உலகின் வறிய மக்கள் மீள்வதற்கு பத்துவருடங்களாகும்

செவ்வாய் சனவரி 26, 2021

 கொரோனா வைரசினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து உலகின் வறிய மக்கள் மீள்வதற்கு ஆகக்குறைந்தது பத்துவருடங்களாவது ஆகும் என ஒக்ஸ்பாம் தெரிவித்துள்ளது.

அரசாங்கங்கள் துரிதமாக செயற்படவேண்டும் சமத்துவமின்மையை குறைப்பதற்கு உறுதியான தெளிவான காலவரையறைகளை வகுக்கவேண்டும் எனவும் ஒக்ஸ்பாம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையிலான இடைவெளி கொரோனா வைரசினை போல கொடியது என்பது நிருபிக்கப்பட்டுள்ளது என ஒக்ஸ்பாம் இன்டநசனலின் நிறைவேற்றதிகாரி கபிரியலா பச்சர் தெரிவித்துள்ளார்.


பொருளாதார மீட்பு மற்றும் மீள்எழுச்சி நடவடிக்கைகளின் மையமாக சமத்துவமின்மைக்கு எதிரான போராட்டம் காணப்படவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

உலக பொருளாதாரம் நூற்றாண்டுகால மந்தநிலையை எதிர்கொள்கின்ற அதேவேளை உலகின் ஆயிரம் மிகப்பெரும் செல்வந்தர்கள் பெருமளவிற்கு வெள்ளை இனத்தவர்கள் தாங்கள் இழந்த அனைத்தையும் மீள பெற்றுவிட்டனர் எனவும் ஒக்ஸ்பாம் எனவும் தெரிவித்துள்ளது.

79 நாடுகளை சேர்ந்த 295 பொருளியலாளர்கள் மத்தியில் ஒக்ஸ்பாம் மேற்கொண்ட ஆய்வின் போது 87வீதமானவர்கள் தங்கள் நாடுகளில் சமத்துவமின்மை அதிகரிக்க போகின்றது அல்லது மோசமாக அதிகரிக்கப்போகின்றது என தெரிவித்துள்ளனர்.

ஐம்பது வீதமானவர்கள் பால்நிலை சமத்துவம் அதிகரிக்கப்போகின்றது என குறிப்பிட்டுள்ள அதேவேளை இனங்களிற்கு இடையிலான சமத்துவமின்மையும் அதிகரிக்கப்போகின்றது எனவும் கருத்து வெளியாகியுள்ளது.

ஆய்வில் கலந்துகொண்ட மூன்றில் இரண்டு வீதமானவர்கள் அரசாங்கங்களிடம் உரிய திட்டங்கள் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.