உதயநிதி ஸ்டாலின் கைது

சனி நவம்பர் 21, 2020

ஜனநாயக உரிமை, கருத்துரிமை ஆகியவற்றைக் கருத்தில் வைத்து பிரசாரப் பயணத்துக்கான முறையான அனுமதியை அரசு வழங்க வேண்டும். முறையான அனுமதி தர அரசும், காவல் துறையும் மறுக்கப்படுமானால், தடையை மீறி கட்சியின் பிரசாரப் பயணம் தொடரும் என துரைமுருகன் எச்சரித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் கைதைக் கண்டித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு ள்ளதாவது;

“தமிழகம் மீட்போம் என்ற கொள்கைப் பிரகடனத்துடன் 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற பிரசாரப் பயணத்தை திமுக இன்று முதல் தொடங்கி இருக்கிறது. இது தொடர்பான முறையான அறிவிப்பை கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அறிவிப்பு செய்துள்ளார்.

இதன் தொடக்கமாக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், இன்று மதியம் தனது பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார். பிரசாரப் பயணத்தை, தமிழ்ச் சமுதாயத்தின் விடியலுக்கு வித்திட்ட தமிழ் ஒளிவிளக்காம் கருணாநிதி பிறந்த திருக்குவளை வீட்டில் இருந்து கால் பதித்து அங்கிருந்து தொடங்கினார்.

பயணம் தொடங்கிய இடத்திலும் வழியெங்கும் குவிந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிமுக அரசு, காவல் துறையின்  துணையோடு இந்தப் பயணத்தை நசுக்க முடிவெடுத்துள்ளது.

உதயநிதி கைது செய்யப்பட்டுள்ளார். இன்று முதல் டிசம்பர் முதலாம்  திகதி வரை நடக்க இருந்த முதற்கட்டப் பயணத்தைத் தொடங்கிய இடத்தி லேயே மறித்த அதிமுக அரசின் அராஜகப் போக்குக்கு எனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நித்தமும் ஒரு மாவட்டத்துக்குப் போய், அரசு நிகழ்ச்சி, ஆய்வு என்ற போர்வையில் எதிர்க்கட்சிகளைத் தரம் தாழ்ந்து விமர்சித்து தனது அரசியல் பிரசாரத்தைச் செய்து வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

பேட்டிகள் கொடுப்பது, கலந்தாலோசனைகள் செய்வது என்பதை அவரோ, அமைச்சர்களோ, அவர்களது கட்சியோ நிறுத்தவில்லை. ஆனால், திமுக நடத்தும் கூட்டங்களாக இருந்தால் அதற்கு அனுமதி மறுப்பதை வழக்கமாக வைத்துள்ளது அரசு.

ஆளுநர் மாளிகை நோக்கிய மகளிர் பேரணி யைத் தடுத்து, மகளிரணிச் செயலாளர் கனிமொழி உள்ளிட்டோரைக் கைது செய்தது இந்த அரசு. ஆனால், அமைச்சர்களுக்கோ, ஆளும் கட்சிக்கோ எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை.இளைஞரணிச் செயலாளர் உதயநிதி கைது செய்யப்பட்டாலும்  இந்தப் பிரசாரப் பயணம் நிற்காது".இவ்வாறு துரைமுருகன் தெரிவித்துள்ளார்.