தொடரும் இலங்கை கடற்படையினரின் அட்டூழியம், மீண்டும் 5 மீனவர்கள் கைது

ஞாயிறு நவம்பர் 01, 2015

ராமவேஸ்வரத்திலிருந்து நேற்று மீன் பிடிக்கச் சென்ற ஐந்து தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். வழக்கம் போல நேற்று காலை 500க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இந்த நிலையில் நேற்றைய இரவு மீன்பிடித்து கொண்டிருந்த போது வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டியடித்துள்ளனர். 

அந்த நேரத்தில் ஆரோக்யம் என்பவரது விசைப்படகினை கைப்பற்றிய இலங்கை கடற்படையினர்,  அதிலிருந்த ஆரோக்யம், பிரசாந்த், ராஜு உள்பட 5 மீனவர்களையும் சிறைபிடித்து மன்னாரில் உள்ள கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. 

தற்போதைய அளவில் ராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகை, காரைக்கால் பகுதிகளை சேர்ந்த 120 மீனவர்கள் இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள் எனவும், அதற்கான சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நேற்று இலங்கை நீரியல் மற்றும் மீன்வளத் துறை அமைச்சர் மகிந்தா அமரவீர அறிவித்திருந்த நிலையிலேயே மீனவர்கள் கைது மீண்டும்  நடந்துள்ளது. இது ராமேஸ்வர மீனவர்கள் மத்தியில் மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.