தடையுத்தரவை நீக்குவதா? இல்லையா?

வெள்ளி பெப்ரவரி 14, 2020

கடந்த வருடம் பிரித்தானியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கழிவுகளை வேறு இடத்திற்கு கொண்டுச் செல்வதற்கு எதிராக விதிக்கப்பட்ட தடையுத்தரவை நீக்குவதா? இல்லையா? என்பது தொடர்பில் எதிர்வரும் மார்ச் மாதம் நான்காம் திகதி அறிவிக்கவுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து கழிவு பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடைவிதிக்க கோரி சுற்றுச்சூழல் நீதி மையத்தால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (13) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி ஏ.எச்.எம்.நவாஸ் மற்றும் அர்ஜூன் ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சட்டமா அதிபர் சார்பில் மன்றில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் நாயகம் மிலிந்த குணதிலக்க, துறைமுக பகுதியிலும் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையத்திலும் குவிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து நாட்டு கழிவுகளை அந்த நாட்டுக்கே மீள ஏற்றுமதி செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

எனினும் அந்த கழிவுகளை வேறு இடத்திற்கு கொண்டுச் செல்வதற்கு எதிராக விதிக்கப்பட்ட தடையுத்தரவால் மேற்குறித்த செயற்பாட்டுக்கு தடை ஏற்பட்டுள்ளதாக பிரதி சொலிசிட்டர் நாயகம் மிலிந்த குணதிலக்க தெரிவித்தார்.

எனவே அந்த கழிவுகளை மீள பொறுப்பேற்க இங்கிலாந்து அரசாங்கம் அக்கறை காட்டவில்லை என அவர் மன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இதனை கருத்திற் கொண்ட நீதிபதிகள் தேங்கியுள்ள கழிவுகளை வேறு இடத்திற்கு கொண்டுச் செல்வதற்கு எதிராக விதிக்கப்பட்ட தடையுத்தரவை நீக்குவதா? இல்லையா? என்பது தொடர்பில் எதிர்வரும் மார்ச் மாதம் நான்காம் திகதி அறிவிக்கவுள்ளதாக அறிவித்தனர்.