உலகை அதிரவைத்திருக்கும் நிறவெறிக்கு எதிரான போராட்டங்கள்

வெள்ளி ஜூன் 19, 2020

நிறவெறிக்கு எதிராக உலகெல்லாம் ஊர்வலங்கள் தற்போது நடப்பதற்கு அமெரிக்காவில் கறுப்பினத்தவர் ஒருவர் பொலிஸாரால் கொல்லப்பட்டதே காரணம் என்று சொல்லப்பட்டாலும் இது போன்ற பல படுகொலைகள் இதுவரை பல நாடுகளில் நடந்தேறி இருக்கின்றன. கனடாவிலும் ஊர்வலங்கள் நடந்தேறின. தனிப்பட்ட சாதாரண ஒருவரின் மரணம், அதை வீடியோ படமாக்கியது, அதை ஊடகங்கள் வெளியே கொண்டுவந்த முறை, பொறுமையை இழந்த கறுப்பின மக்கள் ஒன்றுபட்டுச் செயலாற்றியது என்று எல்லாம் சேர்ந்துதான் அமெரிக்காவை இந்த மரணம் அதிரவைத்திருக்கின்றது. 

இது போன்ற வேறு நாடுகளில் நடந்த பல மரணங்களை மூடி மறைக்கவும் இதே போன்ற ஊடகங்கள் மட்டுமல்ல, அந்தந்த இனமக்களின் சமூகத் தலைவர்களும், பிரிவுபட்ட சுயநலம் கலந்த மௌனமும், ஒற்றுமையின்மையும் தான் காரணமாயிருக்கின்றன.

 அமெரிக்காவில் வாஷிங்டனில் இந்திய தூதரகத்திற்கு முன்னால் இருந்த கௌதம்பால் என்பவரால் வடிவமைக்கப்பட்ட அகிம்சைவாதியான மகாத்மா காந்தியின் ஒன்பதடி உயரமான வெண்கலச்சிலை சில விஷமிகளால் சென்ற கிழமை உடைக்கப்பட்டதற்கு ‘இது பெரிய அவமானம்’ என்று அதிபர் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார். இனப்பாகுபாடும், ஒடுக்கு முறையும் அற்ற ஒரு சமூகமாக இருக்கவே எல்லோரும் விரும்பினாலும், பெரும்பான்மையினர் சிறுபான்மையினரை அடக்குவதில் மும்முரமாக நிற்பதைதான் இன்றைய ஜனநாயக உலகில் அவதானிக்க முடிகின்றது. ஒற்றுமையின் அவசியத்தையும், ஒன்றுபட்டால் சாதிக்கலாம் என்பதையும் மீண்டும் இந்த ஊர்வலங்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. ஜனநாயகம் என்ற பெயரில் சிறுபான்மையினர் உலகெல்லாம் அடக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆறறிவுள்ள மனிதன் இதைப் புரிந்து கொண்டால் அநீதிக்கு எதிரான இன்னும் இதுபோன்ற பல அதிசயங்கள் உலகெங்கும் நடக்கலாம்.

இந்த ஆரவாரத்திற்கு மத்தியில் சென்ற வியாழக்கிழமை கனடாவில் வான்கூவரைச் சேர்ந்த முதற்குடி இனத்தவரான 26 வயதான ஷான்ரெல் மோ என்ற ஐந்து வயது பெண் குழந்தையின் தாய், நியூபிறவுன்ஸ்விக் மாகாண பொலிஸார் ஒருவரால் சுடப்பட்டு மரணமடைந்தது மீண்டும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றது. ‘பெண்மணி கையிலே கத்தி வைத்திருந்தார், தற்பாதுகாப்புக்காகச் சுட்டேன்’ என்று 40 வருட சேவையில் இருந்த பொலிஸார் சொல்லியிருக்கின்றார். 

கையிலே கத்தி வைத்திருந்த தனியே இருந்த பெண்ணை சுட்டுக் கொன்றுதான் பொலிஸ்காரர் தன்னைப் பாதுகாக்க வேண்டுமா என்ன கேள்வி பலரிடம் எழுந்திருக்கிறது. ஏன் அவர் அங்கு தனியே சென்றார் என்பது போன்ற கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்பதற்காக எல்லோரும் காத்திருக்கிறார்கள். இந்த மரணத்திற்குப் பின்னாலும் ஒரு கதை இருக்கலாம். அவரது முகநூலைப் பார்த்த போது, ‘சிலந்தியைக் கண்டு நீ அலறுவது போல, உன்னைக் கண்டு சிலந்தி அலறினால் எப்படி இருக்கும் என்று கற்பனை பண்ணிப் பார்’ என்று யூன் மாதம் 2 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்குப் பதிவேற்றி இருந்தார். ஏப்ரல் மாதம் முதற்குடி இனத்தைச் சேர்ந்த நான்கு இளம்தலைமுறையினர் பொலிஸாரால் கொல்லப்பட்டதாகவும், இது ஐந்தாவது மரணம் என்றும் முன்னாள் தேசிய விசாரணைச்சபை முதல்வர் மரியோன் புல்லர் இச்சம்பவம் பற்றித் தெரிவித்தார்.

யாருக்காக இரக்கப்பட்டு தங்கள் சொந்த மண்ணைப் பகிர்ந்து கொண்டார்களோ, அவர்களே தங்களைச் சுட்டுக் கொல்வார்கள் என்று இந்த முதற்குடி மக்கள் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். ஒட்டகத்திற்கு இடம் கொடுத்த கதை எமக்குத் தெரிந்ததுதான். தாயகத்தில் முதற்குடி மக்களான எம்மினத்திற்கு நடப்பதுதான் இங்கேயும் இந்த மண்ணில் நடக்கிறதோ என்று சந்தேகம் அடிக்கடி எழுகிறது.

ஓன்ராறியோ மாகாணத்தில் மார்ச் மாதம் 17 ஆம் திகதி தொடக்கம் நடைமுறையில் இருக்கும் அவசரகால நிலையை மேலும் நீடிப்பதாக ஒன்ராறியோ முதல்வர் டக் போர்ட் அறிவித்திருக்கின்றார். இதன்படி யூன் மாதம் 30 ஆம் திகதிவரை அவசரகால நிலை நீடிக்க இருக்கின்றது. மேலும் நான்கு வாரங்களுக்கு நீடிக்கும் இந்த அவசரகால நிலை உத்தரவின்படி ஒரு வீட்டில் வசிக்கும் ஐந்து பேருக்கு மேல் ஒன்றாக ஒன்றுகூடுவதையும் அவசரகால நிலை தடைசெய்கின்றது.

 ரொறன்ரோவின் பொலீஸ்துறை தலைவர் மார்க் சாண்டர்ஸ் யூலை மாதத்துடன் தனது பதவியை இராஜினாமா செய்ய இருக்கின்றார். இவர் ரொறன்ரோ நகராட்சி பொலீஸ் சேவையின் பெரிய பதவியை வகித்த முதலாவது கறுப்பினத்தவராவார். இனவெறிக்கு எதிராக ஆங்காங்கே ஊர்வலங்கள் நடைபெறும் இச்சந்தர்ப்பத்தில், ரொறன்ரோ பொலீஸ் தலைமையகத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற உடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இந்த செய்தியை வெளியிட்டார்.

 கனடாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு காரணமாக மூத்த குடிமக்களுக்கு ஏற்பட்ட மேலதிக செலவுகளைச் சமாளிக்கக் கூடிய வகையில் யூலை மாதம் 6 ஆம் திகதி 500 டொலர்கள் வரை ஒரு முறை வழங்கப்பட இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். முதியோர் பாதுகாப்பு நலன் பெறுவோர் 300 டொலர்களும், உத்தரவாத வருமான நலன் பெறுவோர் 200 டொலர்களும், இரண்டுக்கும் தகுதியானவர்கள் 500 டொலர்களும் பெறுவார்கள். இதற்காக 2.5 பில்லியன் டொலர்களை ஒதுக்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். கனடாவில் உள்ள சுமார் 2.2 மில்லியன் மூத்த குடிமக்களுக்கு இந்த உதவி கிடைக்க இருக்கின்றது. அரசின் நிதி நிலைபற்றிக் கவலைப்படாமல், பாதிக்கப்பட்டவர்களை இனம் கண்டு உடனடியாக உதவி செய்வதில் கனடிய பிரதமர் முன்னிற்பதைப் பலரும் பாராட்டினார்கள்.

 இந்தியாவைப் பொறுத்தவரையில் கொரோனா வைரஸ்சால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை வரை 298,283 பேராக அதிகரித்து இருக்கின்றது. தொடர்வண்டிப் பயணிகளால் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவியிருப்பதாகத் தெரிகின்றது. மரணமானவர்கள் தொகை 8,502 ஆக அதிகரித்து இருக்கிறது. குணமடைந்தவர்கள் தொகை 146,908. இன்று மட்டும் டெல்கியில் 1877 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். டெல்கியில் 1,085 பேர் இதுவரை மரணம் அடைந்திருக்கிறார்கள். 34,687 பேர் இதுவரை டெல்கியில் பதிவாகி இருக்கிறார்கள். தற்போதைய நிலையில் மகாராஷ்ட்ரா 94,041 முதலாவது இடத்திலும், தமிழ்நாடு 36,841 இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன. மூன்றாவதாக டெல்கி 32,810 இருக்கின்றது. நான்காவது இடத்தில் குஜராத்தும் 21,521 ஆக இருக்கின்றது. 

 ஒன்ராறியோ மாகாணத்தில் இதுவரை 31,544 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 2,487 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். 25,855 பேர் குணமடைந்திருக்கிறார்கள். 924,680 பேர் இதுவரை கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஒன்ராறியோவில் பாதிக்கப்பட்டவர்களில் 17,106 பேர் பெண்கள். பாதிக்கப்பட்டவர்களில் 14,174 பேர் ஆண்கள். 19 வயதுக்கு உட்பட்டவர்கள் 1,314 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 20 - 60 வரை உள்ளவர்கள் 18,383 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 11,833 பேரும் இதில் அடங்குவர்.

கனடாவில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக (11-6-2020) இதுவரை 97,530 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். யூன் மாதம் முடிவில் இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. கியூபெக்கில் 53,485 பேரும், ஒன்ராறியோவில் 31,544 பேரும், அல்பேர்டாவில் 7,316 பேரும், பிரிட்டிஷ் கொலம்பியாவில் 2,694 பேரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏனைய மாகாணங்களில் சிறு தொகையினர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கொரோனா நோய் தொற்றுக் காரணமாக இதுவரை 7,994 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களில் 57,658 பேர் குணமடைந்திருக்கிறார்கள். 2,028,420 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறார்கள்.

 அமெரிக்காவில் கொரோன வைரஸ் காரணமாக 2,088,848 பேர் இதுவரை, (11-06-2020) பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 116,019 பேர் மரணமாகி இருக்கிறார்கள். 30,739 பேர் நியூயோர்க்கிலும், இதற்கு அடுத்ததாக நியூஜேர்சியில் 12,552 பேரும் மரணித்திருக்கிறார்கள். கொரோனா வைரஸ் தொற்றால் அதிக மரணமாகிவர்களில் அமெரிக்கா முதலிடத்தில் நிற்கின்றது.

 11-06-2020 வரை உலகத்தில் மொத்தமாக 6,652,482 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா 2,088,848 பிறேசில் 787,489 ரஸ்யா 502,436 இந்தியா 298,109 இங்கிலாந்து 291,409 ஸ்பெயின் 289,787 இத்தாலி 236,142 பெரு 208,823 ஆகியன எட்டு நாடுகள் இடம் பெறுகின்றன. ஒரு லட்சத்தைத் தாண்டிய நாடுகளில் ஜெர்மனி, ஈரான், துருக்கி, பிரான்ஸ், சில்லி, மெக்ஸிகோ, பாகிஸ்தான், சவூதி அரேபியா ஆகிய எட்டு நாடுகள் இதிலும் இடம் பெற்றிருக்கின்றன. இந்த வாரம் பாகிஸ்தானும், சவூதி அரேபியாவும் எண்ணிக்கையில் ஒரு லட்சத்தைத் தாண்டி இருக்கின்றன. இரண்டு வாரங்களுக்கு முன் 438,812 ஆக இருந்த பிரேஸில் நாட்டில் இந்த வாரம் 787,489 ஆக மாறி அமெரிக்காவுக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 35 பேர்தான் மேலதிகமாகப் பாதிக்கப்பட்டதாகச் சொல்லி சீனா 83,057 பேருடன் இவ்வாரக் கணக்கை நிறுத்திக் கொண்டது. இந்தியா இரண்டு வாரங்களுக்கு முன் 165,386 ஆக இருந்தது இன்று 298,109 ஆகி இருக்கிறது. இரண்டு வாரங்களில் 132,723 பேர் நோய் தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

 மருத்துவத்துறையினர் கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் ஆர்வமாக இருந்தாலும், மருந்து இன்னமும் கண்டு பிடிக்கப்படவில்லை. மருந்து கண்டு பிடிக்கும் வரையும் தனிமைப் படுத்தலைக் கடைப்பிடிப்பதுதான் இப்போதைக்குச் சிறந்த வழியாகும். கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 7,540,010 பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். 421,394 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டவர்களில் இதுவரை 3,822,644 பேர் குணமடைந்து இருக்கிறார்கள்.

கனடாவிலிருந்து குரு அரவிந்தன்