ஊருக்கு தான் உபதேசம் தனக்கு இல்லை

திங்கள் செப்டம்பர் 13, 2021

 தீவிரவாத கோட்பாடுகள் மற்றும் தீவிரவாத வன்முறைகள் தற்போதைய யுகத்தின் பிரதான சவால்களாகும். அனைத்து சவால்களையும் வெற்றி கொள்ள உலக நாடுகள் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும். மனிதக் கடத்தலை முற்றாக இல்லாதொழிப்பது சிறிலங்கா  அரசாங்கத்தின் பிரதான அணுகு முறையாகும் என சிறிலங்கா  பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்தார்.

மனித குலத்துக்கு மரண அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொவிட்-19 வைரஸ் பெருந்தொற்றினால் ஏற்பட்டுள்ள சுகாதார பாதிப்பு அனைவரையும் ஒன்றிணைத்துள்ளது. தொற்றிலிருந்து மீள வேண்டுமாயின் அனைவரும் சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தடுப்பூசி மற்றும் சுகாதார பாதுகாப்பு வசதிகளை அனைத்து நாடுகளும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள வேண்டும். தற்போதைய நிலை சிலர் மாத்திமன்றி அனைவரும் வெற்றி பெறுவதற்கான போராட்டமாகும் என்றும்  சிறிலங்கா  பிரதமர் தெரிவித்தார்.

ஜி20 அரச தலைவர்களின் மாநாடு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் இத்தாலி தலைநகரான ரோமில் நடைபெறவுள்ள நிலையில், அதனை முன்னிட்டு ஜி20 சர்வமத மாநாடு இடம்பெறுகிறது.

இத்தாலியின் பொலோக்ஞா நகரில் நடைபெறும் ஜி 20 சர்வமத மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ நேற்று (13) இடம்பெற்ற முதலாவது அமர்வில் உரையாற்றியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நல்லிணக்கம் என்பது மிகவும் அவசியமானதாகும். மோதல்களும் அதிகரிக்கும் இடையூறுகளும் பொதுவானவை. வெறுப்பை வெறுப்பால் அல்ல அன்பினால் மாத்திரம் வெல்ல முடியும் என்பது நம் மத போதனையாகும்.

கடந்த கால குறைகளை பற்றி விவாதிப்பதற்கு பதிலாக, நிகழ்காலத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும்.சகோதரத்துவம் மற்றும் புரிதல் ஊடாக உறவுகளை வளர்த்துக கொண்டால் நாம் அனைவரும் எதிர்பார்க்கும் இலக்கை அடைய முடியும் எனவும் தெரிவித்தார்.