உடுகம்பொல துப்பாக்கிச் சூட்டில் பலியான அப்பாவி இளைஞன்!

சனி ஓகஸ்ட் 06, 2022

உடுகம்பொல வல்பொல பிரதேசத்தில் இன்று (06) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கிதாரியின் இலக்கு தவறி எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபடாத 22 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை 9.45 மணியளவில் உடுகம்பொல வல்பொல பிரதேசத்தில் அழகு கலை நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் அங்கிருந்தவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டிருந்தனர்.

இதில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் அழகு கலை நிலையத்திற்குள் நுழைந்து கொலைக்குப் பிறகு எந்தத் தயக்கமும் இன்றி வெளியே வருவதும் அருகில் இருந்த சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய அச்சிர நெத்ருவான் என்ற இளைஞரே ஆவார்.

குறித்த அழகு கலை நிலையத்தின் உரிமையாளரே துப்பாக்கிதாரியின் இலக்காகியிருக்கலாம் என காவல் துறையினர்  சந்தேகிக்கின்றனர். எனினும் அங்கு முடி வெட்டும் மற்றொரு ஊழியரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

மேலும், அழகு கலை நிலையத்தின் உரிமையாளர், கடந்த தினம் கம்பஹா நீதிமன்றத்திற்கு முன்பாக படுகொலை செய்யப்பட்ட பஸ்பொட்டா என்ற நபரின் மரணத்தில் சந்தேகிக்கப்படும் பத்மே என்ற நபருக்கு நெருக்கமானவர் எனவும் தெரியவந்துள்ளது.

கணேமுல்ல சஞ்சீவ என்ற பாதாள உலக குழு உறுப்பினரின் ஆதரவாளரான பஸ்பொட்டாவின் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் சஞ்சீவ இந்த கொலையை முன்னெடுத்திருக்க கூடும் என காவல் துறையினர்  சந்தேகிக்கின்றனர்.

எனினும், அழகு கலை நிலைய உரிமையாளர் அங்கு இல்லாததால், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் அங்கிருந்த இளைஞனை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இளைஞன் மீது எந்தவிதமான குற்ற வழக்குகளும் இல்லை எனகாவல் துறையினர் தெரிவித்தனர்.