உலக மனநல தினம்!

வியாழன் அக்டோபர் 10, 2019

அழகாகத் தோன்ற நீங்கள் உடற்பயிற்சிக்குச் செல்வீர்கள், அழகு நிலையத்திற்குச் செல்வீர்கள். புறஅழகின் மீது கவனம் செலுத்தும் நாம், மனநலம் குறித்து யோசித்திருக்கிறோமா?

உடல்நலத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் வழங்குகிறோமோ, அந்த முக்கியத்துவத்தை மனநலத்திற்கும் தர வேண்டும் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.

பொதுவான மனநல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட 30_-40 சதவீதத்தினர், அது ஒரு நோய் என்பதை அறியாமலேயே உள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

எந்த வேலையிலும் ஆர்வமின்மை, உடற்பிணி எதுவும் இல்லாத நிலையிலும் எப்போதும் சோர்வாக உணருவது, தொடர் அயர்ச்சி, அதீத எரிச்சல், ஆத்திரம், அழத் தூண்டும் உணர்வு ஆகியவை பொதுவான மனநல பிரச்சினைகளுக்கான அறிகுறிகள் என்று மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, ​ேஹார்மோன் சார்ந்த பிரச்சினைகள்,நீரிழிவு அல்லது நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.அவர்கள் மனநல பாதிப்புக்கு உள்ளாவதற்கு இடமுண்டு.

உலக சுகாதார நிறுவனத்தின் தரவின்படி, உலகம் முழுவதும் 10 சதவீத கர்ப்பிணிப் பெண்களும், குழந்தை பெற்ற 13 சதவீத பெண்களும் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

வளர்ந்து வரும் நாடுகளில் இந்த எண்ணிக்கை இன்னமும் அதிகமாகக் காணப்படுகிறது.

உலகெங்கு வாழும் பெரும்பாலானோர் பொதுவான உளவியல் பிரச்சினையினால் பாதிக்கப்பட்டவர்கள். சோகம், நம்பிக்கை இழப்பு, கோபம், எரிச்சல் போன்ற அறிகுறிகளுடன் குழந்தைகளும் சோர்வு, பதற்றம் மற்றும் தனிமை சார்ந்த பிரச்சினைகளுடன் பெண்களும் உள்ளனர். இவர்கள் உளவியல் ஆலோரனை பெற வேண்டியவர்களாவர்.

பதின்ம வயதினர் மற்றும் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் மனஅழுத்தத்திற்கு சமூக ஊடகங்களே முக்கியமான காரணமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

தான் சமூக ஊடகத்தில் பதிவிடும் விடயங்களுக்கு அதிகளவில் 'லைக்' கிடைக்கிறதா, இல்லையா என்பதிலிருந்து தொடங்கி பல்வேறு இணையம் சார்ந்த காரணிகள் அவர்களிடையே மனஅழுத்தத்திற்கு வித்திடுவதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

குழந்தைகளை சிறுவயதிலேயே படிப்பு மட்டுமன்றி இசை, நடனம், விளையாட்டு, நடிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்குவதற்கு பெற்றோர் அழுத்தம் பிரயோகிப்பது குழந்தைகளுக்கு மனஅழுத்தத்தை அதிகரிக்கிறது.

ஒத்த வயதினர் தன்னை விட சிறப்பாக விளங்குவது, உடனுக்குடன் நிகழ்வுகளை சமூக ஊடகங்களில் பதிவிடுவது, ஏகப்பட்ட தெரிவுகள் மற்றும் வயதுக்கு அதிகமான விடயங்களை தெரிந்து கொள்வது ஆகியவையும் இளம்வயதினரிடையே உளவியல் பிரச்சினைகளை உண்டாக்குகின்றன.

இந்த அழுத்தம் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கு மட்டுமல்ல, அனைத்து வயது பிரிவை சேர்ந்தவர்களிடத்தும் சற்றே வேறுபட்ட அறிகுறிகளுடன் பரவலாகக் காணப்படுகிறது. அடிக்கடி மனஅழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய மருத்துவ உதவி அளிக்கப்படாத பட்சத்தில் அது தற்கொலை வரை செல்வதற்கு வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

2019ஆம் ஆண்டுக்கான உலக சுகாதார நிறுவனத்தின் மையக் கருத்தாக 'தற்கொலை தடுப்பு' உள்ளது. ஒவ்வொரு 40 செக்கனும் ஒருவர் என்ற கணக்கில் ஆண்டுக்கு சுமார் 8,00,000 பேர் உலகம் முழுவதும் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை சொல்கிறது.

15_-29 வயதுக்குட்பட்டவர்களிடையே உயிரிழப்பிற்கு இரண்டாவது மிகப் பெரிய காரணியாக தற்கொலை உள்ளது. தற்கொலை என்பது வளர்ந்த நாடுகளில் இருக்கும் பிரச்சினை என்ற சூழ்நிலை மாறி, தற்போது உலகமெங்கும் உள்ள குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளிலேயே 80 சதவீத தற்கொலை சம்பவங்கள் நிகழ்கின்றன.

மனஅழுத்ததால் ஒருவர் பாதிக்கப்பட்டதன் ஆரம்ப கட்டத்திலேயே உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்படும் பட்சத்தில் தற்கொலைகளை தடுக்க முடியும் என்றும், ஒருமுறை தற்கொலைக்கு முயன்றவர்

மீண்டும் மீண்டும் அம்முயற்சியை தொடருவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு நபரின் தற்கொலை அவரைச் சார்ந்த 135 பேரை பாதிப்பதாக மருத்துவர் ஒருவர் கூறுகிறார். தான் தற்கொலை செய்து கொள்வது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், சக பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் ஒருவர் எண்ணிப் பார்க்க வேண்டும்.

தற்கொலை என்பது உணர்ச்சிவசப்பட்ட நிலை. எனவே, தக்க நேரத்தில் தற்கொலைக்கு முயற்சி செய்பவரின் கண்ணோட்டத்தை, மனநிலையை மாற்றினால் அவரது உயிரைக் காக்க முடியும்.

தற்கொலை குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை உலகளாவிய சுகாதார பிரச்சினையாக முன்னெடுத்து, அதன் மூலம் தற்கொலைக்கு முயற்சிப்பவர் அதுகுறித்த முடிவை தனிமையில் இருக்கும்போது எடுக்கக் கூடாது உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்த வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

இந்த பிரச்சினை மிகவும் தீவிரமானது, ஆனால் உளவியல் சார்ந்த பிரச்சினை.கிராமங்களில் உள்ளவர்கள் பொதுவான மனநல பிரச்சனைகளை பற்றிக் கவலைப்படுவதில்லை. இன்னும் சொல்லப் போனால் அதை அவர்கள் ஒரு நோயாகவே கருதுவதில்லை.

ஆனால், ஒரு நபர் கடுமையான மனநல கோளாறால் அவதிப்பட்டால் மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியம்.ஏனெனில், அதற்கான அறிகுறிகள் தெளிவாகக் காணப்படும்.

உலகம் முழுவதிலும் மனநலம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த 1992-ம் ஆண்டு முதல் வருடந்தோறும் ஒக்டோபர் 10-ம் திகதி மனநல தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து தேசிய மனநல கூட்டமைப்பு ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட கருத்தைப் பிரகடனம் செய்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
உலகம் முழுவதிலும் 150-இற்கும் மேற்பட்ட நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் இந்தத் தினம் அவுஸ்திரேலியா போன்ற ஒரு சில நாடுகளில் மட்டும் மனநல வாரமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

ஒரு பிரபல நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் 33% வீதத்தினர் தங்களது வேலையில் ஏற்படும் பிரச்சினை காரணமாக மனஉளைச்சலுக்கு ஆளாவதாகக் கூறியுள்ளார்கள். அவர்களில் 90% பேர் மனஅழுத்தத்தாலும், 78% பேர் கவலையாலும், 60% பேர் மனச்சோர்வாலும், 52% பேர் உறக்கமின்மையாலும் பாதிக்கப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

உறக்கம் என்பது நாம் உடலுக்கு மட்டும் தருகின்ற ஓய்வு அல்ல,எந்நேரமும் எண்ணற்ற விஷயங்களைப் பற்றி சிந்தித்துக் கொண்டே இருக்கும் மனதிற்கும் தருகின்ற ஓய்வாகும். அந்த வகையில் உறக்கம் என்பது மனிதர்களுக்கு மிக முக்கியமான ஒன்று.

அந்த உறக்கத்தைத் தியாகம் செய்து பணி செய்வதால் கட்டாயம் மனஅழுத்தம் மற்றும் மனச்சோர்வு ஏற்பட்டு இறுதியில் எந்த வேலைக்காக அவ்வளவு கஷ்டப்பட்டோமோ அந்த வேலையிலேயே கவனம் செலுத்த முடியாமல் போகும்.

எனவே ஓய்வும் உறக்கமும் முக்கியமானவை.உடல் நலம் எத்தனை முக்கியமோ மனநலமும் முக்கியம் என்பதை மறந்து விடலாகாது.