உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும்!

வியாழன் நவம்பர் 14, 2019

வேலூர் சிறையில் இருக்கும் முருகன் உண்ணாவிரதத்தை கைவிடவேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம்  இன்று அறிவுறுத்தியுள்ளது.

முருகன் அறையில் செல்போன் சிக்கியதால் அவருக்கான சலுகைளை சிறைத்துறை நிர்வாகம் ரத்து செய்தது. தன்னை தனி அறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதாக கூறி முருகன் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். வைத்தியர்கள  குழுவினர் அவரது உடல் நிலையை கண்காணித்தனர். சாப்பிடாமல் இருந்ததால் முருகன் மிகவும் சோர்வாக காணப்படுகிறார்

இதற்கிடையே, முருகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். அவரது உயிரை காப்பாற்ற மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என அவரது உறவினர் தேன்மொழி என்பவர் சென்னை உயர் நீதிமன்றில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனு உயர் நீதிமன்றில்  இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், உண்ணாவிரதத்தை கைவிடும்படி முருகனுக்கு அறிவுறுத்தியது.

மேலும், முருகனை சந்திக்க மனைவி நளினி மற்றும் உறவினர்களை அனுமதிக்க வேண்டும் என சிறைத்துறைக்கு உத்தரவிட்டது.