தற்போது நடைமுறையில் உள்ளது முடக்கல்நிலையா?

ஞாயிறு ஓகஸ்ட் 22, 2021

 அரசாங்கம் பத்து நாள் முடக்கல் நிலையை அறிவித்ததுமுதல், முடக்கல் நிலைக்கு பல முரண்பட்ட சொற்கள் பயன்படுத்தப்படுவதாலும்யார் வெளியில் செல்லலாம் எந்தவகையான நிறுவனங்கள் செயற்படலாம் என்பதுகுறித்து முரண்பாடானபட்டியல்கள் வெளியாகி வருவதாலும் பொதுமக்கள் குழப்பத்தில் சிக்குண்டுள்ளனர்.

அரசாங்கம் கூட்டாக ஒரு முடிவை எடுக்கமுடியாத நிலையில் உள்ளது என்ற கேள்வியும் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

மக்கள் ஏன் குழப்பமடைந்துள்னர்.

மக்கள் தற்போது நடைமுறையில் உள்ளது ஊரடங்கா அல்லது முடக்கல் நிலையா என்பது குறித்த குழப்பத்தில் சிக்குண்டுள்ளனர்.

ஒவ்வொரு அமைச்சும் தனது பட்டியலை வெளியிடுவதற்கு பதில் பொதுவான ஒரு பட்டியலை தயாரித்து அதனை ஊடகங்கள் மூலம் வெளியிடலாம்.

வெள்ளிக்கிழமை தான் தற்போது மும்முரமாக உள்ள டுவிட்டர் கணக்கில் அறிக்கையொன்றை வெளியிட்ட சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல நாடளாவியமுடக்கல் நிலை வெள்ளிக்கிழமை இரவு பத்து மணிமுதல் ஆகஸ்ட் 30 ம் திகதி முதல் நடைமுறையிலிருக்கும் என தெரிவித்தார்.

தனது டுவிட்டர் செய்தியில் அனைத்து அத்தியாவசிய சேவைகளும் இயங்கும் என அவர் குறிப்பிட்டார். அமைச்சரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து அத்தியாவசிய சேவைகள் என்பதற்குள் எந்த சேவைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்தது.

கடந்த முறை பலர் அத்தியாவசிய சேவைகள் என்பதை தங்களிற்கு சாதகமாக பயன்படுத்தியிருந்தனர். இதற்கு சிறிதுநேரத்தின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த இராணுவதளபதி சுகாதார அமைச்சர் அறிவித்த நாடாளாவிய முடக்கல் என்பதற்கு பதில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு என்பதை பயன்படுத்தினார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கின் கீழ் விவசாய ஆடைதொழில்துறையினர் சுகாதார பணியாளர்கள் கட்டுமான பணியாளர்கள் மருந்தகங்கள் ஏனைய அத்தியாவசிய சேவைகள் செயற்படலாம் என இராணுவதளபதி அறிவித்தார். இந்த அறிவிப்புகளிற்கு அப்பால் மக்கள் மத்தியில் சுப்பர்மார்க்கட்கள் இயங்கலாமா? இணைய விநியோகங்கள் இடம்பெறமுடியுமா? வங்கிகள் செயற்பட முடியுமா என்ற கேள்விகள் காணப்படுகின்றன – இவற்றிற்கு பதில் இல்லை.
இதன் காரணமாக பொதுமக்கள் பொருள்கொள்வனவிற்காக சுப்பர்மார்க்கெட்களிற்கு சென்றனர்.

வெள்ளிக்கிழமை மதியம் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவும் தனது பட்டியலை வெளியிட்டார். தனிமைப்படுத்தல் ஊரடங்கிற்கு மத்தியிலும் கட்டுமான தொழில்துறை இயங்கும் என அவர் அறிவித்தார்.


சனிக்கிழமை காலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேலகுணவர்த்தன சுகாதார அமைச்சின் சார்பில் அறிக்கையொன்றை வெளியிட்டார்.

யார் வெளியில் செல்லமுடியும்,சுப்பர்மார்க்கட்கள் இணையவிநியோகங்கள் இயங்குமா வங்கிகள் வெதுப்பகங்கள் இயங்குமா என்ற விபரங்களை அவர் வெளியிட்டார்.

இதன் பின்னர் சனிக்கிழமை மதியம் சுகாதார அமைச்சு இந்த பட்டியலில் மாற்றங்களை செய்து மேலும் ஒன்பது பிரிவுகளை சேர்த் புதிய பட்டியலை வெளியிட்டது.

இவ்வாறு தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட பட்டியல்கள் காரணமாக வீதிகளில் போக்குவரத்தினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸாருக்கு யாரை அனுமதிப்பது யாரை அனுமதிக்ககூடாது என்ற குழப்பநிலை காணப்படுகின்றது.