தனுஷ்கோடியில் ரூ.7 கோடியில் கலங்கரை விளக்கம்!

புதன் பெப்ரவரி 12, 2020

தனுஷ்கோடியில் ரூ.7 கோடியில் அமையும் கலங்கரை விளக்கம் கட்டுமான பணிக்கு 18-ந் திகதி பூமி பூஜை நடக்கிறது.

ராமேசுவரத்தில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, தனுஷ்கோடி. சுற்றுலா தலங்களில் ஒன்றான தனுஷ்கோடி கடல் பகுதியை நம்பி கம்பிப்பாடு, பாலம், எம்.ஆர்.சத்திரம் ஆகிய பகுதிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. அது போல் தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரையில் மத்திய அரசின் கப்பல் போக்குவரத்து துறையின் சார்பில் மீனவர்களின் வசதிக்காக புதிதாக கலங்கரை விளக்கம் கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.

இதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை நேற்று கலங்கரை விளக்கங்களின் இயக்குனர் வெங்கட்ராமன் அதிகாரிகளுடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து ராமேசுவரம் காந்திநகரில் செயல்பட்டு வரும் கலங்கரை விளக்க அலுவலகம் வந்த அவர், அங்கு வைக்கப்பட்டிருந்த தனுஷ்கோடியில் அமையும் கலங்கரை விளக்கத்தின் மாதிரியையும் ஆய்வு செய்தார்.

பின்பு இயக்குனர் வெங்கட்ராமன் கூறியதாவது:-

தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரையில் ரூ.7 கோடியில் புதிதாக கலங்கரை விளக்கம் கட்டப்பட உள்ளது. இந்த கலங்கரை விளக்கத்தின் பணியானது வருகிற 18-ந் தேதி தொடங்கி வைக்கப்படுகிறது. 50 மீட்டர் உயரத்தில் இந்த கலங்கரை விளக்கம் கட்டப்படும். அதன் மேல் பகுதியில் 18 கடல் மைல் தூரத்திற்கு ஒளி வீசும் திறன் கொண்ட மின் விளக்கு பொருத்தப்படும்.

மேலும் கலங்கரை விளக்கத்தின் மேல்பகுதியில், கடல் எல்லையை கண்காணிக்கவும், மீனவர்களை பாதுகாக்கவும் ரேடார் கருவியும் பொருத்தப்படும். கலங்ரை விளக்கத்துடன் இணைந்த கட்டிடத்தில் மின் அறை, உபகரண அறை, பாதுகாவலர் அறை ஆகியவற்றுடன், பூங்கா மற்றும் விளையாட்டு உபகரணங்களும் இடம் பெற உள்ளன.

ஒரு வருடத்தில் கலங்கரை விளக்கத்தின் பணியானது முடிக்கப்படும். சூரிய ஒளி மின்சாரம் மூலம் இந்த கலங்கரை விளக்கம் செயல்படும். இந்த கலங்கரை விளக்கமானது ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடி பகுதியில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.