ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி! விஜயகாந்த் அறிவிப்பு-

புதன் செப்டம்பர் 15, 2021

சென்னை- தமிழ்நாட்டில் உள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

ஓக்டோபர் 6, 9 திகதிகளில் தமிழ்நாட்டில் உள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் தேமுதிக தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை;

தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடுகிறது. போட்டியிட விரும்பும் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் ஊரக உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனுக்களை நாளை (செப்.,16), நாளை மறுநாள் (செப்.,17) ஆகிய இரண்டு நாட்களில் காலை 10 மணியளவில் அந்தந்த மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுவை பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு அளிப்பதற்கு கட்சியின் நிர்வாகிகளாக இருப்பவர்களும், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள்.

மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு ரூ.4 ஆயிரமும், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பகுதிக்கு ரூ.2 ஆயிரமும் விருப்ப மனு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.