தடையை நீக்கிய இந்தோனேசியா

ஞாயிறு ஜூலை 31, 2022

இந்தோனேசியா மற்றும் மலேசியாவுக்கு இடையிலான தொழிலாளர் ஒப்பந்தம் மீறப்பட்டதை சுட்டிக்காட்டி மலேசியாவுக்கு இந்தோனேசிய தொழிலாளர்களை வேலைக்கு அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்த இந்தோனேசிய அரசு அத்தடையை நீக்கியுள்ளது. இதன் மூலம் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் மலேசியாவுக்கு இந்தோனேசியா தொழிலாளர்கள் அனுப்பப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தோனேசிய தொழிலாளர்களின் வருகை, தற்போது மலேசியாவின் பாமாயில் உற்பத்தியில் நிலவிவரும் தொழிலாளர் பற்றாக்குறை சமாளிக்க உதவும் எனக் கூறப்படுகிறது. இத்தடை நீக்கப்பட்டதன் மூலம் ஆயிரக்கணக்கான இந்தோனேசிய தொழிலாளர்கள் நாள்தோறும் மலேசியாவுக்குள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

இந்தோனேசிய தொழிலாளர்களை ஒரே வழியில் வேலைக்கு எடுப்பதற்கான சோதனை முறையை நடைமுறைப்படுத்த இரு நாடுகளும் ஒப்புக் கொண்டதையடுத்து, மலேசியாவுக்கு தனது தொழிலாளர்களை அனுப்ப இந்தோனேசியா ஒப்புக்கொண்டுள்ளது என மலேசிய மனிதவளத்துறை அமைச்சர் சரவணன் தெரிவித்திருக்கிறார். 

முன்னதாக, கடத்தல் மற்றும் தொழிலாளர்களை கட்டாய உழைப்பில் ஈடுபடுத்தும் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இணையவழி ஆட்சேர்ப்பு முறையை மலேசிய குடிவரவுத்துறை அதிகாரிகள் தொடர்ந்து பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதுவே மலேசியாவுக்கு தனது தொழிலாளர்களை அனுப்புவதை இந்தோனேசியா நிறுத்தியதற்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்டது. 

தோட்டத் தொழில் மற்றும் உற்பத்தி துறையில் இருக்கும் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க இந்தோனேசியா, வங்கதேசம், மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளை மலேசியா சார்ந்திருக்கிறது. 

கொரோனா பெருந்தொற்று சூழலினால் மலேசியாவுக்கு வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வருகை பெரிதும் குறைந்திருந்தது. கொரோனா சூழலுக்கு பிறகும் கூட மந்தகதியான அரசின் ஒப்புதல்கள், தொழிலாளர் பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளால் குறிப்பிடத்தகுந்த அளவில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மலேசியாவுக்கு  திரும்பிச் செல்லவில்லை.

மலேசியாவில் புலம்பெயர் தொழிலாளர்களை நடத்தப்படும் விதம் தொடர்பாக சர்வதேச மட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக கவலைகள் வெளிப்படுத்தப்பட்டு வருகிறது. தொழிலாளர்களை கட்டாய உழைப்பில் ஈடுபடுத்திய விவகாரத்தில் 7 மலேசிய நிறுவனங்களை அமெரிக்கா தடை செய்திருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.