தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகள் கோழைகள் பலவீனமானவர்கள்! வேளாண் அமைச்சர் -

புதன் சனவரி 20, 2021

அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராடி வருகிறார்கள்.50 நாட்களுக்கும் மேலாக நடந்து கொண்டிருக்கும் போராட்டம் மேலும் தீவிரமடைந்து வருவதால், விவசாயிகளிடம் பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகள் மத்திய அரசின் நடத்தியது.

இதில் தீர்வு எதுவும் எட்டப்படாமல் உள்ளது. வேளாண் சட்டத்தை இரத்து செய்தால் மட்டுமே எங்கள் போராட்டம் கைவிடப்படும் என்று போராடும் விவசாயிகள் திட்டவட்டமாக அறிவித்திருந்தார்கள். 

இந்நிலையில் இவர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாகம, மனவலிமை இல்லாதவர்கள்தான் தற்கொலை செய்துகொள்வார்கள் அதற்கு அரசை குறை சொல்ல முடியாது என்று கர்நாடகாவை சேர்ந்த பாஜக அமைச்சரின் பேச்சால் விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மைசூருவில் செய்தியாளர்களிடம் பேசிய பி.சி.பாட்டீல் விவசாயிகள் தற்கொலை முடிவுக்கு அரசு வகுக்கும் கொள்கைகள் காரணம் கிடையாது. விவசாயிகள் மட்டுமா தற்கொலை செய்து கொள்கிறார்கள், தொழிலதிபர்களும்தான் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

அனைத்துத் தற்கொலைகளையும் விவசாயிகள் தற்கொலை என்று வர்ணிக்க முடியாது.மனதளவில் உறுதியற்ற பலவீனமான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர், இதற்கெல்லாம் அரசைக் குறை கூற முடியாது. அந்த மரணங்களுக்கெல்லாம் அரசை விமர்சிக்கலாமா?

சில வேளைகளில் அவர்கள் மனம் பலவீனமடைகிறது, தற்கொலை செய்து கொள்கிறார்கள்” என்றார்.

இதே பாட்டீல்தான் டிசம்பர் 3ம் தேதி குடகு மாவட்டத்தில் பேசும்போது, தற்கொலை செய்யும் விவசாயிகள் கோழைகள், தன் குழந்தைகள், மனைவியைக் காப்பாற்ற முடியாத கோழைகள்.

தண்ணீரில் விழுந்தால் நாம் தான் நீச்சல் அடித்து வெல்ல வேண்டும்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.