ட்வீட் செய்யும் முன்பே பின் தொடரும் 90 ஆயிரம் பேர்!

திங்கள் பெப்ரவரி 11, 2019

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா இன்று டவீட்டர் கணக்கை தொடங்கியுள்ள நிலையில் அவர் ட்வீட் ஏதும் செய்யாமலேயே சில மணிநேரங்களில் 91 ஆயிரத்துக்கும் அதிமானோர் பின் தொடர்கின்றனர். குவியும் ஆதரவால் காங்கிரஸ் நிர்வாகிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பிரியங்கா காந்தியை கட்சியின் பொதுச் செயலாளராக அண்மையில் ராகுல் காந்தி அறிவித்தார். மேலும், உத்தரப் பிரதேச காங்கிரஸ் கிழக்கு பகுதியின் நிர்வாகப் பொறுப்பையும் வழங்கினார். காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்னர், உ.பி. காங்கிரஸின் முன்னாள் எம்.பி. மற்றும் எம்எல்ஏக்களை தொடர்புகொண்டு பேசி வருகிறார்.

மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் நேரத்தில், இந்த நியமனம் காங்கிரஸ் தொண்டர்களுக்குப் புதிய உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்துள்ளது. தீவிர அரசியலில் இறங்கியுள்ள பிரியங்கா காந்தி, பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ளத் தொடங்கியுள்ளார். அன்றாட நிகழ்வுகள் குறித்து கருத்து தெரிவித்து வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் இணைந்துள்ளார் பிரியங்கா காந்தி. பிரியங்கா காந்தி வதேரா என்ற பெயரில் @priyankagandhi என்ற முகவரியில் ட்விட்டர் கணக்கு தொடங்கியுள்ளார்.

 

ராகுல் காந்தி, அசோக் கெலாட், சச்சின் பைலட் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களைப் பின்தொடர்கிறார். அவர் கணக்கு தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கானோர் அவரைப் பின்தொடர்கின்றனர். அவர் ட்விட்டர் கணக்கு தொடங்கி எதையும் ட்வீட் செய்யவில்லை. அதற்கு முன்பாகவே சில மணிநேரங்களில் 91 ஆயிரத்துக்கும் அதிமானோர் பின் தொடர்கின்றனர்.

காங்கிரஸ் தொண்டர்கள், நிர்வாகிகள் என பலரும் உடனடியாக பிரியங்காவின் ட்விட்டர் கணக்கை கண்டறிந்து பின் தொடரத் தொடங்கியுள்ளனர். சில மணிநேரங்களிலேயே சமூகவலைதளத்தில் பெரிய ஆதரவு கிடைத்துள்ளதால் பிரியங்கா மட்டுமின்றி காங்கிரஸ் நிர்வாகிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.