உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது !

சனி சனவரி 11, 2020

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் பிள்ளையள்!

‘பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவல கால வகையினானே’ என்று அந்தக் காலத்தில் பவணந்தி முனி
வர் சொன்னாலும் தான் சொன்னார், அதைச் சிரமேல் எடுத்துப்போன வருசத்து துர்விடயங்களை எல்லாம் மறந்து இனி வரப் போகிற நல்ல விடயங்களைப் பற்றிப் புது வருசத்தில் எங்கடை ஆட்கள் சிந்திக்கிறது நல்லது தான் பாருங்கோ.

111

ஆனால், அதுக்காக வெளிநாடு வந்ததும், பழசை எல்லாம் மறந்து போய் புதுமை என்ற பெயரில் கூத்தடிக்கிறது இருக்குதெல்லோ, உதை விட வேறை ஒரு கேடு கெட்ட காரியம் இருக்கவே முடியாது பிள்ளையள்.

விசயம் இது தான் பிள்ளையள்.

யுத்தம் நடந்த காலத்தில் வன்னியில் எங்கடை புலிப்பிள்ளையளுக்குப் பக்கபலமாக இருந்த என்ரை வயது எழுத்தாளர் ஒருத்தர் இஞ்சை ஸ்காபுறோ பக்கம் தான் இருக்கிறார். அவர் தான் எழுதின நாடகம் ஒன்றை யுத்தத்தின் இறுதி நாட்களில் தவற விட்டிட்டார். அதைத் தேடிக் கடந்த பத்து வருசமாக மனுசன் ஊர் ஊராக அலைந்து திரியுது. ஆனால் ஒருத்தரிட்டையும் அந்த நாடகப் பிரதி இருக்கிறதாக தெரியவில்லை.

போன கிழமை கிறஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு சுவிசில் உள்ள என்ரை மருமகனிட்டை போன இடத்தில் அங்கை முன்னாள் போராளிப் புகைப்படப் பிடிப்பாளர் ஒருத்தர் வந்திருந்தவர். அவரிட்டை சாடையாக நான் சங்கதியைச் சொல்ல, தான் முயற்சி செய்து பார்க்கிறேன் என்று ஆள் உடனேயே சொன்னவர். ஆள் சொன்ன தோரணையில் எனக்கு ஆரம்பத்திலேயே பெரிசாக நம்பிக்கை இருக்கவில்லை.

சரி, மயிரைக் கட்டி மலையை இழுத்தன், வந்தால் மலை, போனால் மயிர் என்ற கதையாக ஒரு கிழமை கழிச்சு ஆளுக்கு நான் போன் எடுத்துப் பார்த்தேன். ஆள் ஆசுப்பத்திரியில் கிடக்கிறார் என்று அவரின்ரை சிநேகிதன் சொன்னார்.

எனக்கு உடனேயே சந்தேகம் வந்திட்டுத்து. வெள்ளை வானில் கடத்தப்பட்ட ஆட்களை மொனராகலையில் உள்ள குளத்தில் இருக்கிற முதலைகளுக்கு கோத்தபாய தீனியாகக் கொடுத்தவர் என்று செய்தியாளர் மாநாட்டில் சொன்னதுக்காகத் தன்னை சிறையில் அடைக்கப் போகிறாங்கள் என்று பயந்து லங்கா மருத்துவமனையில் ராஜித சேனாரட்ண போய்ப் படுத்துக் கிடந்த மாதிரித் தான் இவரும் நடிக்கிறாரோ என்று நான் முதலில் ஐயப்பட்டனான். பிறகு தான் கேள்விப்பட்டேன் அவர் தனக்கு நிரந்தர விசா கிடைச்ச சந்தோசமான செய்தியைப் புது வருசத்து அன்றைக்கு தண்ணிப் பார்ட்டி வைச்சுக் கொண்டாடி, அதில் கால்தடக்கி விழுந்து காயப்பட்டு ஆசுப்பத்திரியில் படுத்துக் கிடக்கிறாராம் என்று.

இதைக் கேட்டதும் எனக்கு மண்டை கிறுகிறுத்துப் போச்சுது பிள்ளையள். எவ்வளவு ஒழுக்கம், கட்டுப்பாட்டோடை எங்கடை தம்பி பிரபாகரன் கட்டி வளர்த்த இயக்கம் பாருங்கோ. இட்டதெல்லாம் பயிராகுமா? என்று அந்தக் காலத்தில் எங்கடை அப்பு, ஆச்சிமார் சொன்னாலும், தம்பி பிரபாகரன் கட்டி வளர்த்த இயக்கத்தில் இருந்து வந்தவையள் என்ற வகையில் தம்பியின்ரை மரியாதையையும், மாவீரர்களின் தியாகங்களையும் பேணிப் பாதுகாக்கிற மாதிரி எல்லோரும் நடக்கிறது முக்கியம் பிள்ளையள்.

அதை விட்டுப் போட்டு ஒரு நாளைக்கு ஒரு பெண்சாதி என்ற கதையாக கிருஸ்ண லீலை செய்து கொண்டிருக்கிற துரோகி கருணாவைப் போல் ஒரு சில முன்னாள் போராளிகள் ஒழுக்கம் கெட்டு நடந்தால், பாதிக்கப்படப் போகிறது எங்கடை தேச சுதந்திர இயக்கம் தானே?

எதிரியின்ரை பிடியில் இருந்து தப்பி வந்த எத்தினையோ போராளிகள் இன்றைக்கு வெளிநாட்டில் அதே ஒழுக்கத்தோடு, அதே கட்டுப்பாட்டோடு, தம்பி பிரபாகரனின்ரையும், மாவீரர்களின்ரையும் மரியாதையைக் காப்பாத்துகிற மாதிரி நடக்கீனம்.

இன்றைக்குப் பத்து வருசமாக ஆயுதங்களுக்கு ஓய்வு கொடுத்தாலும் போராளிகளுக்குரிய பண்போடு, பக்குவத்தோடு தான் இந்த முன்னாள் போராளிகள் எல்லாம் நடக்கினம்.

ஆனால் இந்த முன்னாள் போராளிகளுக்கு எல்லாம் இழுக்கைத் தேடித் தருகிற மாதிரி ஒரு சில கோடரிக் காம்புகள் நடந்து கொள்கிறதை நினைச்சால், எனக்கு நெஞ்சே வெடிச்சு விடும் போல் இருக்குது.

ஊசியைக் காந்தம் இழுக்கும், உத்தமனைச் சிநேகம் இழுக்கும் என்கிற மாதிரி வெளிநாடு வந்ததும் பள்ளிக்
கூடத்துச் சிநேகிதங்களும், வேலையிடத்து நண்பர்களும் பிழையான வழியில் வழிநடத்துவதற்கு காத்திருப்பீனம் தான்.

ஆனால் அதுக்காகத் தம்பி பிரபாகரனும், மாவீரர்களும் சொல்லித் தந்த ஒழுக்க நெறியைக் கைவிடலாமோ?

‘ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்’ என்று அந்தக் காலத்தில் வள்ளுவர் என்ற சும்மா விளையாட்டுக்கே சொன்னவர்?

இதுக்குள்ளை ‘ஏன் தம்பி இயக்கத்தின்ரை மானத்தைக் கப்பல் ஏற்றுகிற மாதிரி நடக்கிறாய்?’ என்று அந்த முன்
னாள் போராளிப் புகைப்படப் பிடிப்பாளரிட்டை நான் கேட்டதுக்கு அவர் சொன்னார், ‘ஐயா, நாங்கள் போராளிகளாக இருக்கும் போது எங்கடை ஆசைகளை எல்லாம் அடக்கி வைச்சுத் தான் போராடினம்.

இப்ப எங்கடை ஆசைகளை பார்டி வைச்சு நாங்கள் வெளிப்படுத்துகிறதில் உங்களுக்கு என்ன பிரச்சினை?’

ஆசைகளை வெளிப்படுத்துகிறதில் பிழை இல்லை பிள்ளையள். ஆனால் எல்லாத்துக்கும் ஓர் அளவு வேண்டும் பாருங்கோ. சரி, வெளிநாட்டில் இருக்கிற எல்லோரையும் போல் கிறிஸ்மசுக்கும், புத்தாண்டுக்கும் குடும்பமாக, நண்பர்களோடு சேர்ந்து சந்தோசமாகப் பொழுதைக் கழிக்கிறது தப்பில்லை.

சரி, இப்ப இயக்கத்தில் இல்லை தானே என்று மதுபானம் அருந்துகிறது கூட தப்பில்லை.அதுக்காக இயக்கத்தின்ரை பெயரைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்குகிற மாதிரி மதுபோதையில் கூத்தடிக்கிறது என்பது எந்த விதத்தில் நியாயம்?

‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்று சும்மாவோ தமிழில் ஒரு பழமொழி எழுதி வைச்சவையள்?

இதுக்குள்ளை அவர் எனக்குச் சொல்கிறார், ‘நாட்டுக்காக நான் என்ரை கால் ஒன்றை இழந்திருக்கிறேன்.

நீங்கள் எதையாவது இழந்திருக்கிறியளோ? இல்லை தானே? எனவே நீங்கள் எனக்கு அறிவுரை சொல்லத் தேவையில்லை. நாட்டுக்காக நான் செய்த தியாகத்தோடு ஒப்பிடேக்குள்ளை நான் விசா பார்டி வைச்சதில் எந்தத் தப்புமில்லை.’

இதுக்குப் பிறகு நான் என்ன செய்யிறது? ‘உப்பைத் தின்றவன் தண்ணி குடிப்பான், தப்புச் செய்தவன் தண்டனை கொள்வான்’ என்று அந்த நாளில் என்ரை அப்பு சொன்னதை மனதுக்குள் நினைச்சுப் போட்டு வந்திட்டன்.

ஆனாலும் ஒன்று சொல்கிறேன் பிள்ளையள். இப்பிடியே தப்புச் செய்கிறவையள் எல்லோரும், கடந்த காலங்களில் தேச விடுதலைக்காகத் தாங்கள் செய்த அர்ப்பணிப்புக்களுக்கும், தாங்கள் இழந்தவைகளுக்கும் கணக்கு எழுத வெளிக்கிட்டால் எங்கடை தேசம் ஒரு நாளும் தாங்காது.

எங்கடை தேச விடுதலைக்காக முப்பதுனாயிரம் மாவீரர்மார் தங்கடை உயிரைக் குடுத்துப் போட்டு அமைதியாக மீளாத் துயில் கொள்ளுகீனம். சில பேர் ஐம்பதுனாயிரம் மாவீரர்கள் என்றும் கணக்குச் சொல்லுகீனம்.
எத்தனையோ ஆயிரமாயிரம் தாய், தகப்பன்மார் தங்கடை பிள்ளைகளை மாவீரர்களாகக் குடுத்துப் போட்டு சத்தம் சந்தடி இல்லாமல் இருக்கீனம்.

அப்பா, அம்மா, தம்பி, தங்கச்சி, அக்கா, அண்ணன், மனைவி, கணவன், மகள், மகன், நண்பன், நண்பி என்று எத்தனையோ உறவுகளை மாவீரர்களாகக் குடுத்துப் போட்டு எங்கடை சனம் அமைதியாக இருக்குது.

இன்னும் எத்தனையோ முன்னாள் போராளிகளும், செயற்பாட்டாளர்களும், ஆதரவாளர்களும் நாட்டிலையும் சரி, வெளிநாட்டிலையும் சரி எத்தனையோ தியாகங்களைச் செய்து போட்டு அமைதியாக, ஒழுக்கத்தோடு இருக்கீனம்.

இவையள் யாருமே தாங்கள் செய்ததைக் கணக்குப் பார்க்கிறதில்லை. உதைத் தான் ‘உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது’ என்கிறது.

ஏதோ சம்பந்தப்பட்டவையள் புரிஞ்சு கொண்டு நடந்தால் சரி.ஆனாலும் ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் சந்திரன் போல் ஆகாது என்கிற மாதிரி, தம்பி பிரபாகரன் மாதிரி ஒரு உத்தமனும் இல்லை பாருங்கோ.
வரட்டே?

நன்றி: ஈழமுரசு

111