உக்ரைன் மாணவர்களுக்கு தமிழகத்தில் இடமில்லை?

சனி மே 21, 2022

சென்னை- உக்ரைன் மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் சீட் வழங்குவது ஒன்றிய அரசின் கையில்தான் உள்ளது, மாநில அரசு தன்னிச்சையாக செயல்பட முடியாது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கிண்டியில் உள்ள தேசிய முதியோர் நல மருத்துவமனையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார், அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் 151 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பில் தேசிய முதியோர் நல மருத்துவமனை வளாகம் கட்டப்பட்டது என தெரிவித்தார். 

மேலும் கொரோனா அதிகரித்த காரணத்தினால், இந்த மருத்துவமனை 800 படுக்கை கொண்ட சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டது என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், கொரோனா தொற்று குறைந்து வருவதால் மீண்டும் அந்த மருத்துவமனையை தேசிய முதியோர் நல மருத்துவமனையாக மாற்றலாம் என முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்த அமைச்சர், ஆய்வு மேற்கொண்டதில், உடனடியாக இந்த கட்டிடத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது அதனை சரிசெய்து விரைவில் அங்கு முதியோர் நல மருத்துவமனை செயல்பட்டுக்கு வரும் என தெரிவித்தார்.

இந்த கட்டிடத்தில் முறைகேட்டில் யார் ஈடுபட்டு இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அவர், 1000 மருத்துவ பணி இடங்களுக்கு பணி மாறுதல் செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார்.

இதற்கான கலந்தாய்வு வரும் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய மூன்று நாட்கள் நடைபெற உள்ளதாகவும், வெள்ளிக்கிழமை பணி மாறுதல் செய்யப்படவுள்ளதாக தெரிவித்தார். மேலும், முதல் முறையாக ஒரே நேரத்தில் ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கு கலந்தாய்வு மேற்கொள்ளப்படுவது இதுவே முதல் முறை என அவை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், உக்ரைன் மாணவர்களுக்கு சீட் வழங்குவது மத்திய அரசின் கையில்தான் உள்ளது, மாநில அரசு தன்னிச்சையாக செயல்பட முடியாது என தெரிவித்தார்.