உழவு இயந்திரம் பேரணி- தடைவிதிக்க உச்சநீதிமன்றத்தில் மனு!

திங்கள் சனவரி 18, 2021

குடியரசு தினத்தன்று, டெல்லியில் விவசாயிகள் நடத்தப் போவதாக அறிவித்துள்ள உழவு இயந்திர பேரணிக்கு தடை விதிக்கக் கோரும் மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை நடத்துகிறது. 

டெல்லி அருகே விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 54-வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசுக்கும், விவசாய சங்கங்களுக்கும் இடையே நடைபெற்ற 9 கட்டப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. 

இந்நிலையில் குடியரசு தினத்தில் டெல்லியில் ஒரு லட்சம் உழவு இயந்திரம் பேரணி நடத்தவுள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

இதற்காக பஞ்சாப் மாநிலத்திலிருந்து ஏராளமான விவசாயிகள் டெல்லியை நோக்கி சென்ற வண்ணம் உள்ளனர். இந்நிலையில், குடியரசு தின அணிவகுப்பை சீர்குலைக்க, விவசாயிகள் திட்டமிட்டுள்ளதாகவும், உழவு இயந்திரம் பேரணிக்கு தடை விதிக்கவேண்டும் எனவும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

இதுபோன்ற போராட்டங்கள் நாட்டை இழிவுபடுத்துவது போன்றது என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை இன்று விசாரிக்க உள்ளது.

இதனிடையே, வேளாண் சட்டங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உச்ச நீதிமன்றம் அமைத்த குழு நாளை கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.