உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை

திங்கள் நவம்பர் 23, 2020

1941ஆம் ஆண்டு பிறந்த முனைவர் அலெக்சாண்டர் எம். துபியான்சுகி, 1970இல் கீழை நாட்டு மொழிகளுக்கான நிறுவனத்தில் பட்டம் பெற்றார். தமிழ்மொழியில் சிறந்த புலமைப் பெற்றவர். தமிழை சரளமாகப் பேசக் கூடியவர்.

மாசுகோ பல்கலைக்கழகத்தின் ஆசிய-ஆப்பிரிக்க நாடுகள் பற்றிய கல்லூரியில் ஆசிரியராகவும், ஆராய்ச்சியாளராகவும் பணியாற்றினார். 1924ஆம் ஆண்டில் தமிழ் இலக்கணம் என்ற நூலை அவர் வெளியிட்டார். ருசிய நாட்டில் தமிழைப் பரப்புவதற்கான முதல் தமிழ் முயற்சி என்று அதைக் கூறலாம். லெனின்கிராடில் தமிழ் பயிற்றுவிக்கும் ஒரு பள்ளியைத் தமது சொந்த முயற்சியினால் தொடங்கினார். ருசிய மொழி இலக்கியத்திற்கும், தமிழ் மொழி இலக்கியத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதைப் பற்றி அவர் பின்வருமாறு கூறியுள்ளார். “ருசிய இலக்கியம் புதிய இலக்கியம். அது பன்னிரண்டாம் நூற்றாண்டில்தான் தொடங்கியது. ஆனால், தமிழ் இலக்கியமோ கி.பி. முதலாம் நூற்றாண்டிலேயே மிகவும் முதிர்ச்சியடைந்த நிலையில் உள்ளது. ருசிய மொழி இலக்கியம் மக்கள் புரட்சி, உலகப் பெரும் போர் பற்றி அதிகமாகத் தெரிவிக்கிறது. தமிழில் உள்ளதுபோல் வரலாற்று இலக்கியம் ருசிய மொழியில் குறைவு. திருக்குறளுக்கு இணையான நூல் உலகின் எந்த மொழியிலும் இல்லை. அதை அப்படியே சுவை குன்றாமல் வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்ய முடிவதே இல்லை”.

  1979ஆம் ஆண்டில் ஓலைச் சுவடியில் தமிழ்ப் பாடல்கள் என்ற தலைப்பில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய நூல்களிலிருந்து சில பாடல்களைத் தேர்ந்தெடுத்து ருசிய மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். 1987ஆம் ஆண்டில் தமிழ் இலக்கியம் என்ற தலைப்பில் பத்தொன்பதாவது நூற்றாண்டு வரையிலான தமிழ் இலக்கியங்கள் குறித்து ருசிய மொழியில் எழுதியுள்ளார். 1989ஆம் ஆண்டு “பழந்தமிழ் பாடல்களில் சடங்கு”, “புராண இலக்கிய வேர்கள்” என்னும் இரு நூல்களை ருசிய மொழியில் எழுதியுள்ளார். இந்த நூல்கள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. புறநானூற்றை ருசிய மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். சங்க இலக்கியத்தில் இடம்பெறும் சடங்குகள், தொன்மங்கள் குறித்து இரண்டாயிரம் ஆண்டில் அவர் எழுதிய நூல் தமிழுக்கு அவர் அளித்த முக்கியமான பங்களிப்பாகும்.

  ஏறத்தாழ 50ஆண்டுகளுக்கு மேலாக தனியொரு அறிஞராகத் திகழ்ந்து, ருசிய நாட்டில் தமிழ் கற்பித்து வந்த பெருமை அவருக்கு உண்டு. பத்து பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு அவர் தமிழ் கற்பித்தார். இதழியல், வெளியுறவு போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் அவரிடம் தமிழ் கற்றனர்.

  சிறந்த தமிழறிஞரான அலெக்சாண்டர் துபியான்சுகி அவர்களின் மறைவு தமிழுக்கும், தமிழ்கூறும் நல்லுலகிற்கும் பேரிழப்பாகும்.