தோள் கொடுப்போம் வளம் சேர்ப்போம்!

வியாழன் ஜூலை 18, 2019

ஐரோப்பிய நாடுகளுக்கு தற்போது தமிழர் தாயகத்தின் உற்பத்திப் பொருட்கள் பெருமளவில் வரத்தொடங்கியுள்ளன. குறிப்பாக கற்பகதரு அள்ளிக்கொடுக்கும் பொருட்களின் வருகை இதில் மிகவும் முக்கியமானதாகும். புழுக்கொடியல், பனங்களி,பனங்கற்கண்டு, பனப்பழப் பானம் என்வனவற்றுக்கும் அப்பால் யாழ்ப்பாணத்துப் பனங்கள்ளு  தமிழர்களின் நாவில் சுவையூற வைக்கும்.

தமிழர்களுக்கு இயற்கை தந்த கொடைகளில் பனை முதன்மையானது. அந்தப் பனையில் அடியில் இருந்து நுனி வரைக்கும் எந்தப்பொருளும் வீண் போவதில்லை. அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம்போல் தன் நீண்ட ஆயுள் முழுவதும் அது அள்ளி அள்ளிக் கொடுத்துக்கொண்டே இருக்கும். இயற்கையான வாழ்விற்கு மட்டுமல்ல உடல் நலத்திற்கும் பனையின் உணவுப் பொருட்கள் பெரும் வலிமை வாய்ந்தவை.

111

போரினால் இலட்சக் கணக்கான பனைகள் அழிக்கப்பட்டிருந்தாலும், தமிழர் தாயகத்தில் இந்தப் பனை எங்கும் நிறைந்து காணப்படுகின்றது. இதிலிருந்து வருமானம் பெற பல வழிகள் இருக்கின்றன.

தாயக மக்களுக்கு இந்த வருமானத்தைப் பெற்றுக்கொடுக்க VSs என்ற நிறுவனம் முனைந்திருக்கின்றது.

கனடாவில் இருந்து தாயகம் சென்றுள்ள திரு. சுகந்தன் என்பவர் இந்நிறுவனத்தை உருவாக்கி இதற்கான பெரும் பணியில் இறங்கியிருக்கின்றார்.

111

பனைப் பொருட்கள் மட்டுமன்றி தோலகட்டியில் தயாராகும் இயற்கை நெல்லிரசம் உட்பட தாயக மக்களின் உடல் நலத்திற்கு தீங்கில்லாத உற்பத்திப் பொருட்களை புலம்பெயர்ந்த மண்ணிற்கு எடுத்துச் செல்லும் பணியில் இறங்கியிருக்கின்றார்.

உள்ளூர் தயாரிப்புக்களாக, தாயகத்திற்குள் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருந்த பொருட்களை, சர்வதேச தரத்திற்கும், தகுதிக்கும் ஏற்றதுபோல் மாற்றியமைத்து இன்று கனடா, பிரான்ஸ் உட்பட ஐரோப்பிய நாடுகளுக்கும் அந்நாடுகளின் சட்டதிட்டக் கட்டுப்பாடுகளுக்கு ஏற்பவும் ஏற்றுமதி செய்யும் அளவிற்கு வளர்த்தெடுத்திருக்கின்றார். 

இவரது முயற்சியை கனடா அரசு பராட்டியிருக்கின்றது. சிறீலங்காவிற்கான கனேடியத் தூதர் கள்ளை நேரில் வாங்கிப் பார்த்துப் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

இதுவொரு வர்த்தக நலன் சார்ந்த செயற்பாடு என்பதற்கும் அப்பால், தாயக மக்களின் பொருளாதார நலத்தைக் கட்டியயழுப்புவதே தன் நோக்கம் என்கின்றார் சுகந்தன். இந்தப் பொருட்களை புலம்பெயர்ந்த நாடுகள் எங்கும் எடுத்துச் செல்வதில் தீவிர கவனம் செலுத்தியிருக்கின்றார்.

பொருட்களின் விற்பனை அதிகரிக்கும்போது, மக்களின் வேலை வாய்ப்பும் தாயகத்தில் அதிகரிக்கும், பல்வேறு குடிசைத் தொழில்கள் உருவாவதற்கான வாய்ப்பு ஏற்படும். இது மக்களின் பொருளாதாரத்தை பெருமளவிற்கு உயர்த்தும்.

111

அதேவேளை, விற்பனை மேலும் மேலும் அதிகரிக்கும்போது இவற்றை உற்பத்தி செய்யும் பிரிவுகளை பெரும் தொழிற்சாலைகள் போல் உருவாக்கி, பலருக்கும் வேலை வாய்ப்புக்களை வழங்கும் கனவுடனும் உள்ளார்.

சர்வதேச சந்தையில் தமிழர்கள் மட்டுமன்றி வேற்று நாட்டவர்களுக்கும் இந்தப் பொருட்களை அறிமுகப்படுத்துவதன் ஊடாக ஈழத்தில் பனையை நம்பி வாழும் சமூகங்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற முடியும் என்று கூறுகின்றார்.

இப்போது வட பகுதியில் உள்ள சுமார் 10 வீதமான பனை மரங்களே தேவைக்காகப் பயன்படுத்தப்படுவதாகவும், விற்பனை வளம் அதிகரிக்கும்போது ஏனைய 90 வீதமான பனைகளையும் பயன்படுத்தும் வாய்ப்புக்கள் ஏற்படும் என்று கூறுகின்றார்.  

111

மீனைக் கொடுக்காதே மீன் பிடிக்கக் கற்றுக்கொடு என்பது பிராஞ்சின் மிகச் சிறந்த பழமொழி.

-மது அருந்துதால் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பதாகும்-

நன்றி: ஈழமுரசு