துரையாப்பா,நீலன்,கதிர்காமர் போன்ற அதிமேதாவிகளை கடந்து வந்தவர்கள் தமிழர்கள்!

செவ்வாய் மார்ச் 19, 2019

தமிழ் மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சிறீலங்காவிற்கு மீண்டும் கால அவகாசம் வழங்கப்படுவது உறுதியாகிவிட்டது. இம்முறை சிறீலங்கா மீது புதிய தீர்மானம் ஒன்றினை கொண்டுவந்து இந்தக் கால நீடிப்பை வழங்கவுள்ளதாகவும், இந்தத் தீர்மானத்தை பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, மசடோனியா, மோன்டினிகுரோ ஆகிய நாடுகள் கூட்டாக முன்வைத்துள்ளதாகவும் தெரியவரும் அதேவேளை, இந்தப் புதிய தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வரும் மார்ச் 21ம் திகதி நிறைவேற்றப்பட இருக்கிறது.

2015ம் ஆண்டு இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில், சிறீலங்கா மீதான போர்க்குற்றச்சாட்டுகள் பற்றி சர்வதேச நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்கும் வகையில் சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 25 நடவடிக்கைகளை சிறீலங்கா மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி இரண்டு ஆண்டு கால அவகாசத்துடன் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்பின், மீண்டும் இரண்டு ஆண்டுகள் கால நீடிப்பு வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட இந்த நான்கு ஆண்டுகளிலும் சிறீலங்கா அரசு, சர்வதேசத்தை ஏமாற்றும் வகையில் காணாமல் போனேர் அலுவலகத்தை உருவாக்கியதைத் தவிர, வேறு எந்தவொரு நடவடிக்கையும் காத்திரமாக முன்னெடுக்கவில்லை.

அத்துடன், சிறீலங்கா உருவாக்கிய காணாமல்போனேர் அலுவலகத்தை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.

முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் இறுதிக்கட்டத்தில் சிறீலங்கா இராணுவத்தின் கைகளில் நேரடியாக ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கு இதுவரை எந்தவொரு பதிலையும் கூறமுடியாத சிறீலங்கா, காணாமல்போன ஏனைய தமிழர்களைக் கண்டுபிடிக்கப்போவதில்லை.

நிலைமை இவ்வாறிருக்க, தமிழர்கள் மீதான சிறீலங்கா அரச படையினர் மற்றும் புலனாய்வுத்தறையினரின் அச்சுறுத்தல்களும், கெடுபிடிகளும், சித்திரவதைகளும் குறையவில்லை என மனித உரிமை அமைப்புக்களும், சர்வதேச நாடுகள் சிலவும் வெளிப்படையாக இன்றும் குற்றம்சாட்டி வருகின்றன.

மறுபக்கம் தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களையும், பெளத்த மத ஆக்கிரமிப்புக்களையும் மிக வேகமாக விரிவுபடுத்தியுள்ளது.

இந்நிலையில், சிறீலங்காவிற்கு மேலும் கால அவகாசம் வழங்காமல், சர்வதேசம் நேரடியாகத் தலையிட்டு தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தரவேண்டும் என்பதே சம்பந்தன், சுமந்திரன் தவிர்ந்த ஒட்டுமொத்தத் தமிழினத்தின் ஒரே கோசமாக இருக்கின்றது.

இதற்காக தொடர்ச்சியான போராட்டங்களையும் தமிழ் மக்கள் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில்தான், ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அனைத்து பிரிவுகளையும் முழுமையாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தும் இந்தப் புதிய தீர்மானத்தைக் கொண்டுவருவதாகவும், இதனை குறிப்பிட்ட கால எல்லைக்குள் செயலாக்கும் திட்டத்தையும் வகுக்க வலியுறுத்துவதாகவும் கூறப்படுகின்றது.

முன்னதாக, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் கடந்த மார்ச் 8ம் திகதி வெளியிட்ட அறிக்கையில், 2015ம் ஆண்டில் சிறீலங்கா அரசு தானே ஒப்புக்கொண்ட, ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தை செயல்படுத்தாதது மிகப்பெரிய அளவில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது என்று குற்றம்சாட்டியிருந்ததுடன், இத்தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து பிரிவுகளையும் முழுமையாக செயல்படுத்துவதற்கான கால அட்டவணையை சர்வதேச நாடுகள் உருவாக்க வேண்டும் என்றும் குற்றவாளிகளை தண்டிக்க சர்வதேச விசாரணை முறையை உருவாக்குவது உள்ளிட்ட மாற்று வழிகளை உலக நாடுகள் பரிசீலிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

அண்மையில் கிளிநொச்சியில் வைத்து சிறீலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சிறீலங்கா இராணுவம் தமிழர்களுக்கு எதிராக செய்த குற்றங்களை மறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், குற்றவாளிகளை மன்னித்துவிட்டு, எதிர்கால அமைதியை நிலைநாட்டுவதே முக்கியம் என்றும் கூறியிருந்தார்.

இதே நிலைப்பாட்டையே சிறீலங்காவின் ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேனவும் கொண்டிருக்கின்றார்.

இத்தகைய சிந்தனைக்கு பதிலளிக்கும் விதமாக,  போர்க்குற்றம் உள்ளிட்ட பன்னாட்டு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு ஒருபோதும் மன்னிப்பு வழங்கக் கூடாது என்பது
தான் பன்னாட்டு சட்டம். அதுதான் ஐக்கிய நாடுகள் அவையின் கொள்கை என்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், சிங்கள தேசம் தான் புரிந்த குற்றங்களை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை. தண்டனைக்கு அப்பாற்பட்டவர்கள் தமது இராணுவத்தினர் என்ற மகாவம்ச சிந்தனையில் அது மிதக்கின்றது.

இராணுவத்தினர் நடத்திய போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த முடியாது என்றும் 2015ம் ஆண்டு ஐ.நா. தீர்மானத்திலிருந்து சிறீலங்கா வெளியேற வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேனவும், சிறீலங்க எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவும் கூறிவருகின்றனர்.

ஆனாலும், ஐ.நா. தீர்மானத்திலிருந்து சிறீலங்கா வெளியேறுவதென்பது எதிர்காலத்தில் நாட்டுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என ஆலோசகர்கள் வழங்கியுள்ள எச்சரிக்கையையடுத்து, ஐந்துபேர் கொண்ட குழுவொன்றை அனுப்ப சிறீலங்கா ஆட்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையில் செல்லும் அந்தக் குழுவில், நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி. சரத் அமுனுகம, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஏ.நெரின் புள்ளே ஆகியோருடன் சிறீலங்காவின் பிரதிநிதிகளில் ஒருவராக வடமாகாண ஆளுநர் கலாநிதி.சுரேன் ராகவனும் செல்கின்றார்.

தனது பயணத்திற்கு முன்பாக, வடக்கு மக்கள் குறித்து என்ன பேசவேண்டும் என்று நேரடியாகவோ, எழுத்துமூலமாகவோ தாருங்கள் எனக்கோரியிருந்தார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 8 பேர் கொண்ட குழு வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனை சந்தித்து, மனு ஒன்றினை கையளித்ததுடன், ஆளுநருக்கு நேரடியாகவும் தமது கருத்துக்களை கூறியிருக்கின்றார்கள். ஆனால், இவ்வாறு மனுக்களைக் கையளித்து கருத்துக்களைக் கூறியது பிழையானதுடன், பாரதூரமானது என வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக 760 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபடும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழர்கள் சார்பாக இங்கிருந்து பலர் ஜெனீவா சென்றுள்ள நிலையில், சிறீலங்கா அனுப்பும் ஆளுநரிடம் மனுவை கொடுக்க வேண்டிய தேவை என்ன. நாம் இரண்டு வருடங்களாக எமது நிலைப்பாட்டை மாற்றாது வெளிநாடு தான் எமக்கு தீர்வை பெற்று தர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.

ஆனால், போராட்டத்தில் ஒருநாள் கூட கலந்து கொள்ளாத இவர்கள் தெருவோரத்தில் இருப்பதாக பொய் கூறுகின்றார்கள், சிங்கள அரசால் அனுப்பப்படும் ஆளுநரிடம் மனுவைக் கையளிக்கின்றார்கள் என அவர்கள் குற்றம்சாட்டியிருக்கின்றார்கள்.

சுரேன் ராகவன் தமிழர்களின் பிரச்சனையைக் கதைப்பதற்காகவே ஜெனீவா செல்வதுபோன்ற ஒரு மாயத்தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிறீலங்காவின் பிரதிநிதியாகச் சென்று இவர் தமிழர்களுக்கு ஆதரவாக எதனைக் கதைத்துவிட முடியும்? இருந்தும், சிறீலங்கா அரச குழுவுடன் சென்று தமிழர்கள் வழங்கிய மனுவை அங்கு கையளிக்கப்போகின்றார் என சிங்களப் பேரினவாத தரப்புகள் அச்சம் வெளியிடுகின்றன.

அவ்வாறு எதுவும் செய்யமுடியாது என சிறீலங்கா எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த சமரசிங்க அவர்களுக்கு ஆறுதல் கூறுகின்றார்.

இவை எல்லாம் சிங்களப் பேரினவாத அரசுடன் இணைந்து தமிழ் மக்களை ஏமாற்றும் ஆளுநர் சுரேன் ராகவனின் செயலின்றி வேறில்லை.

அரசியல் விழிப்புணர்வை விடுதலைப் புலிகள் தமிழ் மக்களுக்கு நன்றாகவே ஊட்டியிருக்கின்றார்கள். இவற்றைவிட, தமிழ் மக்கள் கடந்த காலங்களில் அல்பிரட் துரையாப்பா, நீலன் திருச்செல்வம், லக்ஷ்மன் கதிர்காமர் போன்ற அதி மேதாவித் தமிழர்களைக் கண்டு கடந்து வந்தவர்கள். அந்த மக்களுக்குத் தெரியும் சுரேன் ராகவன் யார் என்பது.

 

ஆசிரிய தலையங்கம்
நன்றி: ஈழமுரசு