தந்திரத்தை நாம் ஆயுதமாக்கினால் அதுவே நம்மைத் திருப்பித் தாக்கும்!

புதன் செப்டம்பர் 11, 2019

மகாத்மா காந்தியை கோட்சே என்பவன் துப்பாக்கியால் சுடுகிறான்.துப்பாக்கிக் குண்டுகளை நெஞ்சில் தாங்கியபடி நிலத்தில் வீழுகின்ற காந்தியடிகள் தன் உயிர்பிரிவதற்கு முன்னதாக ஒரு விடயத்தைக் கூறுகிறார்.

அது என்னவாக இருக்கும் என்று பலரும் சிந்திக்கலாம். உயிர் பிரியப் போகிறது. அந்தச் சந்தர்ப்பத்தில் ஒருவர் சொல்லக்கூடிய விடயம் தான் சார்ந்து அல்லது தன் குடும்பம் சார்ந்து அல்லது தன் சொத்து உடைமை என்பன குறித்ததாகவே இருக்கும்.

ஆனால் காந்தியடிகள் அவ்வாறு எதனையும் சிந்தித்திலர். தன் உயிர் பிரிய முன்பாக தான் கூறவேண்டிய ஒரு முக்கிய விடயம் உண்டென அந்தச் சூழ்நிலையிலும் அவர் நினைக்கின்றார்.

அது என்னவென்றால்; தன்னைச் சுட்ட வரைத் தண்டித்து விடாதீர்கள். அவரை மன்னித்து விடுங்கள். நான் மன்னித்து விட்டேன் என்பதுதான் காந்தியடிகளின் இறுதி வார்த்தை.இதனாலேயே காந்தியடிகளின் அகிம்சையை - அவரை இந்த உலகம் போற்றுகிறது. பின்பற்றுகிறது.

ஆக, எதையும் நேர்மையாக, உண்மையாக அணுகுவது எந்தக் காலத்திலும் எங்கள் மீது நம்பிக்கையைத் தரும்.

நம்பிக்கை என்பது வாழ்க்கையின் அடித்தளம். அதனைக் காப்பாற்றுவது மிகவும் முக்கியமானது.ஒருவர் ஒரு விடயத்தை இன்னொருவரிடம் நம்பிக் கூறுகின்றார். இங்கு தெரிந்து கொண்ட தகவலைப் பாதுகாப்பதும் குறித்த விடயத்தைத் தெரிவித்தவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்து கொள்வதென்பதும் தர்மமாகும்.

இந்தத் தர்மத்தை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். இதை விடுத்து எங்களுக்கு ஏற்றாற்போல் எதுவும் செய்வோம் என்று யார் நினைத்தாலும் அவர்கள் தர்மத்தை மீறுபவர்களாக இருப்பது மட்டுமன்றி,தந்திரத்தைப் பிரயோகிக்கின்றனர் என்பதும் கவனிக்கத்தக்கது.

தந்திரங்கள் உடனடி நன்மை தருவது போல இருக்கும். ஆனால் அதுவே நம்மைத் திருப்பித் தாக்கும் என்பதை ஒவ்வொருவரும் தங்கள் மனதில் பதித்து வைத்திருக்க வேண்டும்.இதற்கு நல்ல உதாரணம் 1978இல் ஜே.ஆர். ஜெயவர்த்தன கொண்டு வந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையாகும்.

தானும் தனது ஐக்கிய தேசியக் கட்சியும் ஆட்சிப்பீடத்தில் இருக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் அதிகூடிய காலம் ஆட்சியில் இருந்தது சிறீலங்கா சுதந்திரக் கட்சி எனும்போது ஜே.ஆர். ஜெய வர்த்தனவின் தந்திரம் எப்படி அமைந்தது என்பதை அறிய முடியுமல்லவா.

ஆக, தந்திரங்கள் ஒருபோதும் வெற்றி தராது என்பது சத்தியமான உண்மை. 

நன்றி.வலம்புரி