உண்மையை இனங் காண்பதுதான் இளைஞர்களின் முதற்பணி!!!!!

திங்கள் ஓகஸ்ட் 12, 2019

தமிழினத்தில் இருக்கக்கூடிய சில அரசியல் தரப்புகள் செய்கின்ற திருகுதாளங்களுக்கு அளவே இல்லை என்றாயிற்று.

யுத்தத்தின்போது மரணித்த பல்லாயிரக் கணக்கான எம் உறவுகளின் இழப்பில்; சிலர் அரசியல் நடத்துவதை எண்ணும்போது இப்படியும் ஈனப் பிறப்புகள் இருக்கின்றனவா என்று எண்ணத் தோன்றும்.

அந்தளவுக்கு நியாயம்,நேர்மை,அறம் என்பவற்றையயல்லாம் புறந்தள்ளி,எத்துணை தூரம் கேடு செய்ய முடியுமோ அந்தளவுக்குக் கேடு செய்யத் துணிந்து விட்ட ஒரு சமூகம் உருவாகிவிட்ட பின்பு, எதுவும் விமர்சனத்துக்கும் வில்லங்கத்துக்கும் உட்பட்டதாகவே  இருக்கும்.

யாரும் எதுவும் செய்ய முடியாது.நன்மை செய்தாலும் அதனைத் தீமையாக வர்ணிக் கின்ற பயங்கரமான நிலைமை இருக்கும் அதே நேரம், கெடுதியை உச்சமான நன்மை என்று வாதிடுவதற்கும் தயாராகிவிட்டால்,அதுவே அழிவிற்கான அறிகுறியாகும்.

இந்தத் துர்ப்பாக்கிய நிலை எங்கள் மண்ணில் விளைந்து விட்டது.

இதனை வேரறுத்து நீதியை நீதி என்றும் அநீதியை அநீதி என்றும் எடுத்துரைக்கக்கூடியதான அறம் சார்ந்த மக் கள் சமூகத்தை தோற்றுவிக்க வேண்டும். அப்போதுதான் எம் மக்கள் இந்த மண்ணில் நிம்மதியாக வாழ முடியும்.

இந்த நிலைமையை ஏற்படுத்தக்கூடிய மிக உன்னதமான பலம் எங்கள் இளைஞர்களிடமே உண்டு.

மண் மீட்புப் போரில் எத்தனையோ இளைஞர்கள் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர்.

அவர்களின் தியாகம் வீண் போகக்கூடாது என்று ஒரு இளைஞன் நினைப்பானாயின் அவனின் முதற் பணி தமிழினத்துக்குத் துரோகம் செய்கின்ற-விசமத்தனம் புரிகின்ற-போக்கிரித்தனமான அரசியல் நடத்துகின்றவர்களை இனங்காண்பதுதான்.

இவ்வாறு நயவஞ்சகத்தனம் மிக்கவர்களை இனம் காணாதவரை; அயோத்தி மாநகரைப்போல் சிம்மாசனத்தில் பாதுகையும் அசோகவனத்தில் சீதையும் மனக்குழப்பத்தில் இராமனும் இருக்க, அயோத்தி மக்கள் துன்பத்தில் வாழ்ந்த சூழ்நிலைதான் நமக்கும் உரித்தாகும்.

ஆக,இங்கு நாம் கூறுவது தசரதன் வரம் கொடுத்ததையோ,கைகேயி இராமன் காடேக!என்று வரம் கேட்டதையோ,இராவணன் சீதையைக் கடத்திச் சென்றதையோ அல்ல.

மாறாக தசரதர் மாளிகையில் உடன் இருந்து அந்த மன்னர்க்கு அள்ளி வைத்த கூனி இருக்கிறாளே இவளே இத்துணை கெடுதிக்கும் கால்கோள் இட்டவள்.

ஆகையால் அன்புக்குரிய இளைஞர்களே! கூனிகளை இனங்காணுங்கள். இனங்கண்டு தக்கபாடம் புகட்டுங்கள். பட்டாபிஷேகம் இலகு வாக நடந்தேறும்.

ஆகையால் உண்மையானவர் யார்?என் பதை சீர்தூக்கிப் பாருங்கள். நிச்சயம் உங்களின் தீதில்லா இதயம் தர்மம் எது என்பதை இனங்கண்டு கொள்ளும்.

நன்றி-வலம்புரி