உலக வல்லரசுகளுடன் இணைந்து ஐ.நா பேரவையும் ஈழத்தமிழர்களை ஏமாற்றுகிறது!

வியாழன் மார்ச் 21, 2019

நான்காம் கட்ட ஈழப்போரின் சிறீலங்காப் படைகளினால் மேற்கொள்ளப்பட் கொடூரங்களுக்கான பொறுப்புக்கூறல் பற்றியும்,காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க வலியுறுத்தி சர்வதேச விசாரணைக்கூடாக ஒரு பொறிமுறையை உருவாக்கி பாதிக்கப்பட்ட ஈழமக்களுக்கு ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 42வது அமர்வுகளில் தீர்வு பெற்றுக் கொடுக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமாகிவிட்டது.

கடந்த காலங்களில் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க பலதடவைகள் ஆர்ப்பாட்டங்கள், கவனஈர்ப்பு போராட்டங்கள், உணவுத்தவிர்ப்பு போராட்டங்களுடாக காணாமல் போனவர்களை கண்டறிய மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கையும் தோல்வியில் முடிவந்த நிலையில்தான் ஐ.நா.வை பாதிக்கப்பட்ட மக்கள் நம்பியிருந்தார்கள்.

இன்னும் நம்பிக்கையை தளரவிடாது எதிர்பார்த்துள்ள மக்களுக்கு, குற்றம் இழைத்த தரப்புக்கு கால அவகாசம் வழங்குவது அவர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது. குற்றம் செய்த அரசாங்கமும், அதன்பின்பு வந்த ஆட்சியாளர்களும் இது தொடர்பாக விசாரணை செய்யவில்லை.

அத்துடன்,ஆள் கொணர்வு மனுக்களை பதிவுசெய்த போதும் அதுவும் இழுத்தடிக்கப்பட்டது. மனுக்களை கொடுத்தார்கள் அறிக்கைகளை கொடுத்தார்கள் அது எதுவும் பலனளிக்கவில்லை.

1990ஆம் ஆண்டுக்கும் 2009 ஆம் ஆண்டுக்குமிடையில் இடம்பெற்ற இன அழிப்புக்களை ஆராய்வதற்கும் காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கும் என உருவாக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு முன்னால் உறவுகளை இழந்தவர்கள் தமது வாக்குமூலங்களை பதிவு செய்தார்கள்.

ஆனால் ஆணைக்குழுவினால் இதுவரை சரியான பதிலை வழங்கமுடியவில்லை. ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட விசாரணையில் ஏராளமான தவறுகள் இருக்கின்றன. ஆணைக்குழுவினால் நீதிகிடைக்கப் போவதில்லை என அறிந்த மக்கள் ஐ.நா. பேரவையை நாடிச்சென்றார்கள், குற்றம் இழைக்கப்பட்டு பத்து வருடங்கள் கடந்த போதும் ஐ.நா.சபை தனது கடமையைச் சரிவரசெய்யவில்லை என்பது பலரது குற்றச்சாட்டாகவுள்ளது.

மாறாக குற்றம் செய்த அரசாங்கத்தை பாதுகாக்கும் நடவடிக்கையில்தான் ஐ.நா ஈடுபட்டுள்ளது. இதில் ஈழத்தமிழர்களுக்கான நீதி வெறும் பகல்கனவாக மாறியுள்ளது.

இதன் ஒரு கட்டத்தில் சர்வதேசமும், சிறீலங்கா அரசாங்கம் மற்றும் கூட்டமைப்பிலே இருக்கின்ற சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளக விசாரணை என நாடகமாடி பாதிக்கப்பட்ட ஈழமக்களை ஏமாற்றிவிட்டதாகவே கருதவேண்டியுள்ளது. மீண்டும் மீண்டும் எங்கள் மக்களை காட்டிகொடுக்கின்ற செயற்பாடுகளை எமது தமிழ்த் தலைவர்களும் அதேபோன்று சிங்கள தலைவர்களும் செயற்பட்டு கொண்டிருப்பதையும் காணலாம்.

தென் இலங்கையில் மகிந்த ராஜபக்ச காலத்தில் ஒன்றாக இணைந்து செயற்பட்ட மனித உரிமை அமைப்புக்கள் தற்போது உள்ள விசாரணை போதும், காலத்தை நீடிக்கவும் ஒத்துப்போகின்ற சூழ்நிலை காணப்படுகிறது. இதன் விளைவு யுத்தம் நிறைவடைந்து குறிப்பாக வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலே என்ன மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

காணாமல் போனவர்கள் ஒருவர் கூட இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

அரசியல் கைதிகள் பத்து வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். இன்று வரை இராணுவத்தினராலும், புலனாய்வு பிரிவினராலும், பாதுகாப்பு படைகளாலும் கைது செய்யபட்டவர்களை கைது செய்யபடவில்லையே தெரியாது எனத் தெரிவித்துவருகின்றனர்.

கண்ணுக்கு முன்னால் நடைபெற்றத்தைக் கூட மறைக்கும் ஆட்சியாளர்களுக்கு சார்பாக சர்வதேச நாடுகள் தங்களின் சுயநலத்திற்காக இதனை பாவிக்கிறார்கள். சிறீலங்காவை சர்வதேசம் தங்களினுடைய சுயநலத்திற்காக பாவித்து கொண்டு தமிழர்களை பகடைக் காய்களாக ஆள்கின்றார்கள்.

பூகோள அரசியலுக்கு அப்பால் சென்று ஈழத்தமிழர்களுக்கு நீதிவழங்குவதில் அனைத்துலக சமூகத்திற்கு உண்மையான அக்கறை இருந்தால் அது ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இனவழிப்பை விசாரணை செய்வதற்கு சர்வதேச நீதிவிசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்குவதே ஒரேயோரு வழி. எனினும், பொறுப்புக்கூறல் விடயத்தில் கடந்த பத்தாண்டுகளாக அனைத்துலக சமூகம் நிறைவேற்றிய தீர்மானங்கள் எவையும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு அமையவில்லை.

சர்வதேசம் எங்களுக்கு நீதியை பெற்றத் தரும் என்று நாங்கள் ஏமாந்து ஏமாந்து களைத்து போய்விட்டோம். ஆகவே இந்த காலகட்டத்திலே நாங்கள்? துணிந்து நின்று எங்கள் உரிமைக்காக நாங்கள் போராடவேண்டும். கடந்த முப்பது ஆண்டுகளாக எமது உரிமைக்காக போராடிப் போராடி களைத்துவிட்டோம்.

எமது இளைஞர்கள் எல்லாம் கொன்று அழிக்கப்பட்டுவிட்டார்கள். இனிப் போராடுவதற்கு பிள்ளைகள் இல்லை அப்படி என்றால் யார் போராடுவது? என்ற கேள்வி வருகிறது. ஆகவே நாங்கள் விரக்தியின் நுனியில் தள்ளப்பட்டிருக்கின்றோம்.

உள்ளக விசாரணைகள் வேண்டும் என்று சொல்கிறவர்கள் யாரை யார் விசாரிக்க போகிறார்கள். இங்கு ஆட்சியில் இருந்த எந்த அரசாங்கம் கடத்தல் செய்யவில்லை, எந்த அரசாங்கம் எமது பிள்ளைகளை கொல்லவில்லை, எந்த அரசாங்கம் அநீதி இழைக்கவில்லை, இலங்கையில் எந்த அரசாங்கம் மனித உரிமை மீறல்களை செய்யவில்லை என்று சொல்ல முடியாது. ஆட்சிக்கு வந்த சிங்களப் பேரினவாத சக்திகள் தமிழர்களை அழித்தொழிப்பதில்தான் மும்முரமாக செயற்பட்டது எனலாம்.

ஈழத்தீவின் மனித உரிமை நிலவரம் குறித்தும், ஆராயப்பட்டு வரும் நிலையில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இனவழிப்பிற்கு நீதி வழங்குவதை அனைத்துலக சமூகம் இழுத்தடிக் கொண்டுவருகிறது. அத்துடன் 2009ஆம் ஆண்டுடன் ஈழத்தீவில் போர் முடிவுக்கு வந்திருப்பதாகக் கூறிக் கொண்டு இனவழிப்பு மற்றும் தமிழர்களின் அடையாளங்களை அழிக்கும் யுத்தத்தை தமிழ் மக்களுக்கு எதிராக சிறீலங்கா அரசு மேற்கொண்டதை யாவரும் அறிவர்.

மட்டக்களப்பு மாவட்டம் 2007ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து இராணுவக் கட்டுப்பாட்டிற்கு வந்ததன் பின்னர் 1100 பேர் காணாமல் போயுள்ளனர். இந்தத் தகவல் 2014 ஆண்டு பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டமை மாத்திரம். இவற்றில் ஒரு குறிப்பிட்டளவானவையே விசாரணைகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனவே, உலக வல்லரசுகளும் எம்மை கைவிட்டதுபோலவே இருக்கின்றது.

ஆகவே காணாமல் போனவர்களை தேடுவதை விட எமக்கு வேறுவழி இல்லை. நாம் உள்ளக விசாரணையில் நம்பிக்கையில்லை என்று சொன்னாலும் சர்வதேசம் கருத்தில் கொள்வதாக இல்லை. ஏன் என்றால் நாம் பலவீனப்படுத்தப்பட்டுள்ளோம்.

பலம் உள்ள பக்கம் தான் அரசுகள் சேர்கின்றன. காணாமல் ஆக்கப்படுவதற்கு எதிரான வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கபட்டவர்களின் குடும்பங்களின் சங்கமும் வலியுறுத்தி சொல்லது உள்ளக விசாரணைகளில் துச்சமும் எமக்கு நம்பிக்கையில்லை. சர்வதேச தரத்திலான சர்வதேச நாடுகள் இவ் விடயத்தில் தலையிட்டு சர்வதேச விசாரணைக்கூடாக ஒரு பொறிமுறையை உருவாக்கி காணாமல் போனவர்களை கண்டுபிடிக்ககூடிய பொறிமுறையை உருவாக்கவேண்டும். அதனுடாக தமிழர்களின் இனப்பிரச்சினைக்கும் தீர்வு எட்டப்பட வேண்டும் என்பது நிதர்சனம்.

-கிழக்கில் இருந்து எழுவான்-

நன்றி-ஈழமுரசு