டயகம சிறுமியின் உடற்பாகங்கள் பகுப்பாய்வு

சனி ஜூலை 31, 2021

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய போது உயிரிழந்த 16 வயது சிறுமியின் சடலம், 9  மணிநேர பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக காவல் துறை  ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி  காவல் துறை மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் தடயவியல் பேராசிரியர் டொக்டர் ஜீன் பெரேரா,  கொழும்பு பல்கலைக்கழகத்தின் தடயவியல் பிரிவின் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான சமீர குணவர்தன, பேராதனை போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் டொக்டர் பிரபாத் சேனசிங்க ஆகியோரால் பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இன்று காலை 8.30 மணி முதல் மாலை 5.15 மணி வரையில் சுமார் 9 மணிநேரம் இவ்வாறு பிரேத பரிசோதனை இடம்பெற்றதாகவும் சுட்டிக்காட்டினார்.

உடலிலுள்ள காயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக சீடி ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் உடற்பாகங்களில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு இரசாயன பகுப்பாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஆய்வுகூட அறிக்கைகள் கிடைத்த பின்னர், முழுமையான பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்கும்  என்றும் அதுவரை பேராதனை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.