உளுந்து பயிர்ச்செய்கையில் ஈடுபட வேண்டும்

வியாழன் செப்டம்பர் 24, 2020

 உள்நாட்டு உளுந்தை பயன்படுத்தி உணவு பொருட்களை உற்பத்தி செய்வதன் ஊடாக அந்நிய செலாவணியை நாட்டில் சேமிக்க கூடியதுடன், உள்ளூர் விவசாயிகளை பலப்படுத்தவும் முடியும் என பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பப்படம் மற்றும் மசாலா உற்பத்தியாளர்களுடன் நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பசில் ராஜபக்ஷ அவர்கள் இதனை குறிப்பிட்டார்.

சந்தையில் காணப்படும் உளுந்து தட்டுப்பாடு காரணமாக சிறிய மற்றும் பாரியளவிலான மசாலா உற்பத்தியாளர்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகங் கொடுத்துள்ளதாக இதன்போது பப்படம் மற்றும் மசாலா உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டினர்.

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் உளுந்து மாவின் விலை ரூபாய் 800 ஆகக் காணப்படுவதுடன், ஒரு கிலோகிராம் தோல் நீக்கப்பட்ட உள்ளூர் உளுந்தின் விலை ரூபாய் 1300 ஆகக் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய உற்பத்தியாளர்கள், இதன் காரணமாக நுகர்வோர் உள்ளூர் உளுந்து பாவனையைவிட இறக்குமதி செய்யப்படும் உளுந்து மாவை நுகர்வது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளனர்.

நாட்டின் தேசிய தேவையாக காணப்படும் 20 ஆயிரம் தொன் உளுந்தில் வெறும் 5 ஆயிரம் தொன் உளுந்து மாத்திரமே இலங்கையில் பயிரிடப்படுகிறது.

விவசாய திணைக்களத்தின் ஊடாக ஆரம்பிக்கப்படும் ‘சௌபாக்யா’ திட்டத்திற்கு அமைய இவ்வாண்டு முதல் உளுந்து பயிரிடப்படும் ஏக்கர்களின் அளவை அதிகரித்து 25 ஆயிரம் தொன் அறுவடையை பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக குறித்த கலந்துரையாடலின் போது தெரிவிக்கப்பட்டது.