்த கட்சி) முகாமில் அதிகரித்த (அகதிகள்) எண்ணிக்கையை நாங்கள் 4 பேராக குறைத்துள்ளோம்,” என அவர் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். அத்துடன் அமெரிக்காவுடனான அகதிகள் ஒப்பந்தத்தின் மூலம் 630 அகதிகள் அமெரிக்காவில் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.

புதிய படகு வருகைகள் இல்லாத காரணத்தினால் தான் இது சாத்தியமாகியதாகவும் 4 பேர் வெளியேறியதும் மனுஸ்தீவு முகாம் மூடப்படும் என டட்டன் கூறியுள்ளார். 

கடந்த 2013 முதல் கடுமையான எல்லைப்பாதுகாப்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய அரசு, படகு வழியாக தஞ்சமடைபவர்களை எந்த பரிசீலணையுமின்றி நாடுகடத்தி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.