தொடர் கனமழை- அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் முற்றிலும் சேதம்!

ஞாயிறு சனவரி 17, 2021

டெல்டா மாவட்டங்களில் தொடரும் கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் முற்றிலுமாக சேதம் அடைந்தன, தாங்கள் ஏக்கருக்கு 30 ஆயிரம் செலவு செய்துள்ளதாக கூறும் விவசாயிகள், அதனையாவது எங்களுக்கு நிவாரணமாக தாருங்கள் என கோரிக்கை வைக்கின்றனர்.

10 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் டெல்டா முழுவதும் சுமார் 5 லட்சம் ஏக்கரும், தஞ்சை மாவட்டத்தில் மட்டும் ஒன்றரை லட்சம் ஏக்கர் நெற்பயிர்களும் நீரில் முழ்கியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை நீடித்து வருவதால் விளைநிலங்களில் நீர் வடியாமல் ஒரு அடிக்கு மேல் தண்ணீர் நிற்கிறது.

இதனால் பயிர்கள் அழுகியும், நெல்மணிகள் பதராகவும் மாறி உள்ளன. ஏக்கருக்கு 30 ஆயிரம் செலவு செய்துள்ளதாக கூறும் விவசாயிகள், அதனையாவது நிவாரணமாக தாருங்கள் என கோரிக்கை வைக்கின்றனர்.

இதுவரை ஏக்கருக்கு 30,000 வரை செலவு செய்து அறுவடை நேரத்தில் பயிர்கள் மழைநீரீல் மிதப்பதாகவும், தொடர்ந்து தண்ணீர் வடியாததால் அழுகும் நிலை ஏற்பட்டு பயிர்கள் முளைக்க தொடங்கிவிட்டதாகவும், மறுபுறம் பயிர்கள் அனைத்தும் பதறாக போய்விட்டதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.