தன்னைப்போல பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு உதவும் ஈரானிய அகதி 

ஞாயிறு சனவரி 10, 2021

மனுஸ்தீவில் செயல்பட்ட ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் பல ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டிருந்த ஈரானிய அகதியான அமீர் சஹராகார்ட்-க்கு கனடாவின் அகதிகள் ஸ்பான்சர் திட்டத்தின் கீழ் அந்நாட்டில் புதிய வாழ்க்கை அமைந்துள்ளது. 

சுமார் 7 ஆண்டுக்காலம் ஆஸ்திரேலிய தடுப்பில் கழித்த அமீர், கடந்த 2019ம் ஆண்டு கனடா அகதிகள் ஸ்பான்சர் திட்டத்தின் மூலம் கனடாவில் மீள்குடியேறியிருக்கிறார். தற்போது அவர் கனடாவில் நிரந்தரமாக வசிப்பதற்கான உரிமையைப் பெற்றிருக்கிறார். 

“முதலில் நான் கனடாவுக்கு வரும் பொழுது, மன ரீதியாக உடல் ரீதியாக மிகவும் களைத்துப் போயிருந்தேன். ஆனால் இங்கு புதியதொரு வாழ்க்கையைத் தொடங்க எனக்கு உதவியவர்கள் துணையாக இருந்தார்கள்,” என்கிறார் அமீர். 

இந்த சூழலில், எந்த திட்டத்தால் அமீர் கனடாவில் குடியேறினாரோ அந்த திட்டத்தின் மூலம், தன்னைப்போன்று பாதிக்கப்பட்ட இரு அகதிகளுக்கு உதவும் செயலில் அவர் ஈடுபட்டிருக்கிறார். 

அந்த வகையில், ஈரானிலிருந்து வெளியேறி இந்தோனேசியாவில் நாடற்றவர்களாக சுமார் 7 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் பரீபா மற்றும் அவரது 22 வயது மகளான ஷகாயேக் ஆகியோரை அகதிகள் ஸ்பான்சர் திட்டத்தின் கீழ் கனடாவுக்கு அழைக்கும் முயற்சியில் அமீர் ஈடுபட்டிருக்கிறார். 

தனக்கு கிடைத்த உதவியை பிறருக்கு திருப்பிச் செலுத்தும் செயலாக அமீரின் முயற்சி பார்க்கப்படுகின்றது.