தொடருந்து சேவைகள் மேலும் இரத்தாகும் அபாயம்

புதன் ஜூன் 29, 2022

எரிபொருள் இல்லாததன் காரணமாக,தொடருந்து திணைக்கள ஊழியர்கள் தமது பணியிடங்களுக்குச் செல்ல முடியாமையால் தொடருந்து சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்த திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் (போக்குவரத்து) காமினி செனவிரத்ன, எதிர்வரும் நாட்களில் மேலும் பல தொடருந்து சேவைகள் இரத்துச் செய்யப்படலாம் என்று தெரிவித்தார்.  

நேற்றும் (28) இன்றும் (29) பல தொடருந்து சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் நாடு முகங்கொடுத்துள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடு எதிர்வரும நாட்களில் நிலைமை மேலும் மோசமடையலாம் என்றார்.

கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு மற்றும் காங்கேசன்துறைக்கு புறப்படவிருந்த தொடருந்துகள் இரத்து செய்யப்பட்டதாக தொடருந்து  நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்தது.

தொடருந்து  நிலைய அதிபர்கள் மற்றும் கனிஷ்ட ஊழியர்கள், எரிபொருள் இன்மையால் கடமைக்கு சமுகமளிக்கமுடியாமையே இதற்கான காரணம் என்று சங்கம் சுட்டிக்காட்டியது.

கோட்டையில் இருந்து இன்று (29) காலை 6.35 மணிக்கு மட்டக்களப்புக்கு புறப்பட வேண்டிய உதயதேவி கடுகதி ரயிலும், 6.05 மணிக்கு காங்கேசன்துறைக்கு புறப்பட வேண்டிய யாழ்தேவி ரயிலும் இரத்து செய்யப்பட்டதாக சங்கம் குறிப்பிட்டது.

நேற்று (28) இரவு 9.45 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து பொல்கஹாவெல நோக்கி புறப்படவிருந்த தொடருந்து , கட்டுப்பாட்டாளர்கள் இல்லாத காரணத்தால் இரத்து செய்யப்பட்டிருந்ததுடன், இன்று (29) மேலும் சில தொடருந்து  சேவைகள் இரத்துச் செய்யப்பட்டன.

கொழும்பு கோட்டை உட்பட நாடளாவிய ரீதியிலுள்ள பல தொடருந்து நிலையங்களில் மக்கள் வெள்ளம் அலை மோதியதுடன், பலர் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.