தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களை திறக்க அனுமதி

ஞாயிறு ஜூன் 07, 2020

தமிழக தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களை நாளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய கலாச்சார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் மாதம் 25-ந் திகதி முதல் அமல்படுத்தப்பட்டு வருகிற 30-ந் தேதி வரை அமலில் உள்ளது.

 ஆனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னதாகவே வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்க்கும் வகையில் சுற்றுலா தலங்கள் அனைத்தும் மார்ச் 18-ந்திகதி முதல் மூடப்பட்டன. அதன்படி தமிழகத்தில் தஞ்சையில் பெரியகோவில், அரண்மனை, அருங்காட்சியகம் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் நாளை திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக மத்திய கலாச்சார துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

 

தஞ்சை  பெரியகோவில்

 

தமிழகத்தில் சென்னை, காஞ்சீபுரம், மாமல்லபுரம், தஞ்சாவூர், மதுரை, சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. தமிழகத்தில் சுற்றுலா தலங்களாக சேர, சோழ, பாண்டிய மற்றும் பல்லவர்கள் கால நினைவுச்சின்னங்கள் மட்டும் 600-க்கும் மேற்பட்டவை உள்ளன. சுற்றுலா தலமாக விளங்கும் கோவில்கள் மட்டும் 21 ஆயிரத்து 600 உள்ளன. இந்த சுற்றலா தலங்களில் மட்டும் 360 பேர் வழிகாட்டிகளாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சுற்றுலா தலங்களை ஜூன் 8ம் தேதி முதல் திறக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், தொல்பொருள் ஆராய்ச்சிகள், தேசத்தின் கலாச்சாரத்தை பராமரிக்கும் சின்னங்கள் திறப்பு உள்ளிட்டவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு முழுமையாக பின்பற்றப்பட வேண்டும் என மத்திய அமைச்சர் பிரகலாத்சிங் படேல் தெரிவித்துள்ளார்.