உலக வரலாற்றில் சாதனை படைத்த காலணி!

வியாழன் ஜூலை 25, 2019

விளையாட்டு வீரர்களுக்கான காலணிகளை (ஷூ) சிறப்பான முறையில் தயாரித்து வழங்குவதில் அமெரிக்காவை சேர்ந்த ‘நைக்’ நிறுவனம் உலகின் முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது.

இந்த நிறுவனத்தை நிறுவியவரும், தடகள பயிற்சியாளருமான பில் போவர்மேன் கடந்த 1972-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியின் போது தடகள வீரர்களுக்காக ‘ஷூ’ ஒன்றை வடிவமைத்தார்.

அது ‘மூன் ஷூ’ என்று அழைக்கப்பட்டது. மொத்தம் 12 ஜோடி மூன் ஷூக்களை அப்போது அவர் தயாரித்து வழங்கினார்.

இந்த நிலையில், பில் போவர்மேன் தயாரித்த ஒரு ஜோடி ‘மூன் ஷூ’ அண்மையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஏலம் விடப்பட்டது.

அப்போது கனடாவை சேர்ந்த மைல்ஸ் நடால் என்பவர் அந்த ‘ஷூ’வை 4 லட்சத்து 37 ஆயிரத்து 500 அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3 கோடியே 1 லட்சத்து 80 ஆயிரம்) ஏலத்தில் எடுத்தார்.

இதன் மூலம் உலக வரலாற்றிலேயே அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட ‘ஷூ’ என்ற சாதனையை ‘மூன் ஷூ’ படைத்துள்ளது.