தனியார் பாடசாலை! மாணவர்களிடம் 75% கட்டணமே வசூலிக்க வேண்டும்-

சனி ஜூலை 31, 2021

சென்னை- நடப்பு கல்வியாண்டில் தனியார் பாடசாலைகள் 85% கல்வி கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் 85 சதவீத கல்வி கட்டணத்தை வசூலித்து கொள்ள தனியார் பாடசாலைக்கு அனுமதி வழங்கி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க தனியார் பாடசாலைகளுக்கு தடை விதித்து, தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது.

இதனை எதிர்த்து தனியார் பாடசாலைகள் வழக்குகள் தொடர்ந்திருந்தன.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையின்போது, பாடசாலைகள் 85 சதவீத கட்டணத்தை வசூலித்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தனியார் பாடசாலைகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், பாடசாலைக் கட்டணம் வசூல் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவு தமிழ்நாட்டிற்கு பொருந்தாது என தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணகுமார், நடப்பு கல்வியாண்டில் 85 சதவீத கல்வி கட்டணத்தை வசூலித்து கொள்ள தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

அதே நேரத்தில் ஊரடங்கு வேலை இழப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் இருந்து 75 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ள நீதிபதி,

கட்டணத்தை 6 தவணைகளில் வசூலிக்க வேண்டும் என்றும், கடைசி தவணையை அடுத்த ஆண்டு பிப்ரவரி 2-ம் திகதிக்குள் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

அதே நேரத்தில் கட்டணம் செலுத்தாத காரணத்தால் மாணவர்களை வகுப்பில் சேர்க்காமல் இருக்க கூடாது எனவும் தனியார் பாடசாலைகளுக்கு உத்தரவிட்டு, பாடசாலை கட்டணம் தொடர்பான வழக்கை முடித்து வைத்துள்ளார்.