உணர்வுகொண்ட நாட்டுப் பற்றாளர் அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களின் வீரவணக்க நிகழ்வு!

வியாழன் மார்ச் 21, 2019

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தேசிய செயற்பாட்டாளரும் எமது தேசத்தின் விடுதலையை ஆழமாக இறுதிவரை நேசித்தவருமான நாட்டுப் பற்றாளர் அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களின் வீரவணக்க நிகழ்வு இன்று 21.03.2019 வியாழக்கிழமை இப்பினே வில்தனுஸ் பகுதியில் பிற்பகல் 15.00 மணி முதல் 16.30 மணி வரை உணர்வெழுச்சியோடு இடம்பெற்றது.

முதலில் நாட்டுப்பற்றாளர் அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களின் வித்துடல் மீது தமிழீழத் தேசியக் கொடி போர்த்தி மதிப்பளிப்புச் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் பொதுச்சுடரினை கேணல் பருதி அவர்களின் தாயார் ஏற்றிவைக்க ஈகைச்சுடரினை நாட்டுப்பற்றாளர் அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களின் துணைவியார் ஏற்றிவைத்தார். வித்துடலுக்கான மலர்மாலையை நாட்டுப்பற்றாளர்  அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களின் குடும்பத்தினர் ஒன்றாக அணிவித்து மலர்வணக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது.

தேசிய செயற்பாட்டாளர் அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்கள், நாட்டுப்பற்றாளராக மதிப்பளிக்கப்பட்டார். குறித்த மதிப்பளிப்பு தொடர்பான அறிக்கை வாசிக்கப்பட்டது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் ஏனைய கட்டமைப்புக்கள் பலவற்றினதும் அறிக்கைகளும் வாசித்தளிக்கப்பட்டன.

சமநேரத்தில் நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் நாட்டுப்பற்றாளர் அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களின் வித்துடலுக்கு அணிவகுத்து கண்ணீரோடு மலர்வணக்கம் செலுத்தியதுடன், பலரும் நாட்டுப்பற்றாளர் அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களின் நினைவாக உரையாற்றியதுடன் கவிதைகளையும் அறிக்கைகளையும் கண்ணீர்மல்க வாசித்தளித்தனர்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் வீரவணக்க நிகழ்வு நிறைவுகண்டது. தொடர்ந்து எதிர்வரும் 23.03.2019 சனிக்கிழமை நாட்டுப்பற்றாளர் அலெக்ஸா ண்டர் பவுஸ்ரின் அவர்களின் இல்லம் அமைந்துள்ள கிறினி பகுதியில்  காலை 10.00 மணிக்கு இறுதி வணக்க நிகழ்வு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.