உலகத் தாய்மொழி தினம் -நோர்வே ஈழத்தமிழர் அவை-

ஞாயிறு மார்ச் 03, 2019

21 பெப்ரவரி உலகத் தாய்மொழி தினமாகும். 1999 ஆம் ஆண்டு ஐ.நா வால் அமுல்படுத்தப்பட்ட  உலகத் தாய்மொழி தினம் இன்றுவரை அந்தந்த மொழிக்குச் சொந்தக்கார்களால் சிறப்பாகவும் உணர்வாகவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. மொழியே ஒரு நாட்டின் வளர்ச்சியின் திறவுகோல் என்பது நிதர்சனமான உண்மை. ஐநாவின் உலக மனித உரிமைகள் சாற்றுரையில் குறிப்பிட்டுள்ளது போல் இப்பூவுலகில் பிரசவித்த ஒவ்வொரு மனிதனிடத்திலும் இன, நிற, பால், மொழி, சமய, அரசியல் கருத்து, தேசியம், சொத்து, பிறப்பு பாகுபாடு காட்டேதே என்று அழுத்திக் கூறப்பட்டுள்ளது.

தாய்மொழியில் யார் பேசினாலும் நம் தாயிடம் பேசியதைப் போலப் மட்டற்ற மகிழ்ச்சி நமக்குள் ஏற்படுகிறது! நம்மை இணைக்கவும் ஒருமைப்பட வைக்கவும் புரியவைக்கவும்  தாய்மொழி உதவுவதால் எமது மொழி தாய்க்கு நிகரானது என்று சொல்லப்படுகின்றது. தமிழ் என்ற சொற்பதத்திற்கு இனிமை என்ற பொருளும் உண்டு. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய பைந்தமிழின் சொந்தக்காரர்கள் தமிழர்கள்.

எமது தேமதுரத் தமிழ்மொழிக்காக ஈழத்தமிழராகிய நாம் இழந்ததை இப்பூவுலகில் மானிடனாகப் பிறந்த எவராலும் கணக்கிடமுடியாது. தமிழிற்காகவும் எமது இருப்பிற்காகவும் மாண்டு மடிந்து போன ஈழவிடுதலைப் போராளிகளின் ஈகம் என்றுமே ஈடுசெய்ய முடியாது. இனத்தின் அடையாளமான மொழியை இழந்தால் இன அடையாளத்தையே இழந்ததிற்குச் சமன். 'ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் அந்த இனத்தின் மொழியை அழித்துவிடு' என்ற வல்லாண்மை சதி அரசியலின் கோட்பாடுகளுக்குள் உள்வாங்கப்பட்டு சிதைவிற்கு உள்ளாகி அந்த இனம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. தமிழர் ஒரு தேசிய இனமாக எம்மை நிலைநிறுத்துவதற்கு இன்று எம்மிடம் எஞ்சியுள்ள முக்கியமான போராட்ட ஆயுதம் எமது மொழியேயாகும். அந்த தொன்மையான மொழியின் சிதைப்பு என்பது பகைவர்களால் மிக நுண்மையான திட்டமிடல்கள் மூலம் நிகழ்த்தப்படுகிறது.

இப் பூவுலகில் முன்தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி என்றால் முன்தோன்றிய மொழியும் தமிழ்மொழி அல்லவா, அத்தகைய பழம்பெரும் இனத்தவர்கள் என்பதிலே, செந்தமிழ் மொழியின் சொந்தக்காரர் என்பதிலே நாம் சிந்தை மகிழ்ந்து பெருமையடைய வேண்டும். ஆகையினால் எமது தொன்மைகளை மேலும் ஆய்வுக்குட்படுத்தித் தமிழ்த்தேசியக் கருத்தியல் நிலைநிறுத்தப்பட வெண்டும்.

தாய்மொழியாம் தமிழ்மொழியின் சிறப்பை «ழ» என்ற உயிர்மெய் எழுத்தே சுட்டிநிற்கிறது. நம்முடைய தாய்மொழியாம் தமிழ் மிகவும் தொன்மையானதும், இனிமையானதும் ஆகும். தமிழில் இயற்றப்பட்ட திருக்குறள் சுமார் 2050 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. தமிழீழ அரசு நடைமுறையில் இருந்த காலத்தில் தமிழ்ப்பாடத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு அழிந்துகொண்டு இருந்த தூய தமிழிற்கு எமது தேசியத் தலைவரால் உயிர் ஊட்டப்பட்டது.

தமிழ்மொழி உலகில் தோன்றிய மொழிகளுள் மிகப் பழமையான மொழி என மொழி ஆய்வாளர்களால் நிறுவப்பட்டுள்ளது. பல அகழ்வாராச்சிகள் தமிழின் தொன்மைத் தன்மையை பறைசாற்றி நிற்கின்றன. தமிழ்மொழி உருவான காலத்தில் இருந்து இன்றுவரை தனது இனிமையும் இளமையும் சற்றும் குன்றாமல் இருக்கின்றது. முதற்சங்கம், இடைச்சங்கம் கடைச்சங்கம் என எமது முன்னோர்களால் அன்றைய காலத்திலேயே சங்கம் வைத்து வளர்த்த மூத்த மொழி எமது தமிழ்மொழி ஆகும். இயற்தமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் என மூவையாகப் பிரிக்கப்பட்டது தான் முதுமொழியான தமிழ்மொழி.

தமிழ்மொழி ஏனைய மொழிகளைவிட மிகநீண்ட இலக்கண இலக்கிய மரபுகளை உடைய காரணத்தால் தமிழ்மொழிக்கு செம்மொழி என்ற சிறப்பு அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. உலகத்திலேயே இணையத்தில் அதிகம் பயன்படுத்தும் மொழியாகவும் தமிழ்மொழி; உள்ளது. காலங்காலமாகப் பிறமொழிகளின் ஆதிக்கம் அதிகரித்த போதும் இன்றைக்கும் நிலைத்து இருக்கும் மொழி தமிழ் என்பது மிகவும் பெருமை கொள்ளத்தக்க விடயமாகும்.

ஒவ்வொருவரும் தம்தம் தாய்மொழியைப் போற்றி பாதுகாக்க உலகத் தாய்மொழி தினத்தில் உறுதி மொழி ஏற்று அதனை செயல்படுத்த முன்வருவோம். தாய்மொழியில் பேசுவோம், தமிழை எழுதுவோம், எமது சிறார்களுக்கு எமது தாய்மொழியைக் கற்றுக்கொடுப்போம். பிறமொழிச் சொற்களின் கலப்பைத் தவிர்த்து சுத்தத் தமிழில் பேசப் பழகுவோம். ஏனெனில் பழம்பெரும் சிறப்பு மிக்க செம்மொழியின் அதிசிறப்பை நாமே அழித்தவர்கள் என்ற பழிச்சொல்லுக்கு ஆனவர்களாகிவிடக்கூடாது. ''தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா'' என்ற முதுமொழிக்கு இணங்க உலகத்தமிழர் எல்லோரும் ஒன்றிணைந்து பைந்தமிழைக் காப்போம் என தமிழ்மொழிக்காகவும் தமிழ்த் தேசிய இனத்திற்காகவும் தம் இன்னுயிர்களை ஈகம் செய்த வீரமறவர்களின் ஆத்மா மீது ஆணையிட்டு நோர்வே ஈழத்தமிழர் அவை சார்பாகக் கேட்டுக்கொள்ளுகின்றோம். எம்மொழியாம் தமிழ்மொழியை வாழவைப்போம். வாழ்க தமிழ்மொழி;! வாழிய வாழியவே!

'தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்'

'யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்'

-தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்-

-நோர்வே ஈழத்தமிழர் அவை-