உ.பி- அறுவைசிகிச்சை அறையில் படுத்து கிடந்த நாய்! கேள்விக்குள்ளாகும் அரசு மருத்துவமனை?

ஞாயிறு சனவரி 17, 2021

உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அறையில் தெருநாய் ஒன்று படுத்துக்கிடக்கும் சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் சம்பால் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில், இறந்துபோன சிறுமியின் உடலை நாய் கடித்து இழுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி கடும் கண்டனத்தை பெற்றது.

இந்த சுவடு மறைவதற்குள் மீண்டும் ஒரு சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்து உள்ளது. மொராதாபாத் மாவட்டம் சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள பண்டிட் தீன் தயால் உபாத்யாய் அரசு மருத்துவமனையின் இரண்டாவது மாடியில் பெண் நோயாளிகளுக்கான அறுவை சிகிச்சை அறை அமைந்துள்ளது.

இந்த வார்டில் உள்ள படுக்கை ஒன்றில் தெருநாய் ஒன்று சாகவாசமாக படுத்துக்கிடக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அரசு மருத்துவமனையின் இந்த அலட்சியத்தை பலரும் கண்டித்து வருகின்றனர்.

இதுகுறித்து மருத்துவமனை தரப்பில் கூறும்போது, 'நாய் இருந்த நேரத்தில் சம்பந்தப்பட்ட வார்டு, நோயாளிகள் இன்றி காலியாகத்தான் இருந்தது என்றும் முழுமையான விசாரணைக்கு பின்னர் பொறுப்பில் இருந்த ஊழியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது டிஜிட்டல் இந்தியாவின் பரிணாமவளர்ச்சி என்று சமூக வலைத்தளங்களில் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.