தோட்டத் தொழிலாளர்க்கு மாதச் சம்பளம் !

வெள்ளி ஜூலை 19, 2019

தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் வழங்குவதற்கான தீர்மானம் ஒன்றினை ஜெனிவாவில் உள்ள ஐக்கிய சாடுகள் சபை சர்தேச தொழிலாளர் அமைப்பு ஆகியன இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஜெனிவா சென்று நாடு திரும்பிய, ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளரும் இணைத் தலைவருமான டொக்டர் கே.ஆர் . கிசான் தெரிவித்தார். 

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், கடந்த 200 வருடங்களுக்கு மேலாக தோட்டத் தொழிளர்கள் இந்த நாட்டுக்காக உழைத்து வருகிறார்கள். அவர்களுக்கு என்று இந்த நாட்டில் ஒன்றும் இல்லை. பாராளுமன்றத்தில் அமைச்சர்கள் உட்பட 30 அங்கத்தவர்கள் இருந்தும் இவர்களுக்கு நியாயமான சம்பளத்தினை கூட பெற்றுக்கொடுக்க முடியவில்லை. காலம் காலமாக ஒரு சிறிய தொகையினை உயர்த்திக் கொள்வதற்கு கூட இவர்கள் போராட வேண்டிய நிலை காணப்பட்டன. 

அதே தோட்டத் தொழிலளர்களிடம் இருந்து சேமலாப நிதியம், சேமலாப நலன்புரி நிதியம் ஆகிய அறிவிடப்படுகின்ற போதிலும் அவர்களுக்கு மாதச் சம்பளம் ஒன்று வழங்கப்படுவதில்லை. அது மாத்திரமன்றி அவர்களுக்கு காணி இல்லை சுகாதாரம், சிறந்த கல்வி, போசாக்கான உணவு இவை எதுவுமே இவர்களுக்கு கிடைப்பதில்லை. 

அத்தோடு இன்று வெளிநாட்டில் ஒரு நாள் வேலை செய்பவர்களுக்கு கூட அடிப்படை சம்பளம் வழங்கப்படுகின்றது. அப்படி என்றால் 12 மணித்தியாலம் வேலை செய்யும் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏன் மாதச் சம்பளம் வழங்க முடியாது என கேள்வி எழுப்பினேன். இது தொடர்பாக மனித உரிமைகள் சபையினால் ஆராயப்பட்டன. அது மாத்திரம் இன்றி தோட்டத் தொழிலாளர்களின் நிலங்கள் துண்டாப்பட்டு இரண்டு ஏக்கர் காணி வழங்கப்படுகின்றன. இதனால் எதிர்காலத்தில் தொழிலாளர்கள் துண்டாடப்படுவதுடன் தொழில் இல்லாது போகும் அபாயமும் உருவாகும். இன்று எத்தனையோ தொழிற்சாலைகள் மூடப்பட்டு பலருக்கு தொழில் வாய்ப்பு இல்லாது போய்வுள்ளது. 

இதனை பேச வேண்டிய அரசியல் தலைவர்கள் மற்றும் தொழிற்சங்கவாதிகள் கண்டு கொள்ளாது இருப்பதன் காரணமாகவும் அரசாங்கம் இவர்களுக்கு உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்காததன் காரணமாகவும் நான் இது தொடர்பாக கடந்த 03 ஆம் திகதி நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மகா நாட்டிலும் சர்வதேச தொழிலாளர் அமைப்பிடமும் முறையிட்டேன். 

இதனை ஏற்றுக்கொண்ட ஐக்கிய நாடுகள் சபை இது தொடர்பாக ஆராய்வதற்கு இலங்கைக்கு ஒரு குழுவினை அனுப்பி ஆராய்ந்த பின் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளத்தினை பரிந்துரைப்பதாகவும் தெரிவித்தனர். 

அத்தோடு நின்று விடாமல் மலையத்தில் வாழும் அரச மற்றும் வேலையற்றவர்களுக்கு காணி உறுதிகள் வழங்கப்பட வேண்டும் என்பதனை அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். எனவே, இந்த விடயங்கள் தொடர்பாக எதிர்காலத்தில் பாரிய அளவில் அதற்கான செயத்திட்டங்களை சர்வதேச மட்டத்தில் நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்த அவர், வடக்கு கிழக்கு மக்களுக்கும் பிரச்சினை இருக்கின்றது. 30 பாராளுமன்ற உறுப்பினர் இருக்கின்ற பாராளுமன்றத்தில் வடக்கு கிழக்கு பகுதியாக இருந்தாலும் சரி மலையக பகுதியாக இருந்தாலும சரி அபிவிருத்தி இல்லாத ஒரு நிலையினையே தமிழ் மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர். 

வடக்கு கிழக்கில் காணியினை பற்றி மட்டும் பேசுவதை மாத்திரமே தமிழ் தேசிய கூட்டமைப்பு கொண்டுள்ளன ஆனால் மக்களுக்கு தேவைபடுவது பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் போன்றவை பொது மக்கள் நாட்டை பிரித்து கேட்கவில்லை அவர்களுக்கு தேவையானவை அடிப்படை தேவைகள், உரிமைகள் அவர்கள் கேட்கின்றனர் என மேலும் தெரிவித்தார். 

இதன் போது ஜெனிவா சென்று தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் தொடர்பாக எடுத்துரைத்தமைக்காக தோட்ட மக்கள் விமான நிலையம் சென்று அவருக்கு பொன்னாடை அணிவித்து கிரிடம் சூட்டி கௌரவித்தனர்.