தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை!

வியாழன் நவம்பர் 21, 2019

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் இறுதிச்சுற்றில் தமிழக வீராங்கனை இளவேனில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

சீனாவின் புடியான் நகரில் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் இறுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தமிழகத்தின் தங்க மங்கையான இளம் வீராங்கனை இளவேனில் வாலறிவன் (வயது 20), இன்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில், 250.8 புள்ளிகளுடன் தங்கம் வென்று அசத்தினார். 

சீனியர் பிரிவில் இளவேனிலுக்கு கிடைக்கும் இரண்டாவது தங்கம் இதுவாகும். இதற்கு முன்பு கடந்த ஆகஸ்ட் மாதம் பிரேசிலில் நடந்த உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியிலும் இளவேனில் தங்கம் வென்றார். 

முன்னதாக இதே சீனா உலகக்கோப்பை போட்டியில் ஹரியானாவைச் சேர்ந்த 17  வயதான மனு பாக்கர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் (ஜூனியர்) பிரிவில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.