ஊரடங்குகளை அமல்படுத்துவதால் மட்டுமே கொரோனா வைரஸை அழித்துவிட முடியாது: உலக சுகாதார நிறுவனம்

வெள்ளி மார்ச் 27, 2020

ஜெனிவா: ஊரடங்குகளை அமல்படுத்துவது மட்டுமே கொரோனா வைரஸை அழிக்க போதுமான நடவடிக்கை அல்ல என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கொரோனாவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த உலகின் பல நாடுகள் லாக்டவுன் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் கொரோனா வைரஸை அழித்துவிட முடியாது. இத்தகைய ஊரடங்குகள், லாக்டவுன்கள் ஆகியவற்றின் மூலம் பொதுமக்களை வெளியே நடமாட வேண்டாம்; வீடுகளில் முடங்கி இருங்கள் என அறிவுறுத்தப்படுகிறது. இவை அனைத்துமே மருத்துவ துறை மீதான குவிகிற அழுத்தங்களை குறைக்கக் கூடியவை மட்டும்தான்.

ஊரடங்கு மற்றும் லாக்டவுனை அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டும் என அழைப்பு விடுக்கப்படுகிறது. இது கொரோனா வைரஸை அழிப்பதற்கான 2-வது வாய்ப்பாக கருதப்படுகிறது. ஏனெனில் கொரோனாவை உங்கள் நாட்டுக்குள் நுழையவிடக் கூடாது என்கிற முதல் வாய்ப்பை உலக நாடுகள் தவறவிட்டுவிட்டன.

அதேநேரத்தில் இந்த 2-வது வாய்ப்பில் எப்படி கொரோனாவை அழிக்கப் போகிறோம் என்பதுதான் கேள்வி. கொரோனா பாதித்தவர்களை தனிமைப்படுத்துதல், பரிசோதித்தல், சிகிச்சை அளித்தல், நோய் தொற்று பரவலை கண்டுபிடித்தல் என்பவை மட்டுமே போதுமானது அல்ல. இந்த கொரோனா வைரஸை எப்படி தடுத்து அழிப்பது என்பதும் முக்கியம்.