தந்தை, மகன் மரண வழக்கு: இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்...

செவ்வாய் ஜூன் 30, 2020

சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த வழக்கில் நீதிபதி அறிக்கை, சிபிசிஐடி விசாரணை உள்பட இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் தொகுக்கப்பட்டுள்ளன.

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் மரணம் குறித்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, முதல்நிலை பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவர் அளித்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இந்த வழக்கை பொறுத்தவரை நீதிமன்றம் தாமதத்தை விரும்பவில்லை. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் நீதியை எதிர்நோக்கி காத்துள்ளனர். ஆகவே, ஒரு நொடி கூட வீணாகக்கூடாது. தந்தை மற்றும் மகன் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் வரை சிபிசிஐடி விசாரிக்கலாம் என்றும் நெல்லை சிபிசிஐடி அதிகாரி இன்றே விசாரணை தொடங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்:-

* தூத்துக்குடி மாவட்ட கூடுதல் எஸ்.பி. மற்றும் டி.எஸ்.பி. காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம். நீதிபதியை தரக்குறைவாக பேசிய காவலர் மகாராஜன் பணியிடை நீக்கம்

 

* உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையால் வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் காவல் நிலையம் கொண்டு வரப்பட்டது. மாஜிஸ்திரேட் விசாரணைக்கு போலீஸ் ஒத்துழைப்பு தரவில்லை என்ற புகாரில் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வழிகாட்டுதலின்படி நடவடிக்கை

 

* சாத்தான்குளத்தில் மாஜிஸ்திரேட்டை அவமதித்த விவகாரத்தில் கூடுதல் எஸ்.பி, டிஎஸ்பி, காவலர் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நேரில் ஆஜர்

 

* சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தடயங்கள் சேகரிப்பு

 

* சாத்தான்குளம் காவல்நிலையத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் பணியில் இருப்பர். தாசில்தார், துணை தாசில்தார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் இருப்பார்கள்-  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் 

 

* தந்தை, மகன் உடலில் அதிக காயங்கள் இருந்ததால் வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது- உயர்நீதிமன்ற மதுரை கிளை

 

* மாஜிஸ்திரேட்டை காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் காவலர்கள் அவமதித்தது அதிர்ச்சி அளிக்கிறது - உயர்நீதிமன்ற மதுரை கிளை

 

* மாஜிஸ்திரேட்டிடம் மன அழுத்தத்தில் காவலர்கள் தவறு செய்துவிட்டனர்- அரசு தரப்பில் விளக்கம்

 

* மாஜிஸ்திரேட்டை மரியாதை குறைவாக பேசியவர்கள் விளக்கமளிக்க உயர்நீதிமன்ற கிளை கெடு

 

*  ஜெயராஜ், பென்னிக்ஸ் உடலில் அதிக காயங்கள்- நீதிபதிகள்

 

* ஜெயராஜ், பென்னிக்ஸை சிறையில் அடைக்க உடல்தகுதி சான்று அளித்த மருத்துவர் திடீரென விடுப்பில் சென்றார்.

 

* தூத்துக்குடி எஸ்.பி. அருண் பாலகோபாலனை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு. புதிய எஸ்.பி.யாக ஜெயக்குமார் நியமனம்

 

* ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை விடிய விடிய போலீசார் லத்தியால் அடித்தனர் என நேரடி சாட்சி வாக்குமூலம் அளித்துள்ளார் - உயர்நீதிமன்ற பதிவாளருக்கு மாஜிஸ்திரேட் பாரதிதாசன் அனுப்பிய அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

 

* சாத்தான்குளம் காவல் நிலையம் வருவாய்த்துறை கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் மீண்டும் நேரில் சென்று விசாரணை

 

* சாத்தான்குளம் தந்தை-மகன் மரண வழக்கு குறித்த ஆவணங்கள் நெல்லை சரக டிஐஜி-யிடம் ஒப்படைப்பு

 

* மாஜிஸ்திரேட் பாரதிதாசனின் விசாரணை அறிக்கை, முதல்நிலை உடற்கூராய்வு அறிக்கை ஒப்படைப்பு 

 

* தந்தை, மகன் உடல்களில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் காயங்கள் இருந்ததாக தகவல்

 

* தந்தை, மகன் சித்ரவதை மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை தொடங்கியது

 

* நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபுவிடம் இருந்து ஆவணங்கள் அனைத்தையும் பெற்றுக்கொண்டார் சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார்

 

* தந்தை, மகன் சித்ரவதை மரணம் தொடர்பான வழக்கில் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் நீதித்துறை நடுவர் பாரதிதாசன் ஆய்வு. ஜெயராஜ், பென்னிக்ஸுக்கு மருத்துவ பரிசோதனை செய்தது தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தார்.

 

* தந்தை, மகன் சித்ரவதை மரணம் தொடர்பான வழக்கில் டிஎஸ்பி பரத் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர் 

 

* சாத்தான்குளம் காவல்நிலையத்தில் இருந்து கோவில்பட்டி சிறைக்கு தந்தை, மகனை அழைத்துச் சென்ற தனியார் வாகனத்தின் ஓட்டுநரும் விசாரணைக்கு ஆஜர்

 

* சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளராக ராமநாதனை நியமித்து டிஜிபி திரிபாதி உத்தரவு