துருக்கியில் எட்டு மாடி கட்டிடம் இடிந்து விபத்து-15 பேர் உயிரிழப்பு

வெள்ளி பெப்ரவரி 08, 2019

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரின் கர்தால் மாவட்டத்தில் எட்டு மாடி கட்டிடம் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த அடுக்குமாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் 3 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனை துருக்கி சுகாதார அமைச்சர், பாஹ்ரெட்டின் கோகா உறுதி செய்துள்ளார். கட்டிடத்தின் 3 மாடிகள் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

கட்டிடம் இடிந்து விழுந்ததில் இதுவரை 15 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்று ஐந்து வயது சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டார்.

சம்பவ இடத்தில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.