தடம் மாறியதா தமிழ்த் தேசியம்?

செவ்வாய் ஜூன் 04, 2019

அபிவிருத்தி அடைந்து வரும் நாடொன்றின் ஸ்திரத்தன்மை என்பது, அதன் இறையாண்மை, பொருளாதாரப் பெருக்கம், பாதுகாப்பு என்பவற்றின் மூலோபாயங்களிலேயே தங்கியுள்ளது.  

அந்த வகையில், வளர்முக நாடுகளைப் பொறுத்த வரையில், அவை தமது இறைமையில் தளர்வின்றிச் செயற்பட்ட போதிலும், பாதுகாப்பு உட்படப் பொருளாதார மேம்பாட்டில், பிறநாடுகளின் கடைக்கண் பார்வையின் அவசியத்தை எதிர்பார்த்தேயுள்ளன என்பதே யதார்த்தம்.  

 பொருளாதார பலம்வாய்ந்த நாடுகளைத் தவிர, ஏனைய நாடுகள் வௌிநாட்டு முதலீட்டாளர்களின் வருகை, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகையையே பெரிதும் நம்பியுள்ள நிலையில், இவ்வாறான நாடுகளில் ஏற்படும் அசம்பாவிதங்கள், பெரும் தாக்கத்தை உண்டுபண்ணிவிடும் என்பது மறுப்பதற்கில்லை.  

அவ்வாறானதொரு நிலையிலேயே, இலங்கை மீது உலக பயங்கரவாதத்தின் ஊடாக, ஏப்ரல் 21இல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ‘உலக பயங்கரவாதம்’ என்ற சொல்லுக்குள் அடங்கிவிடும் இந்தத் தாக்குதல், நூற்றுக்கணக்கான அப்பாவி மனித உயிர்களை இலக்கு வைத்ததாக இருப்பது, அசண்டை செய்து விடக்கூடிய விடயமல்ல.  

ஏற்கெனவே, இலங்கையின் புலனாய்வு அமைப்புகளின் தகவலையும் அது சார்ந்த புலனாய்வுப் பரிமாற்றங்களையும் உதாசீனம் செய்ததன் பிரதிபலனையே, இந்தத் தாக்குதல் ஏற்படுத்தியுள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதற்கு எடுத்துக்கொண்ட நடவடிக்கைகள், பாதுகாப்புத் தரப்பினர் மத்தியில், ஒருபடிநிலை உயர்ந்த மதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றால், ஏற்றாக வேண்டும்.  

இந்நிலையில், பாதுகாப்பைப் பலப்படுத்தும் நோக்கத்தோடு, மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள், வடக்கு மக்கள் மத்தியில், பெரும் அசௌகரியங்களையும் அதிர்வலைகளையும்  ஏற்படுத்தி இருக்கின்றன.  

இஸ்லாமியப் பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பது என்ற தொனிப்பொருளில் எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள், நாட்டுக்குத் தேவையான ஒன்றாக காணப்பட்டபோதிலும், அது வடக்கில் உள்ள மக்களின் இயல்பு நிலையை சஞ்சலப்படுத்துகின்ற ​வகையில் அமைந்திருப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது.   

வடக்கில், ஐந்து பேருக்கு ஓர் இராணுவம் என்ற ரீதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாகத் தமிழ் அரசியல் தலைமைகள் தெரிவித்து வரும் நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையைக் கருத்தில் கொண்டு அமுல்ப்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலைமை,  தேசியப் பாதுகாப்பு என்ற ரீதியில், இராணுவப் பிரசன்னமானது ஏற்றுக்கொள்ளமுடியாத விடயங்களாகும்.  

யுத்தம் முடிவடைந்து 10 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும்கூட, மேற்கொள்ளப்படும் இராணுவக் கெடுபிடிகள், நிம்மதியான வாழ்வியலைத் தேடிய மக்களுக்கு, இடையூறை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் அரசியல் தலைமைகள், இவ்வாறான எந்த இடர்பாடுகளுக்குள்ளும் சிக்கிக்கொள்ளாமையால், அதன் தாக்கத்தை உணராதவர்களாகவே உள்ளனர் என்பது மக்கள் கருத்தாகவுள்ளது.  

இந்நிலையிலேயே, வடக்கில் வவுனியா முதல் யாழ்ப்பாணம் வரையிலுமான பாதுகாப்பு நிலைமைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. இது, தமிழ் மக்களின் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளா என்றால் அதனைச் சிந்திக்க வேண்டிய நிலையிலும், அதனை மறுவிதத்தில் பார்க்க வேண்டிய நிலையிலும் தமிழ் மக்கள் உள்ளனர்.

அதாவது, வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேறு என்ற தமிழ்த் தலைமைகளே, தமது மக்களைக் காப்பதற்கு, இராணுவம் தேவை என்று சொன்ன சொல்லை வைத்து, இராணுவக்குவிப்பு நடத்தப்பட்டுள்ள நிலையில், வடக்கில் இராணுவத்தினரின் தேவை அத்தியாவசியம் என்பதனைச் சர்வதேச ரீதியான நிரூபிப்பதற்கான ஓர் எடுகோளாகவே இது உள்ளது.  

வவுனியா மாவட்டத்தில் மாத்திரம், நிரந்தரமாக ஐந்து சோதனைச்சாவடிகள் அண்மைய நாள்களில் போடப்பட்டுள்ள நிலையில், வடக்கு நோக்கி நகருகையில், மேலும் பல சோதனைச்சாவடிகளை எதிர்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கியம் உள்ளதென்பது உண்மையே.  

இச் சூழ்நிலையில், இலங்கையில் தஞ்சமடைந்திருந்த வெளிநாட்டு அகதிகளும் கூட, வடக்கு நோக்கியே நகர்த்தப்பட்டுள்ளனர்.  

நீர்கொழும்புப் பிரதேசத்தில் தங்கியிருந்த 1,600 ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான்,  சிரிய அகதிகள், ஏப்ரலில் இடம்பெற்ற அனர்த்தத்தின் பின்னர், தெற்கில் தங்க வைப்பதில் ஏற்பட்டிருந்த சிக்கல் நிலைமையும் அதன் பின்னரான காலத்தில் ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளின் இலங்கை மீதான பார்வையும் குறித்த அகதிகளைப் பத்திரமாகக் காக்க வேண்டிய நிலைக்கு தள்ளியிருந்தது.   

எனினும், இலங்கையில் வேறு எங்கும் தங்க வைக்க முடியாத நிலையிலேயே, வடக்கு நோக்கிக் குறித்த அகதிகள் நகர்த்தப்பட்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணமாக அமைவது, குறித்த அகதிகளின் பாதுகாப்பு தொடர்பாக, ஐ. நா மிக உன்னிப்பாக அவதானித்து வருகின்றது. 

இந்நிலையில் இவ்வகதிகள் சிங்களப் பகுதிகளில் தங்க வைக்கப்படும் போது, ஏதேனும் அனர்த்தம் ஏற்படும் பட்சத்தில், அது சிங்கள மக்கள் மீதான தவறான பார்வையைச் சர்வதேச ரீதியில் கொண்டு வரும் வாய்ப்புள்ளது. எனவே, வடக்கு நோக்கி நகர்த்தும் போது, தமிழ் மக்கள் அவர்கள் மீதான தாக்குதல் செயற்பாட்டை நடத்தும் வாய்ப்பில்லை என்ற நம்பிக்கை மாத்திரமல்லாது, இப்பகுதியில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பாடுமாயின், அது தமிழ் மக்கள் மத்தியிலான தவறான பார்வையையே கொண்டிருக்கும் என்ற நிலைப்பாடுகளை அடிப்படையாக வைத்தே, வடக்கு நோக்கி நகர்த்தப்பட்டுள்ளனர்.  

இதற்குமப்பால், வவுனியா பிரதேசம் நலன்புரி நிலையங்களையும் அதனைக் கையாளும் நடைமுறைகளையும் நன்கு கற்றுத்தேர்ந்த மாவட்டமாகவே காணப்படுகின்றது. இறுதி யுத்தத்தின்போது, சுமார் மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்களைத் தாங்கிய மாவட்டம் மட்டுமல்ல, சரணடைந்த விடுதலைப்புலிகளுக்கு புனர்வாழ்வளித்த மாவட்டமாகவும் காணப்படுகின்றது. 

இச்சூழலில், அகதிகளைத் தங்க வைப்பதற்கான ஏதுவான நிலைமைகள், வவுனியாவில் உள்ளன என்பது ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய விடயமே. எனினும், குறித்த புனர்வாழ்வு நிலையமாகச் செயற்படும் இடம், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஒரேயொரு கூட்டுறவுப் பயிற்சிப் பாடசாலையாகவே உள்ளது. 

கடந்த 10 வருடங்களாக, இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் காணப்பட்ட குறித்த பிரதேசத்தை, வடக்கு மாகாண சபைக் காலத்தில், கூட்டுறவு அமைச்சர் உட்படப் பலராலும், மீண்டும் வடக்கு மாகாண சபையிடம் கையளிக்க வேண்டும் எனப் பல இடங்களிலும் கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.    

எனினும், செவிடன் காதில் ஊதிய சங்காகக் காணப்பட்ட இந்த விடயம், இன்று வெளிநாட்டு அகதிகளைத் தங்க வைப்பதற்கான இடமாக மாறியுள்ளது. அதிகளவான இராணுவப் பிரசன்னத்துடன் காணப்படும் இப்பகுதிக்குள் ஊடகவியலாளர்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டே காணப்படுகின்றது.  

ஊடகவியலாளர்கள் கூட, இந்த முகாம் தொடர்பிலும் அதற்குள் இருக்கும் அகதிகள் தொடர்பாகவும் தகவலைப்பெற்றுக்கொள்ள முடியாத வகையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இம் முகாமுக்கு முழுமையாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயமே பொறுப்பு எனப் பதிலளிக்கப்படும் நிலையே உள்ளது.  

இவ்வாறான நிலையிலேயே, வடக்கின் தற்போதைய நிலைமைகள் காணப்பட்டு வரும் நிலையில், தமிழ் மக்களின் இயல்பு நிலைமை என்பது, சீராக்கப்படுதல் அவசியமானதாகக் காணப்படுகின்றது.  

இது தொடர்பில், தமிழ் அரசியல் தலைமைகள் சிரத்தை கொள்கின்றனவா என்ற கேள்வி நிறைந்துள்ள நிலையிலேயே கம்பரலிய திட்டங்களும் பனை அபிவிருத்தி திட்டங்களும் வடக்கை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன.  

வரவு செலவுத்திட்டங்களுக்கும் நம்பிக்கை இல்லாப் பிரேரணைகளுக்கும் ஆதரவு வழங்கியதற்காக வழங்கப்படும் கைமாறாக இதனை கருதவேண்டியுள்ளதாக எதிர்க்கட்சிகளும் கூட்டமைப்புக்கு எதிரான கட்சிகளும் விமர்சித்து வரும் நிலையில், இதனூடாகத் தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கான தீர்வு என்பது எட்டப்படுமா என்ற கேள்வி நிறைந்தே உள்ளது.  

இரண்டாண்டுகளைக் கடந்தும், வீதிகளில் போராடி வரும் காணாமல் ஆக்கப்பட்டோர், பெரும்பான்மையினத் தலைமைகளில் எற்பட்ட வெறுப்புகளுக்கு அப்பால், தமிழ்த் தலைமைகளையும் வெறுக்கும் நிலைக்கு உள்ளாகியுள்ளனர். இதன் பிரதிபலிப்பே, வவுனியாவில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் ஊடக சந்திப்பொன்றின் போது, பிரதம மந்திரியும் தேர்தலுக்கு முன் வந்து எமது பிள்ளைகளை மீட்டுத்தருவேன் என்று தெரிவித்திருந்ததாகவும் தேர்தல் முடிந்த பின்னர், தைப்பொங்கலன்று பலாலியில், “அவர்கள் எல்லோரும் இறந்துவிட்டார்கள், வெளிநாடு சென்றுவிட்டார்கள்” என்று கூறியிருந்ததாகவும் தெரிவித்த காணமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், கடந்த வருடம் பிரதமர், “மறப்போம் மன்னிப்போம்” என்றும் கூறியிருந்தார். எல்லோருமே தங்களது குணத்தைக் காட்டிவிட்டார்கள். இனி இலங்கை அரசாங்கத்திடம் இருந்து தீர்வு கிடைக்காது எனும் போது, இனி எந்தச் சிங்களத் தலைமையிடம் இருந்தோ, எமது தமிழ்த் தலைமைகள்தான் ஜனாதிபதியாக வந்தாலும் கூட, எமக்குத் தீர்வு கிடைக்காது. எமக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஒன்றின் மூலமே தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பைக் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வெளியிட்டுள்ளனர்.  

எனவே, ஜனநாய ரீதியிலும் அஹிம்சை ரீதியிலும் தமிழர்களது அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான முன் நகர்வுகளை மேற்கொள்வதாக தம்பட்டமடிக்கும் தமிழ்த் தலைமைகள், தற்போதைய சூழலில் தமிழர்களின் நிலையறியத் தவறியதான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளனர் என்றால் மறுப்பதற்கில்லை.  

வெறுமனே முஸ்லிம் தரப்பினர் மாத்திரம் இப்போதைய இறுக்கமான நிலைமைகளில் பாதிக்கப்படுகின்றனர் என்ற எண்ணக்கருவை விடுத்து, சிறுபான்மையினர் அனைவரும் தற்போது ஏதோ ஒரு வகையில், அசாதாரண நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர் என்பதே உண்மை.  

இதை உணரத்தலைப்பட வேண்டிய தலைமைகள், வடக்கில் அதிகரித்து வரும் பாதுகாப்புக் கெடுபிடிகள் தொடர்பில், கவனம் செலுத்த வேண்டிய தேவைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.  

தென்னிலங்கையில், பாடசாலைகளுக்கு மாணவர்களை வரவழைப்பதற்காக அரசாங்கம் செயற்படுத்தும் நடைமுறைகளும் மாணவர்களது மனங்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாகாத வகையில், பாடசாலையில் கற்றல் செயற்பாட்டை முன்னெடுக்க எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளும் வடபுலத்து மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை என்பது வேதனையே.   

பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று ஒரு மாதம் கடந்துள்ள நிலையிலும் கூட, பாடசாலை மாணவர்கள் மீதான சோதனைகள், கெடுபிடிகள் பாடசாலை சமூகத்தால் மேற்கொள்ளப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இவ்வாறான நிலைமையானது, வடபுலத்து மாணவர்களுக்கு சற்று அதிகமாகவே நடப்பதாக எண்ணத்தோன்றுகின்றது.   

இதற்கு முதற்காரணமாக இருப்பது, பாடசாலை வாயிலில் இராணுவத்தினரும் பொலிஸாரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுவதானது, அவர்களைப் பொறுத்தவரையில் ஒரு யுத்த கால நிலைமையையே மீள் நினைவு படுத்துவதாக இருக்கிறது. அது மாத்திரமின்றி, சிறுவர்கள் மத்தியில் தாம் ஏதோ சிக்கலான இடம் நோக்கிச் செல்வதான தோற்றப்பாட்டை உருவாக்குகின்றது என்றால் அது ஏற்புடையதே.  

எனவே, இலங்கை அரசாங்கமும் பாதுகாப்புத் தலைமையகங்களும் இலங்கையின் பாதுகாப்பு ஸ்திரம் பெற்றுள்ளதாகத் தெரிவித்தபோதிலும் கூட, இன்று வரையிலும் பாதுகாப்புக் கெடுபிடிகளில் சற்றேனும் தளர்வை ஏற்படுத்தாமை ஏன் என்ற கேள்வி நிறைந்தேயுள்ளது.  

எனவே, வெறுமனே தேர்தல் கால வாக்குறுதிகள் போல் அனைத்தையும் விட்டுச்சென்று விட முடியும் எனத் தமிழ் தலைமைகள் எண்ணிவிட முடியாது. ஏனெனில் அண்மைக்காலமாகத் தடம் மாறிச்செல்லும் தமிழ் தேசியம், மத்திய அரசாங்கத்தின் வலைக்குள் சிக்கியுள்ளமையானது வடக்கு மக்களைத் தொடர்ந்தும் இராணுவ மயமாக்கலுக்குள் சிக்க வைத்துள்ளதாகவே கருத்தத்தோன்றுகின்றது. 

இனிவரும் அரசியல் செயற்பாடுகளின் போது, இவ்வாறான நிலைமைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற தமிழ் மக்களால் அதிகம் நேசிக்கப்பட்ட கட்சிகளுக்கு, தாக்கம் செலுத்தும் என்ற உண்மையை உணர்த்தி நிற்கும்.   

எனவே, வடபுலத்தின் பாதுகாப்பு நிலைமைகள் உட்பட, மக்களை இலக்காக வைத்துப் பாரிய பூதாகார சோதனைகளை மேற்கொள்வது தொடர்பிலும் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் மௌனம் கலைந்து, வாய் திறத்தல் சாலச்சிறந்ததே.  

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஆதங்கம்

வவுனியாவில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஊடக சந்திப்பொன்றின் போது, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வெளியிட்ட கருத்துகள் சிந்திக்கத் தூண்டுவதாகவும் அவர்களின் நீண்ட போராட்டத்தின் பின்னர், அவர்களின் மனநிலையையும் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. 

“எங்களது போராட்டம் ஆரம்பித்தது முதல், எமது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை எதிர்பார்ப்பது என்னவோ உண்மைதான்.   

“தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எமக்கு உண்மையாகச் செய்ய வேண்டும் என்ற மனப்பாங்கு இருந்தால், அவர்களுக்கு எத்தனையோ சந்தர்ப்பங்கள் கிடைத்தன. குறிப்பாக, அரசாங்கத்துக்கு இரண்டு வருட காலத்தை கொடுக்காது, எதிர்ப்பைக் காட்டியிருக்கலாம். இதற்கு அவர்கள் கூறுகிறார்கள், ‘நாங்கள் கொடுக்க வேண்டாம் என கூறினால்க்கூட அவர்கள் அதனை கொடுக்கத்தான் போகின்றார்கள்’ என்று சொல்கின்றனர். அதனைவிடுத்து அரசாங்கத்துக்கு வக்காளத்து வாங்கி, அதனை ஆதரித்தது மிகப்பெரிய துரோகம். அதைவிட நாடாளுமன்றத்தில் பாதீட்டு வாக்கெடுப்பின் போதும் சில சட்ட மூல வாக்கெடுப்புகளின் போதெல்லாம் எமது பிரச்சினையை முன்னிறுத்திப் பேரம்பேசி இருந்திருக்கலாம். அதை எல்லாம் செய்யத்தவறி இருக்கிறார்கள். ஏனென்றால், அவர்களது உறவுகள் எவரும் காணாமல் போகவில்லை. அவர்கள் சுகபோகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இனித் தேர்தல் வரப்போகின்றது. அவர்கள் இதைதான் இன்னும் கதைப்பார்கள். அவர்கள் கூறுவதை நம்பும் மக்கள் இருக்கும் வரை, வாழ்ககை ஓடிக்கொண்டுதான் இருக்கப்போகின்றது. மக்களுக்கு எப்பொழுது விழிப்பு வருமோ அப்பொழுதுதான் எமக்கு விடிவு.  

கடந்த காலத்தில், மைத்திரிபால சிறிசேனவை எமது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிறுத்தி, இவருக்கு வாக்களித்தால் எமக்கான தீர்வு கிடைக்கும் என்றார்கள். எமக்குத் தெரியும் மைத்திரிபால சிறிசேன, பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் போதுதான், எமது பிள்ளைகள் காணாமல் போயிருந்தார்கள். என்றாலும் கூட, மைத்திரிபால சிறிசேனவுக்கு உள்ளூர விரும்பம் இல்லாமல் ஜனாதிபதியின் வற்புறுத்தலின் பேரில் செய்திருக்கலாம், சிலவேளைகளில், எமது உறவுகளை வைத்திருக்கும் இடம் கூட, அவருக்குத் தெரிந்திருக்கும். இவர் மூலம் எங்களுக்குத் தீர்வு கிடைக்கலாம் என்ற நப்பாசையே. ஏனென்றால் பிள்ளைகளை இழந்த எமக்கு, சின்ன ஒரு துரும்பு கிடைத்தாலும் கூட, அதனைப் பற்றிக்கொள்வது இயல்பு என்ற ரீதியில், அதனைப் பற்றிக்கொண்டு அவர்களுக்கு வாக்களித்தோம்.   

ஆனால், அவர் தனது சுயரூபத்தைக் காட்டிவிட்டார். அதேபோல், எமது பிரதம மந்திரியும் தேர்தலுக்கு முன் வந்து, எமது பிள்ளைகளை மீட்டுத்தருவேன் என்று தெரிவித்து விட்டு, பின்னர் தேர்தல் முடிந்த கையோடு, தைப்பொங்கலன்று பலாலியில், அவர்கள் எல்லோரும் இறந்துவிட்டார்கள், வெளிநாடு சென்றுவிட்டார்கள் என்று கூறியிருந்ததுடன், கடந்த வருடம் வந்து மறப்போம் மன்னிப்போம் என்றும் சுறியிருந்தார். எல்லோருமே தங்களது குணத்தைக் காட்டிவிட்டார்கள். இனி இலங்கை அரசாங்கத்திடம் இருந்தே தீர்வு கிடைக்காது எனும் போது, இனி எந்தப் பெரும்பான்மையினத் தலைமையிடம் இருந்தோ, எமது தமிழ்த் தலைமைகள்தான் ஜனாதிபதியாக வந்தாலும் கூட, எமக்குத் தீர்வு கிடைக்காது. எமக்குச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஒன்றின் மூலமே, எமக்குத் தீர்வு கிடைக்கும்” எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளமை கவனிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டியதொன்றாகும்.  

  • -க. அகரன்