தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரலாம்!

வியாழன் ஜூலை 11, 2019

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரலாம் என்று பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

பா.ஜனதா கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான மேற்பார்வையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்தது. இதில் நிருபர்களுக்கு டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜனதா பின்னடைவை சந்தித்ததையொட்டி கட்சியை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பழைய உறுப்பினர்களது பதிவை புதுப்பிக்கவும், புதிய உறுப்பினர்களை தீவிரமாக சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. “நீட்” தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் தமிழக சட்டப் பேரவையின் தீர்மானத்தை, குடியரசு தலைவருக்கு அனுப்பிய 4 நாட்களிலேயே விலக்களிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுவிட்டது. காலதாமதமாக தெரிவிக்கப்பட்டது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியில் நிலவும் குழப்பத்துக்கு காரணம், அக்கட்சியின் தலைவரான ராகுல் காந்தி. காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்ததால் அவர் தலைமை மீது நம்பிக்கையிழந்து, அக்கட்சியினர் கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர். இதில், பா.ஜனதாவுக்கு எவ்வித தொடர்பும் இல்லை. தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும். 

அத்தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற கனிமொழி வேட்புமனுவில், தனது கணவர், மகன் ஆகியோரது வருவாய், வசிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தகவல்களை மறைத்துள்ளார். அதுகுறித்தும், தேர்தல் நடத்தை விதி மீறல் உள்ளிட்ட குற்றச்சாட்டு குறித்தும் நான் வழக்கு தொடர்ந்துள்ளேன். 2 ஜி வழக்கும் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. அந்த வழக்குகளின் விசாரணையின் முடிவில் தூத்துக்குடி தொகுதிக்கு இடைத்தேர்தல் வரலாம். பா.ஜனதாவின் உறுப்பினர் சேர்க்கைக்காக தமிழகம் முழுவதும் நான் சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.